Monday, December 28, 2015

தரம்கெட்ட பாடலால் தலை குனிந்த தமிழ் சினிமா

முகவரி தெரியாத ஒருவரை உயரத்தில் தூக்கி வைக்கும் சினிமாவால் அவரை குப்புற  விழுத்தவும் முடியும் என்பதை தமிழ் சினிமாவின் குழப்படிப் பையன்களான சிம்புவும் அனிருத்தும் நிரூபித்துள்ளனர். நல்ல தகவல்களை வெளியிட உதவும் நவீன தொழில் நுட்பம் மிகமோசமான தகவல்களையும் வெளியிட்டு சர்ச்சைகள் தோன்றக் காரணமாகிறது. கவலைதீர்க்கும் மருந்தான  இசையை விரும்பாதவர்கள் யாருமில்லை.கருத்து மிக்க பாடல்களால் ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்த சினிமா காலப்போக்கில் ஆபாசங்களையும் உள்வாங்கத் தொடங்கியது. சில ஆபாசங்களுக்கு அவ்வப்போது எதிர்ப்புகள் வெளிப்படும் பின்னர் அடங்கிவிடும்.  சிம்புவும் அனிருத்தும் வெளியிட்டபாடலுக்கு கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது.
பெண்களை மிக கேவலமாக இழிவுபடுத்தும் சொற்களுடன் இணையத்தில் வெளியான பாடலை சிம்பு எழுதி பாடியதாகவும் அனிருத் இசையமைத்ததாகவும் தெரியவந்ததால் பெண்களும் சமூக ஆர்வலர்க்களும் போர்க்கொடி தூக்கினர். என்னா..........க்கு லவ் பண்றோம் என்னா..........க்கு லவ் பண்றோம் என ஆரம்பிக்கும் அப்பாடலில் என்னா  எனும் வார்த்தைக்குப் பின்னால் பெண்களை இழிவுபடுத்தும் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தை சேர்க்கப்பட்டிருந்தது.அந்தச் சொல்லை மீறி பீப் இசை  ஒலித்தது. பீப் என்ற ஒலியையும் தாண்டி அச்சொல் என்ன என்பதை இலகுவாக உணரமுடிந்தது.யூரியூப்பில் வெளியான பாடல் இணையம் வட்ஸ் அப் மூலம் வேகமாக பரவியது.
 பாட்டில் ஆபாசம் இருந்தால் அதனைக் கேட்கவேண்டாம் என சிம்பு அலட்சியமாகப் பதிலளித்தார். ஆபாசப்பாடலின் எதிர்ப்பு அலையை தெரிந்து  கொண்ட சிம்பு அதனை தான் எழுதவில்லை என்றார். பின்னர் அது தனது  போனில் இருந்தது தனக்கு எதிரான யாரோ ஒருவர் திருடி வெளியிடுவிட்டார்  என்றார். சிம்புவின் வார்த்தைகளை யாரும் நம்பவில்லை. அனிருத் கனடாவில் இருந்தபடி எனக்கும் அந்தப் பாடலுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. நான் இசையமைக்கவில்லை என அறிவித்தார். .
,சென்னை,திருத்துறைப்பூண்டி  ,கோவை ,சேலம் ஆகிய மாவட்டங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.சென்னையில் சிம்புவின் வீட்டின் முன்னால் போராட்டம் நடைபெற்றது. சிம்புவுக்கும் அனிருத்துக்கும் கோவை பொலிஸ் நிலையத்திலிருந்து அழைப்பாணை அனுப்பபட்டது. அனிருத்  கனடாவில் இருந்து நாடு திரும்பியதும் ஆஜராவார் எனத்தெரிவிக்கப்பட்டது. சிம்பு கால அவகாசம் கேட்டிருந்தார்.
சிம்புவை கதாநாயகனாக்குவதற்கு அவரது தந்தை ரி.ராஜேந்தர் மிகுந்த சிரமப்பட்டார். சிம்பு நடிப்பில் கவனம் செலுத்தாது வேறு பாதையில் சென்றார். சிம்புவுடன் நடிக்கும் கதாநாயகிகள் கிசுகிசுவில் சிக்குவார்கள். சிம்புவுடன் பல நடிகைகளின் பெயர் கிசுகிசுக்கப்பட்டது. சிம்புவுக்கும் நடிகைக்கும் காதல் என பரபரப்பான செய்திகள் வெளியாகின. இவை எல்லாம் சிம்புக்கு பெருமையாக இருந்தன.தகப்பன் மறுப்பறிக்கை கொடுப்பார். தனது மகன் எதுவித தப்பு தன்டாவும் செய்யவில்லை. அவன் அப்பாவி என உருகுவார்.
சிம்பு நயனதாரா காதல் விவகாரம் ஒருகாலத்தில் உச்சக்கட்டத்தில் இருந்தது. இருவரும் பிரிந்தபின் வெளியான புகைப்படங்கள் நயனதாராவை சங்கடத்தில் ஆழ்த்தின. சிம்புவும் நயனதாராவும்  முத்தமிடும் புகைப்படங்கள் பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும்  முதலிடம் பிடித்தன. இதனால் நயனதாரா சிறிதுகாலம் ஒதுங்கி இருந்தார். தமிழ் சினிமாவை மறந்திருந்தார்.  ராமராஜ்யம் படத்தில் நயனதாரா சீதையாக நடித்தபோது ராம பக்தர்கள் எதிர்த்தார்கள். அந்த எதிர்ப்புகளையும் மீறி அப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். சிவாஜி,எம்.ஜி.ஆர்;கமல்,ரஜினி;விஜய்,அஜித்;தனுஷ்.சிம்பு  என்ற போட்டி  நடிகர்கள் மத்தியில் நிலவியது. மற்றைய நடிகர்கள் தம்முடன் போட்டியிட்டவர்களுக்கு   சவால் விடுத்தனர். சிம்புவின் விளையாட்டு புத்தியால் தனுஷ் முன்னேறிவிட்டார்.     
கொலைவெறி பாடலின் மூலம் ஒரு இரவில் உலகப் புகழ் பெற்றவர் அனிருத்.தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய  3 எனும் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர்  ரஜினியின் மைத்துனரான ரவிச்சந்திரனின் மகன்  அனிருத்.ரஜினி, தனுஷ் ஆகியோரின் செல்வாக்கு அனிருத்துக்கு பக்கபலமாக இருந்தது.  தனுஷின்  ஆஸ்தான  இசையமைப்பாளரானார் அனிருத். குறைந்த வயது பாடசாலைப் பையன் போன்ற தோற்றம் கொண்ட அனிருத் வயதுக்கு மீறிய செயல்களால் சிக்கலின் சிக்கினார். ஆபாச வார்த்தகள் அடங்கிய ஆங்கிலப்பாடலை அனிருத் வெளியிட்டதால் பொலிஸில் முறைப்பாடுசெய்யப்பட்டது. தகப்பன் ஓடிச்சென்று மன்னிப்புக் கேட்டதால் அன்று தப்பிவிட்டார். தன்னைவிட வயது கூடிய நடிகையான அன்ரியாவை அனிருத் முத்தமிடும் படங்கள் வெளியானதால் பால்மணம் மாறாத சிறுவன் என்ற போர்வை விலகியது. ஆபாசப் பாடலின் எதிர் வினையால் அனிருத்தின் கையில் இருந்த  படங்கள்  கைவிட்டுப்போயின..
எதிர்நீச்சல்,மாங்கராத்தே,வணக்கம் சென்னை,வேலை இல்லா பட்டதாரி,கத்தி,காக்கிசட்டை,நானும் ரவுடிதான்,வீதாலம் போன்ற படங்கள் அனிருத்துக்கு புகழைத்தேடிக் கொடுத்தன.அறிமுகமான நான்கு வருடங்களில் விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்கலின் படங்களுக்கு இசை அமைத்தார். அனிருத்தின் கையில் இருந்த தங்கமகன் வெளியாகிவிட்டது. கையில் வேறு படம் அனிருத்தின் கையில் இல்லை.அனிருத்துக்கு எதிராக சகலரும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் அனிருத்தை வளர்த்துவிட்ட தனுஷ் மெளனமாக இருக்கிறார்
இசையைப்பற்றிய அறிவு உள்ளவர்களே ஆரம்பகாலத்தில் பாடல்களை எழுதினார்கள். அன்றைய காலத்தில் பாடல்களை சங்கீதம் என்றே குறிப்பிட்டனர்.  50  சங்கீதம் உள்ள திரைப்படம் என்றுதான் விளம்பரப்படுத்தினார்கள். பாடத்தெரிந்தவர்கள் தான் அன்று நடித்தார்கள். வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டபோது பேசத் தெரிந்தவர்கள் நடிகர்களானார்கள்.  நடிகர்களின் செல்வாக்கு உயர்ந்தபோது அவர்களே கட்டைக்குரலில் பாடினார்கள். பின்னர் பாட்டு எழுத ஆரம்பித்தனர். அப்போது பாடலின் தரம் குறையத்தொடங்கியது.
தரமற்ற பாடல்களை விளம்பரப்படுத்திய பத்திரிகைகள், ஒலிபரப்பிய வானொலிகள், ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் அவற்றை மக்களின் மத்தியில் கொண்டு சென்றன. அருமயான பாடல்,அற்புதமான பாடல் அட்டகாசமான பாடல் என உசுப்பேத்தி அதேரகமான பாடல்கள் வெளியாக காரணமாகின. 
ஆபாசப்பாடலின் உச்சக்கட்ட எதிர்ப்பினால் அப்பாடலை தான் எழுதியதாகவும் அனிருத்துக்கு இதில் சம்பந்தம் இல்லையென்றும் சிம்பு அறிவித்துள்ளார்.  இந்தப்பிரச்சினையில் இருந்து எப்படி வெளிவருவதெனத் தெரியாது சிம்பு தவிக்கிறார். சிம்புவின் திரைஉலக வாழ்க்கையை பீப் பாடல் குழிதோண்டிப் புதைத்துவிட்டது. இதிலிருந்து சிம்பு வெளிவர வேண்டும் என அவரது தகப்பன் தவியாய் தவிக்கிறார்.
பீப் பாடலுக்குக்கும் அனிருத்துக்கும் சம்பந்தம் இல்லை என சிம்பு கூறினாலும் பொலிஸ் அவரை விடுவதாக இல்லை. கைது செய்யப்படுவதில் இருந்து தப்புவதற்காக நீதிமன்றத்தை நாட சிம்பு முடிவு செய்துள்ளார்.
வக்கிரம்,ஆபாசம் நிரந்த பாடல்களால் தமிழ் சினிமா தரம் தாழ்ந்துள்ளது.ஆபாசப்பாடல்களுக்கு ஒரு முடிவு கட்டினால் தமிழ் சினிமாவின் தரம் உயரும்.

ரமணி

 தமிழ்த்தந்தி
27.12.15

No comments: