Wednesday, February 10, 2016

மக்களின் சுதந்திரத்தைத் தேடும் சுதந்திரதினம்.


 சுதந்திர தினம்,குடியரசு தினம் என்பனவற்றை உலக நாடுகள்  கொண்டாடும் போது இப்படி ஒரு நாளை  கொண்டாடமுடியாது இலங்கைத் தமிழ் மக்கள் தவித்தனர். சுதந்திர தினம், குடியரசு தினம் என்பனவற்றை கரி  நாளாக துக்க தினமாக நினைத்த தமிழ் மக்களின் மனதில் சிறு நம்பிக்கை பிறந்துள்ளது. ஆட்சியில் இருக்கும் சிங்கள அரசியல் கட்சியின் அபிமானிகளான தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் இலங்கையின் தேசிய விழாக்களில் பங்கேற்பார்கள். தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழகில் கடைகளை மூடி கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்புத்  தெரிவிப்பார்கள். தேசிய விழாக்களில் கலந்துகொள்பவர்களுக்கு துரோகி என்ற பட்டம் வாழங்கப்படும் 

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டபின் சுதந்திர தினத்தின் கருப்பொருளே  மாறியது. பிரிட்டிஷிடம் இருந்து கிடைத்த சுதந்திரத்தை விட புலிகளை அழித்த தினம்தான் உண்மையான சுதந்திர தினம் என்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியில் பரவியது. சிங்கள மக்களின் மீட்பராக அன்றைய ஜனாதிபதி மஹிந்த கருதப்பட்டார். இலங்கை அரசியலில் யாராலும் வெல்ல முடியாத தலைவர் என்ற பெருமை பெற்றவர் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததனால்  இலங்கை அரசியல் கள நிலவரம் மாற்றமடைந்தது. நல்லிணக்க அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிரான சிங்கள அரசியல் தலைவர்களும் தமிழ் மக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மக்களுக்கு அன்னியமாக உள்ளது. சிங்களம் மட்டும் சட்டம் தமிழ் மக்களிடம் இருந்து சிங்களத்தை தூரவிலக்கி வைத்தது. சிங்கள அரசாங்கங்கள் தமிழ்  மக்கள்மீது அடக்கு முறையைப் பிரயோகித்ததன்  காரணமாக தமிழ் மக்களுக்கும் சிங்கள் மக்களுக்கும் இடைவெளி அதிகரித்தது. இந்த இடைவெளியை குறைப்பதற்கு சிங்களத் தலைமைகள் முயற்சி செயவில்லை. சிங்கள இனவாதத்தில்  குளிர் காய்ந்து ஆட்சியில் இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். நல்லிணக்க அரசாங்கம் த்மிழ் சிங்கள் மக்களுக்கிடையேயான இடைவெளியை  குறைக்க முயற்சி செய்கிறது
.   சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் பாடியது அந்த முயற்சியின் ஆரம்பம்.
இலங்கை சிங்கள மக்களின் நாடு மற்றைய இனங்களுக்கு இங்கு உரிமை இல்லை. சிங்கள அரசாங்கம் கொடுப்பதை வாங்கிக்கொண்டு  வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதே சிங்கள அரசியல்வாதிகளின் நிலைப்பாடு. ஜனாதிபதி மைத்திரி பிரதமர் ரணில் ஆகியோர் தமிழ் மக்களையும்  அரவணைத்துச் செல்ல விரும்புகின்றனர். தமிழில் தேசிய கீதம்   பாடக்கூடாது  என்பதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நிலைப்பாடு. அவருக்கு விசுவாசமான அரசியல்வாதிகளும் இதனையே விரும்புகின்றனர்.

சுதந்திர தின விழாவில் தமிழில்  தேசிய கீதம் பாடப்பட்டதை அதிகமான தமிழ் மக்கள் வரவேற்றுள்ளனர். நல்லிணக்க அரசாங்கத்தின்இந்த  சாதக  சமிக்ஞையை சிங்கள மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.  தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாக இருப்பதை விரும்பாத சிலர் இதனை கடுமையாக எதிர்க்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு  விசுவாசமான பொது எதிரணி சுதந்திர தின வைபவத்தைப் புறக்கணித்தது.

புலிகளை அழித்து சிங்கள் மக்களின் மனதில் இடம் பிடித்த முன்னாள் ஜனாதிபதி     மஹிந்த ராஜபக்க்ஷ‌ சுதந்திர தின வைபவத்தைப் பகிஷ்கரித்தார்.  2009  ஆண்டு புலிகள் அழிக்கப்பட்டபின்னர் நடைபெற்ற சுதந்திர தின  விழாக்கள் அனைத்தும் இராணுவத்தின் பலத்தை வெளிக்காட்டும் பெரு விழாவாக நடைபெற்றன. சுதந்திர தினத்தைப் பார்க்கச்சென்றவர்கள் கடுமையான  பரிசோதனையின் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தலை நகரில் இருந்த தமிழ் மக்கள்  வீட்டில் இருந்து தொலைகாட்சியில் சுதந்திர தினத்தைக்  கண்டு ரசித்தனர்.

 திருகோணமலை,வவுனியா,மன்னர்,மட்டக்களப்பு,முல்லைத்தீவு ஆகிய இடங்களில் சுதந்திரதினத்தன்று எதிர்ப்புத்தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர். காணாமல்போனோர்,கடத்தபட்டவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் ஆகியோரின்  உறவினர்கள், மீள்குடியேற்றப்படாதோர் ,மீனவர்கள்,சம்பூர் அனல் மின் நிலையத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். கடந்த கலங்களைப் போன்று சுதந்திர தினத்துக்கு பெரியளவான எதிப்பு தமிழ் பகுதிகளில் இருக்கவில்லை. யாழ்ப்பாண  பல்கலைக் கழகத்தில் கறுப்புக்கொடி கட்டப்பட்டிருந்தது.  

கொழும்பில் நடைபெற்ற சுதந்திர தின வைபவத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டது. தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு  மாவட்டங்களில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது.  தமிழில் தேசிய கீதம் பட வேண்டும் என்ற ஆர்வம்  அங்குள்ள அரசாங்க உத்தியோகத்தர்களிடம் இருக்கவில்லை.

எதிர்க் கட்சித்தலைவர் ஆர்.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரனும் கடந்த ஆண்டைப்போல  இந்த வருடமும் சுதந்திர தின விழாவில் கலந்து  கொண்டனர். வழமை போன்று அவர்களுக்கு எதிரான விமர்சனங்களும் கூடவே முன்னெழுந்தன.

சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக சிறைக் கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர்.  தமிழ்அரசியல் கைத்திகளை விடுதலை செய்வதற்கு சட்டத்திளிடம் இல்லை. ஆனால், சிறு குற்றம் செய்து சிறைத்தண்டனை பெற்றவர்கள் சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக வெளியில் செல்வது எழுதப்படாத சட்டமாக உள்ளது. பாரிய குற்றம் செய்யாதவர்கள் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள்.  சுதந்திர தினத்தன்று மன்னிக்கப்பட்டு விடுதலையானவர்கள் திருந்தி வாழவேண்டும். அவர்கள்  சமூக நிரோட்டத்தில் கலந்து நற்பிரஜையாக வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகின்றது.
சுதந்திர தினத்தன்று விடுதலையானவர்கள்
 அனைவரும் சமூகத்தில் நற்பிரஜையாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர்  அவர்களில் எத்தனை பேர் குற்றம் செய்கிறார்கள் என்ற விபரம் வெளிவருவதில்லை.
நல்லிணக்க அராங்கத்தின் இன்றைய சுதந்திர தினம் சிறிது முன்னேற்றத்தைத் தந்துள்ளது. இந்த நம்பிக்கை ஒளியை பிரகாசமடையச்செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.
வானதி
சுடர் ஒளி

பெப்ரவரி10,16/16

No comments: