Saturday, December 12, 2015

அல்லல்படும் மக்கள்மீது திணிக்கப்படும் நிவாரண அரசியல்

வந்தாரை வரவேற்ற தமிழத்தின் தலை நகரான சென்னை மக்கள் உணவுக்கும் குடிநீருக்கும் கையேந்தும்   நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.  சென்னை இப்போது சேறும் சகதியுமாக... மலை மலையான குப்பையாக மாறியிருக்கிறது. வரலாறு காணாத அளவிற்கு பெய்த பெருமழையால் பாதிக்கப்படட சென்னை மாநகரில் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்று என காத்திருக்கின்றனர் பொதுமக்கள். டிசம்பர் 2 ஆம்திகதி  காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 340 மில்லிமீற்ற  மழை சென்னையில் பெய்துள்ளது. பொதுவாக டிசம்பர் முழுவதிலுமே 250 மிமீ மழைதான் பெய்யும். இதுதான் உண்மை நிலவரம்.
 டிசம்பர் 1 ஆம்திகதி  செவ்வாய்கிழமை காலை 8.30 தொடங்கி புதன்கிழமை 8.30 மணிவரை காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் மட்டும் 494.20 மி.மீ மழை பெய்து மக்களை நடுங்க வைத்தது. திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 475 மி.மீ மழை பெய்து கதிகலங்க வைத்தது
 நவம்பர் மாதம் பெய்த மழையில் செம்பரம்பாக்கம் ஏற்கனவே நிரம்பியிருக்க டிசம்பர் 1 ஆம் திகதி பெய்த மழை நீரால் ஏரி உடையாமல் இருக்க அனைத்து நீரும் அப்படியே அடையாறில் திறந்து விடப்பட்டது. இந்த வெள்ளத்துடன் சென்னையில் பெய்த மழை வெள்ளமும் இணைந்து 80000 கனஅடி நீராக பெருக்கெடுத்து சென்னை நகருக்குள் புகுந்து கபளீகரம் செய்தது
  வெள்ளம் வடிந்த பின்னர் எஞ்சியிருப்பது சேறும் சகதியும், குப்பைகளும்தான். வீடுகளில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் வீதியில் இறைக்கப்பட்டிருக்கிறது. வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு தவிக்கிறார்கள் அங்கு வசித்தவர்கள்
 வெள்ளத்தில் இருந்து தப்பிக்க உயிரை கையில் பிடித்துக்கொண்டு கட்டிய துணியோடு வெளியேறிய மக்கள் வெள்ளம் வடிந்த பின்னர் தாங்கள் வசித்த பகுதிகளுக்கு வந்திருக்கிறார்கள். இதுநாள் வரை வசித்த வீட்டிற்குள் சேற்றை அள்ளி போட்டுவிட்டு போயிருக்கிறது வெள்ளநீர்.

உ ணவுக்காகவும், குடிநீருக்காகவும், பாலிற்காகவும் மக்களை கையேந்தும் நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது இயற்கை ஆடிய கோரத்தாண்டவம்.

தொலைகாட்சி  பெட்டி , குளிர்சாதனப்பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டிய வீடு சேதமடைந்துள்ளதை விவரிக்க முடியாத வேதனையில் ஆழ்ந்துள்ளனர் மக்கள்.
 மழை வெள்ளத்திற்கு மிஞ்சியப் பொருட்கள் பழுதாகி உள்ளதால் அவற்றை உபயோகிக்க முடியாத நிலையே இருக்கிறது. பொருட்சேதம், நிறைந்துள்ள குப்பைகள் ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது இங்குள்ள மக்களுக்கு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என இத்தனையையும் மீறி இயல்பு நிலைக்கு வர மக்கள் முயற்சித்தாலும், அவர்கள் அனுபவிக்கும் துயரம் சொல்லில் அடங்காதவையாக இருக்கிறது.
 
 இந்த பெருவெள்ளம் ஒருவகையில் மக்களை ஒன்றிணைத்துள்ளது என்றே சொல்லலாம். வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து தவித்து வருவோருக்கு சக மனிதர்களின் ஆறுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.   
மழை வெள்ளம் என்பன வழமையானவைதான்.ஒரு சில சிறிய சேதங்களுடன் வெள்ளம்  வடிந்துவிடும் என எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாந்து போனார்கள்.அவர்கள் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் அனைத்தும் கண்முன்னாலேயே அடித்துச் செல்லப்பட்டன. மழை,வெள்ளம,சுறாவளி,சுனாமி ,பூகம்பம்  போன்ற இயற்கை அனந‌ர்த்தங்களை மனிதனால் வெல்ல முடியாது. அவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை அதிலிருந்து  மீட்க முடியும்.மக்களைப் பாதுகாத்து அவர்களுக்கு உதவும் வரலாற்றுக்கடமையை செய்வதற்கு தமிழக அரசு தவறிவிட்டது.
மழை வெள்ளத்தால்  சென்னை மக்கள் அவதிப்படும்போது  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில்  ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார்.எதிர்க் கட்சிகளின் கண்டனக் கணைகளுக்குப் பின்னர்தான் அவர் சென்னைக்குத் திரும்பினார். ஜெயலலிதா சென்னைக்கு வந்தபின்னரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.சமூக ஆர்வலர்களும் தன்னார்வத் தொண்டர்களும் பாதிக்கப்பட்டமக்களைக் காப்பாற்ற களம் இறங்கினார்கள். அரசின் மீது மக்களின்  கோபம் திசை திரும்பியது. சமூக வலைத்தளங்களின் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற உதவின.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழகில் ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அதனை எதிர்த்து வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ இரண்டாம் கட்டத் தலைவர்களும் தொண்டர்களும் பேசாமடந்தைகளாக இருந்தனர். ஜெயலலிதாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதனால் அவர்கள் வாளாவிருந்தனர் பாதிக்கப்பட்டம் மக்களின் அவலக்குரலும் எதிர்க்கட்சிகளின் கண்டனங்களும் அரசின் காதுகளில் விளவில்லை.
சென்னையின் வெள்ளப்  பாதிப்பபைப் பார்வையிட மோடி வருகிறார் என்ற செய்தி பரவியதும் ஜெயலலிதா உசாரானார். ஹெலிக்கொப்டரில் ஏறி பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டா.. அதன்பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ புறப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடி ஏற்கெனவே  வழங்கிய உதவித்தொகையுடன் மேலும் ஆயிரம் கோடி ருபா வழங்க உத்தரவிட்டார். வழமைபோல் அத்  தொகை காணாது என தமிழக அரசு கூறியது.

. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை கைப்பற்றிய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அவற்றின் மீது ஜெயலலிதாவின் படத்தை ஓட்டினார்கள். நிவாரணம் உதவி என்பனவற்றை   ஜெயலலிதாதான் வழங்கினார் என்பதை மக்கள் அறிய  வேண்டும் என்பதற்காக இச்செயல் நடைபெற்றது. தன்னார்வலத் தொண்டர்கள் கொண்டுவந்த பொருட்களை அடித்துப் பறிப்பதிலும் அவர்கள் குறியாக இந்தனர்.  . தாமும்உதவி  செய்யாது.  உதவி செய்பவர்களையும் செய்யவிடாது தடுக்கும் அரசாங்கத்தின்  மீது மக்களின் கோபம்   திரும்பியது இந்த இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது காயை நகர்த்தியது.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரு இந்த இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உதவி செய்ய களம் இறங்கியது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஸ்ராலின் சென்றார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களும் தொண்டர்களும் வெள்ளத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்தனர். கருணாநிதி, ஸ்ராலின் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட பொதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன கலைஞர்,சன் ஆகிய தொலைக்காட்சிகளின் பாதிக்கப்பட்ட மக்கள் தமது அவலங்களை வெளிப்படுத்தினார்கள். ஜெயா தொலைக் காட்சியில் அரசாங்கம் உதவி செய்வதாக காட்டப்பட்டது
 ராகுல் காந்தி வெள்ளத்தில் இறங்கி மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தமிழாக அரசியல் தலைவர்கள் அனைவரும் தமது தொண்டர்களுடன் மக்களுக்கு உதவினார்கள் கருணாநிதியும் தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாது பாதிக்கப்பட்ட மக்களைச்  சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால்,ஜெயலலிதா  மக்களைச்  சந்திக்கவில்லை. அரசியல் கட்சியை வழி நடத்துபவர் வழி நடத்துபவர். தமிழக முதல்வர் என்ற தகுதிகளுடன் இருக்கும் ஜெயலலிதா  பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காதது மிகப் பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது  

தமிழக மக்களின் நலனும் தமிழக அரசின் நலனும் வெவ்வேறானவை மட்டுமல்ல எதிரெதிரானவை என்பதை அதிகார வர்க்கத்தின் இந்தப் போக்கு பளிச்சென்று நமக்கு உணர்த்தியிருக்கிறது. மக்கள் நம்பி வாக்களித்து தேர்ந்தெடுத்த ஓர் அரசு நம் கண் முன்னால் அவர்களைக் கைவிட்டிருக்கிறது. மட்டுமின்றி, மக்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இடர்பாடுகளிலும் இக்கட்டுகளிலும் சிக்கிச் சீரழிந்துள்ள மக்களை மீட்பதும் அவர்களை மீள்குடியமர்த்து வதும் அவர்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தருவதும் ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும். இந்தக் கடமையைச் செய்யத் தவறிவிட்டது தமிழக அரசு. சந்தேகமில்லாமல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோல்வி இது. இந்தத் தோல்வியின் கசப்பால்தான் அமைச்சர்களும் அதிமுக அடிப்பொடிகளும் மெய்யான அக்கறையுடன் நிவாரண உதவிகள் அளித்துவருபவர்கள்மீது பொறாமையுடன் பாய்கிறார்கள்.   தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி கடிதம் எழுதியுள்ளார். அதே நேரத்தில் தமிழகத்துக்கு முதன் முதலாக வெள்ள நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு ஜெயலலிதா நன்றி கடிதம் அனுப்பவில்லை. இதுகுறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஜெ. அனுப்பிய கடிதம்: கடந்த 3-ந்தேதி நீங்கள் எழுதிய கடிதத்திற்கும், தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாங்கள் அளித்த 5 கோடி ரூபாய் நன்கொடைக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 டிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அனுப்பிய கடிதத்தில் ஜெ கூறியிருப்பதாவது: கடந்த 4-ந்தேதி நீங்கள் எழுதிய கடிதத்திற்கும், ஒடிஷா முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து 5 கோடி ரூபாய் தர முன்வந்ததற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மழையினால் ஏற்பட்ட பேரழிவின் அளவு மிக அதிகமானது. இந்த இயற்கை இடர்பாட்டின் விளைவுகளை போக்க எனது அரசாங்கம் அயராது பணியாற்றி வருகிறது. உங்களின் அக்கறைக்கும், நல்வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார். அதே நேரத்தில் கர்நாடகாவின் நிதி உதவியை வாங்க தமிழக அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அம்மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு ஜெயலலிதா நன்றி கடிதம் அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது.
கருணாநிதியின்  ஆட்சியில் 2008ஆம் ஆண்டு பெருமழை பெய்த போது   ஜெயலலிதா விடுத்த அறிக்கை ஒன்றில்,  திராவிட முன்னேற்றக் கழக அரசைக் கடுமையாகக் கண்டித்திருந்தார். அரசாங்கம்  அறிவித்திருந்த சலுகைகள் போதாது என்றும் கூறியிருந்தார்  
தமிழாக அமைசசர்களான செல்லூர்  ராஜு, நந்தம் விஸ்வநாதன் கூகுல இந்திரா ஆகியோர் ஜெயலலயொதாவின் தொகுதிக்கு சென்ற போது கோபமுற்ற மக்கள் அதம்து அதிருப்தியை வெளிப்படுத்தினர்.   காரில் இருந்து இறங்காது குசலம் விசாரித்தவர்களை மக்கள் வற்புறுத்தி இறங்க ச்  செய்தனர் 

 சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஐ.டி., துறைக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு 20 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. யமஹா,  போட்,என்பீல்ட் ஆகிய வாகன நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.100 கோடி ரூபா வரையான் உணவுப்பொருட்கள்  சேதமடைந்துள்ளன.  
பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, கன்னியாகுமரி மாவட்ட இலங்கை அகதிகள் பணமும் நிவாரணப்பொருட்களும் வழங்கினர்.

சென்னையில் பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கன்னியாகுமரி மாவட்டம்  பெருமாள்புரம், பழவிளை, ஞயுறான்விளை மற்றும் கோழிவிளை ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர்.  இப்பகுதியை சார்ந்த இலங்கை அகதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆண், பெண் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் விதம் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான துணிமணிகள், போர்வைகள் மற்றும் 13,370 ரூபாய் காசோலை ஆகியவற்றை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வெள்ள நிவாரண பொது மையத்தில் இன்று வழங்கினர். 

தமிழகத்தில் அகதிகளாய் வாழ்ந்தாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானாக முன்வந்து உதவி செய்த இலங்கை அகதிகளை அரசு அதிகாரிகளும், பொதுமக்களும்  பாராட்டினர்
வெள்ளம் வந்து கொட்டிவிட்டு போன குப்பைப்கிடங்காய் காட்சியளிக்கிறது சென்னை மாநகரம். பல ஆயிரம் தொன்  குப்பைகள் மலையாக குவிந்துள்ளன. இந்த குப்பைகளை அகற்றுவதற்கு   பணியாளர்கள் போதாது என்பதால் பிற மாநகராட்சிகளில் இருந்து ஆயிரக்கணக்கான துப்புறவு பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் தலைநகர் சென்னை வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிபோன சென்னையில் மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. பொதுமக்கள் தற்போது வெள்ளம் வடிய ஆரம்பித்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கடந்த வாரம் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அனைத்து சாலைகளிலும் 2 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் பாதிப்பால், தேங்கிய குப்பைகள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்து கொண்டு சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளன.  ,  
  வெள்ளம் வடிந்த பகுதிகளில் குப்பைகள் மலைபோல குவிந்துள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது. சென்னையில் இப்போதைக்கு உடனடியாக செய்யவேண்டிய முதல்பணி குப்பைகளை அகற்றுவதுதான்.
மலேரியா.எலிக்காய்ச்சல்,டயரியா போன்ற நோய்கள் தாக்கக்ககூடிய அபாயமும் உள்ளது. வெள்ளத்தில் அடித்துச்  செல்லப்பட்ட கால் நடைகள்  ஆங்காங்கே இறந்து துர்நாற்றம் வீசுகின்றன.  இவற்றாலும் நோய்கள் உருவாகும் நிலை உள்ளது.
  கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 5,000 கோடி நிதியுதவி வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்த தமிழக அரசுமறுபுறம் கர்நாடக அரசு அளிக்க முன்வந்த 5 கோடி ரூபாய் நிதியுதவியை பெற முதலில் மறுத்தது. இத்  தகவல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தங்களது உதவி  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு  அறிவித்தது.  மத்திய அரசு அனுப்பிய உணவுப்பொதிகளையும் நிவாரண உதவிகளையும் தமிழாக அரசு உடனடியாக விநியோகிக்க முன்வரவில்லை. தமிழக அரசின் மந்தகதியான நிர்வாகம் மக்களுக்கு  பெரும் சோதனையாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியான வதந்திகள் மக்களை பெரும் பீதிகுள்ளாக்கின. மழை தொடரும் வெள்ளம் அதிகரிக்கும்,நாசா அறிவிப்பு என வெளியான வதந்திகள் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் துன்புறுத்தின.
 தமிழக சட்டமன்றத்  தேர்தலின் போது இந்தப் பாதிப்பின் தாக்கம் அதிகளவில் இருக்கும். கோபத்தில் இருக்கும் மக்களுக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தூரத்தில் இல்லை.
வர்மா 
தமிழ்த்தந்தி
13/12/15

No comments: