Saturday, December 5, 2015

நீதிமன்றத் தீர்ப்புக்கு காத்திருக்கும் தலைவர்கள்


  
இந்திய அரசியலும் ஊழலும் பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்துள்ளன. ஊழலற்ற அரசாங்கத்தை  அமைக்கப்போவதாக மேடைதோறும்  தொண்டை கிழியக்கத்தும் தலைவர்கள் தேர்தல் காலத்தில் அமைதியாகிவிடுவார்கள்.  வேட்பாளர் பட்டியலில் ஊழல் செய்தவர்களும் கிரிமினல்களும் சுலபமாக இடம் பிடித்து விடுவார்கள். அவர்களின் செல்வாக்குக்கு முன்னால் நேர்மையானவர்களின் செல்வாக்கு செல்லாக்  காசாகிவிடும்.
ராஜீவ் காந்திக்கு எதிரான  போபஸ்பீரங்கி ஊழல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை தகர்த்தெறிந்தது. பின்னாளில் நடைபெற்ற விசாரணையில் ஊழலை நிரூபிக்க முடியவில்லை. கார்க்கில் போரின் வெற்றிக்கு போபஸ்பீரங்கி பெரும் பங்கு வகித்ததனால் காங்கிரஸ் கட்சி பெருமைப்பட்டது. மாட்டுத் தீவன ஊழல்,நிலக்கரி ஊழல், மயானத்தில் கொட்டகை அமைக்க ஊழல்,கலர் ரீவி ஊழல் என மத்திய அரசும் மாநில அரசுகளும் ஊழலை பங்கு போட்டுள்ளன. ஜெயலலிதாவைப் போன்றே மாயாவதி,முலாயம் சிங் யாதவ் ஆகியோரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழகில் சிக்கி உள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு எதிராக  சுமார் 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சில வழக்குகளில் எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டார். கலர் தொலைக்காட்சி ஊழல் வழகில் தண்டனை பெற்று மேன்முறையீட்டில் விடுதலையானார்.  வருமானத்துக்கு அதிகமான சொத்துச் சேர்த்த வழகில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு ஆண்டுகால சிறைத் தண்டனையும்  100  கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. மேன் முறையீட்டில் ஜெயலலிதா நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிராக அப்பீல் செய்யப்பட்டது.  ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிரான  அப்பீல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்குமுன் தீர்ப்பு வெளிவர  வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் இந்தத் தீர்ப்பிலேதான் அடங்கி உள்ளது.
நாடாளுமன்ற,சட்டசபை உறுப்பினர்கள்ளுக்கு  எதிரான   வழக்கில் அவர்களை குற்றவாளி எனத்தீர்ப்பளிக்கப்பட்டால் மேன் முறையீட்டுத் தீர்ப்பு வரும் வரை அவர்கள் பதவியில் இருக்க முடியும் பதவி பறிபோகாது. இதன் காரணமாக குற்றவாளி  என  நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட  பலர் பதவியில் இருந்து தமது அதிகாரத்தை வெளிப்படுத்தினர். ஆனால், உயர்நீதிமன்றம் வழங்கியதீர்ப்பின்  பிரகாரம் குற்ற வழகில் தண்டணை பெற்றவர் உடனடியாக பதவியை இழந்துவிடுவார். ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ்,திராவிட முன்னேற்றக் கழகதைச் சேர்ந்த செல்வகணபதி ஆகியோர் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தனர்.

 நீதியின் முன் குற்றவாளியாக உள்ள லல்லுவின்  செல்வாக்கு பீகாரில் உயர்ந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலில் லல்லுவின் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. பீகார் முதலமைச்சரான நிதீஷ் குமாரின் கட்சியைவிட லல்லுவின் கட்சியிலிருந்து அதிக உறுப்பினர்கள்  வெற்றி பெற்றார்கள்  வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழகில் குற்றவாளி  எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முதல்வர் பதவியும் சட்டசபை உறுப்பினர் பதவியும் உடனதியாகப் பறிக்கப்பட்டது. மேன்முறையீட்டில் ஜெயலலிதா நிரபராதி என தீர்ப்பு வெளியானபின் நடைபெற்ற இடைத்தேர்தலில்  ஜெயலலிதா அமோக  வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் கட்டுப்பணம் இழந்தனர். நீதியின்  முன் குற்றவாளியான லல்லுவையும் ஜெயலலிதாவையும் விசுவாசிகள் தூக்கித் தலையில் வைத்துள்ளனர்.
பகுஜன் கட்சித்தலைவி மாயாவதி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகிய இருவரும் ஜெயலலிதாவைப்  போல சொத்துக் குவிப்பு வழகில் சிக்கி உள்ளனர். மாயாவது,முலாயம்சிங் யாதவ் ஆகியோரின் குடும்பத்தவர்கள் மீதும்  சொத்துக் குவிப்பு வழக்கு பாய்ந்துள்ளது. அவர்களும் விசாரிக்கப்படுகிறார்கள். இவர்கள் மீதான வழகை சி. பி .ஐ விசாரித்து வருகிறது. மிகவிரைவில் சி.பி.ஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும். நீதியின் தீர்ப்புக்காக இருவரும் காத்திருக்கிறார்கள்.
மேற்கு வங்காள சரித்திரத்தில் சாரதா சிட் பண்ட் மோசடி அரசியல்வாதிகளைத் தலைகுனிய வைத்த மிகப்பெரிய மோசடியாகும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைசேசீர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த மூசடிப்றி விசாரித்துவரும் சி.பி.ஐ முதலமைச்சர் மம்தா பானர்ஜியையும் தமது விசாரணை வளையத்தில் வைத்துள்ளது.ஒடிசாவில் ஆட்சிசெய்யும் நவீன் பட்நாயக்கின் அரசும் சாரதா சிட்பண்ட் மோ சடியில் சிக்கி உள்ளது.
இந்திய மத்திய அரசையும், தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக அரசையும் 2ஜி ஊழல் எனும் பிசாசு தூக்கி எறிந்தது.  முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  ஆகியோருக்கு எதிரான 2ஜி வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வழகின் தீர்ப்பு  திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். ராசாவும்,கனிமொழியும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டால் அரசிலே அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிமைப்படுத்தப்படும்.


தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது அவரது வீட்டிலும் சன்தொலைக்காட்சி அலுவலகத்திலும் விதிமுறையை மீறி  தொலைபேசி இணைப்புக்கள் வழ்ங்கப்பட்ட வழக்கில்  அவரை ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக இந்தவழக்கு நோக்கப்படுகிறது. அன்புமணிக்கு எதிராக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கிரிமினல் குற்ற வழக்கை  அவர் எதிர் நோக்கி உள்ளார்.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேயாழ் ஆரம்பிக்கப்பட்ட  இயக்கம் போது மக்களிடம் பலத்த வரவேற்பைப்பெற்றது. அவருடைய தலைமையில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்தனர். அன்றைய மக்களின் எழுசசியால் அரசியல்வாதிகள் கலக்கமடைந்தனர். அன்னா ஹசாரேயின் வலது கரமாக இருந்த கெஜ்ரிவால் அரசியல்வாதியானார். ஆம் ஆத்மி என்ற கட்சியை ஆரம்பித்து டில்லி மாநில முதல்வரானார். அரசிலில் கால் வைத்த கெஜ்ரிவால் சில விட்டுக்குடுப்புகளுடன் ஆட்சி செய்கிறார்.
அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் போது அரசியல் பழிவாங்கல் என்று முதலில் சொல்வார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டதும் மேல் முறையீடு  செய்வார்கள்.  அரசியல்வாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும், குற்றவாளி என்ற  தீர்ப்புகளும் அவர்களுடைய அரசியல் வாழ்கையை  என்றைக்குமே பாதித்ததில்லை.
வர்மா 
தமிழ்த்தந்தி
12/12/15 

No comments: