Friday, December 25, 2015

காணாமல் போனவர்களை கண்டறியமுடியுமா?

இலங்கையின் நடைபெற்ற உள்நாட்டு போரின் வடுக்களை மறைக்க  நேரடியாகவும் மறைமுகமாகவும் பல காரியங்கள் நடைபெற்றுவருகின்றன. யுத்தத்தின் உண்மையான முகத்தை வெளிக்கொணர எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அவ்வப்போது பல தடைகள் போடப்படுகின்றன. மரணம்,இழப்பு,துயரம்,அகதி போன்றன மக்களை வாட்டிவதைக்கின்றன. இவற்றுடன் காணாமல்  போனவர்கள் என்ற புதிய அத்தியாயம் உருவாக்கி உள்ளது. காணாமல்  போனவர்களை கண்டறிய வேண்டும் என்ற உலகின் நெருக்குதலினால் அவர்களைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. 
யாழ் மாவட்டத்தில் கடந்த  11 ஆம், திகதிமுதல் 15 ஆம் திகதிவர இரண்டாம் கட்டமாக  993 பேரின்  சாட்சியங்கள் பதியப்பட்டன. அதிகமானவர்கள் தமது உறவினர்களின் கண்முனாலேயே கொண்டு செல்லப்பட்டனர். ஒருசிலர் தமது உறவுகளை  கூட்டிச் சென்றவரைப்பற்றிய தகவலை தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளனர். காணமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழுவில்  சாட்சியமளித்த்வர்களின் கூற்றுப்படி அவர்கள் காணாமல்  போகவில்லை கடத்தப்பட்டனர் என்பது புலனாகின்றது. யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் சரணடைந்தவர்களும்,கையளிக்கப்பட்டவர்களும் காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளனர்.

  காணாமல் போனவர்களில் சிலர்  இன்னமும் உயிருடன் இருப்பதாகவே அவர்களின் உறவினர்கள் நம்புகின்றனர். காணாமல் போனவரின் படத்தை பத்திரிகையில் பார்த்தேன். தொலைக்காட்சியில் பார்த்தேன் என அவர்களது உறவினர்கள் உறுதியாககூறுகிறார்கள். விடுதலையான சிலர் தமது உறவுகளைக் கண்டதாகவும் சாட்சியமளித்துள்ளனர். காணாமல் போன சிலரை விடுதலை செய்ய பணம் கோரப்பட்டதாகவும் பணம் கொடுத்தும் எதுவித பலனும் இல்லையெனவும் சிலர் சாட்சியமளித்துள்ளனர்.  அப்போது யாழ் மாவட்டத்தில் நிலை கொண்டிருந்த படையினர் மீதே அதிகமானோர் குற்றம் சாட்டியுள்ளனர். 
யாழ்ப்பாணம்,பருத்தித்துறை,சங்கானை,தெல்லிப்பழை ஆகிய இடங்களில்  ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்தது. யாழ்ப்பாணம்,கரவெட்டி,நல்லூர்,மருதங்கேணி,பருத்தித்துறை,சண்டிலிப்பாய்,சங்கானை,உடுவில்,தெல்லிப்பழை ஆகிய இடங்களில் இருந்து 1600 முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்களில் இருந்து 993 பேரின் சாட்சியமே பதிவு செய்யப்பட்டன.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தவர்கள் தன்னிலை மறந்து  உணர்ச்சிவசப்பட்டு சாட்சியமளித்தனர். காணாமல் போனவர்களைக் கண்டறியலாம் என்ற நம்பிக்கை இன்னமும் அவர்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கை ஆணைக்குழுவிடம் இருப்பதாகத்தெரியவில்லை. அரசாங்க உதவிகள் கிடைத்ததா? மரண சான்றிதழ் பெற்றீர்களா? போன்ற  கேள்விகளையே ஆணைக்குழு அவர்களிடம் கேட்டது. எமக்கு அரசாங்கத்தின் உதவிகள் எவையும் வீண்டாம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவலைத்தாருங்கள் . என சாட்சியமளித்தவர்கள் கோரினார்கள்.
 காணாமல் போன யாரையும்   ஜனாதிபதி ஆணைக்குழுவால் இதுவரை கண்டறிய முடியவில்லை. அனுமார் வால் போல் நீண்டு கொண்டிருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் நன்மை உள்ளது. இதனால் பிரயோசனம் இல்லை என்ற பட்டிமன்றமும் ஒருபுறத்தே  நடைபெறுகிறது. ஆணைக்குழுக்கள் அனைத்தும் கண்துடைப்பு நாடகம் என்பது இலங்க வரலாற்றில் எழுதப்பட்ட உண்மை. இந்த உணமையைத் தெரிந்து கொண்டும் ஆணைக்குழுவின் முன்னால் பலர் சாட்சியமளித்து வருகின்றனர்.  எங்கிருந்து எப்பொழுது  காணாமல் போனார்கள் யாரால்  அவர்கள் காணாமல்  போகச்செய்யப்பட்டார்கள் போன்ற விபரங்கள் வெளிச்சத்துக்கு  வந்துள்ளன.  பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களைப்பதிவு  செய்வதுதான் ஆணைக்குழுவின் மிக முக்கியமான கடமை. முடிவு செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இல்லை. அரசாங்கத்துக்கு சில ஆலோசனை வழங்கலாம். அதற்கு மேலால் எதனையும் சாதிக்க முடியாது.
படையினர் மீது அதிகளவு குற்றச் சாட்டுகள் தெரிவிக்கப் பட்டுள்ளன. படையினரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த சிங்களமக்கள் தயாராக இல்லை. அப்படியான் ஒரு நிலைக்கு செல்ல இந்த அரசாங்கத்தால் முடியாது. நல்லாட்சி என்ற பெயரில் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் தமக்குள்ள அதிகாரங்களைப் பங்குபோட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் சகாக்களை சாந்தபடுத்துவதிலேயே நல்லிணக்க அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இலங்கையின் வரலாற்றில் பல ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்த ஆணைக்குழுக்கள் எவையுமே உருப்படியான பயனைத்தரவில்லை. சில ஆணைக்குழுக்கள் பாதியிலேயே காணாமல் போய்விட்டன. சில ஆணைகுழுக்களின் அறிக்கைகளுக்கு என்ன  நடந்ததெனத்தெரியாது. ஆணைக்குழுக்களைக் கண்டுபிடிப்பதற்கு  ஆணைக்குழு அமைக்க  வேண்டிய நிலை உள்ளது.  இந்த நிலையில் காணாமல் போனவர்களைக்  கண்டறியும் ஆணைக்குழு விசாரணை செய்துவருகிறது.
 வானதி
சுடர் ஒளி
டிசம்பர் 23:29/15


No comments: