Saturday, June 16, 2018

ஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்  நடந்த 3 ஆவது லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம் பிடித்த மொராக்கோவை எதிர்த்து  ஈரான் விளையாடியது. வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் இரு நாடுகளும் களம் இறங்கின. இதே பிரிவில் உள்ள போத்துகல்,பெல்ஜியம் ஆகியவற்றுக்கி எதிரான போட்டிகளில் வெற்றி கிடைக்காது என்பதால் ஒரு வெற்றியுடன் நாடு திரும்பஇரு அணிகளும் எண்ணியிருந்தன. கோலுக்குப் போகும் பந்தைத் தடுப்பதாக நினைத்து தலையைக் கொடுத்த மொராக்கோ வீரரின் செயலால்  ஈரானுக்கு ஒரு கோல் கிடைக்க 1 - 0 கோல்கனக்கில் ஈரான் வெற்றி பெற்றது.

20 ஆண்டுகளுக்கு பிறகு உலககிண்ணப் போட்டியில் விளையாடும்    மொராக்கோ  இந்த ஆட்டத்தில் வெகுவாக ஆதிக்கம் செலுத்தியது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் சரி (64 சதவீதம்)இ ஷாட் அடிப்பதிலும் சரி (13 ஷாட்) ஈரானை விட மொராக்கோவின் கை ஓங்கி நின்றது. கோல் கம்பத்தை நெருங்குவதும் பிறகு கோட்டை விடுவதுமாக ஆட்டத்தின் போக்கு அமைந்தது. மொராக்கோ முன்னணி வீரர் ஹகிம் ஜியேச் அடித்த  அருமையான ஒரு ஷாட்டை ஈரான் கோல் கீப்பர் அலிரெஜா பிரன்வன்ட் பாய்ந்து விழுந்து தடுத்து தன்னை கடந்து செல்லாமல் பார்த்துக் கொண்டார்.

இரு அணிகளிலும் சில வீரர்கள் அவ்வப்போது  முரட்டுத்தனமாக விளையாடின.  குறிப்பாக  இரான் வீரர்கள் மூன்று பேருக்கும்  மொராக்கோ வீரர் ஒருவருக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இரு அணிகளிலும் சில வீரர்கள் காயத்தால் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

 போட்டி முழுவதும் மொராக்கோவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 2 ஆவது  நிமிடம் தொடங்கி 90 ஆவது நிமிடம் வரை மொராக்கோ  தாகுதல் நடத்தியது. அந்தத் தாகுதலுக்கு பதிலளிப்பதிலேயே ஈரான் நேரத்திச் செலவிட்டது. 13 முறை கோல் அடிக்கும் சந்தர்ப்பம் மொராக்கோவுக்குக் கிடைத்தது. அதில் மூன்று முறை பெனால்ரி பொக்ஸினுள் கிடைத்த சந்தர்ப்பத்தை வீண்ணடித்தது. 
 
இரண்டாம் பாதியிலும்  தொடர்ந்து கோல் அடிக்கப் போராடிக்கொண்டிருந்தது மொராக்கோ. பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும்கூட இரான்  கோல் பாக்ஸ் வரை முன்னேறுவதும் பிறகு பந்தை இழப்பதும்  மீண்டும் பந்தைப் பெறுவதும் பிறகு இரான் கோல் பாக்ஸ் வரை முன்னேறுவதும் என கோல் அடிக்க மொராக்கோ முயன்றுகொண்டேதான் இருந்தது. சில முயற்சிகள் வீணாகின. இரான் கோல்கீப்பர் அலிரெஸா பெய்ரன்வன்ட், சிறப்பாகச் செயற்பட்டு மீறிவந்த மொராக்கோவின் சில வாய்ப்புகளையும் தடுத்துவிட ஆட்டம் சம நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

ஸ்டாப்பேஜ் டைம். ஆட்டத்தின் 95 ஆவது நிமிடம். ஆட்டம் முடிய இன்னும் ஒரு நிமிடம் மட்டுமே உள்ள நிலையில் கிடைத்த ஹஃப்ரீ கிக் வாய்ப்பில்  மொராக்கோவின் கோல் பாக்ஸுக்கு வெளியே  இடதுபுறத்திலிருந்து    இரானின் எஷன் ஹாஜி சஃபி அடித்தார். ஈரான் வீரரிடம் பந்து சிக்குவதற்கு  அதை தடுப்பதற்காக   எண்ணி மாற்று வீரராகக் களம் இறங்கிய மொராக்கோவின் பகத்தூஸ்   பந்தை நோக்கிப் பாய்ந்து  தலையால் தடுக்க  யாருமே எதிர்பார்க்காத வகையில் பந்து துரதிர்ஷ்டவசமாக மொராக்கோவின் வலைக்குள்ளேயே சென்று  ஓன் கோலா'கத் தஞ்சமடைந்தது.

20 வருடம் கழித்து உலகக்கிண்ணப் போட்டியில்  வெற்றிபெற்ற சந்தோஷத்தில் இரான் வீரர்களும் கைக்கு எட்டிய வெற்றி வாய்க்கு எட்டாமல் போன அதிர்ச்சியில் மொராக்கோ வீரர்களும் கண்ணீர் விட்டபடியே மைதானத்தைவிட்டு வெளியேறினர். உலகக்கிண்ண வரலாற்றில் ஈரானின் இரண்டாவது வெற்றியாகும். முன்னதாக, 1998 உலகக்கிண்ணப் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியிருந்த ஈரான், 20 ஆண்டுகள் கழித்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது
2014 ஆம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டிக்குப் பின்னர் ஈரான் அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லையென்பது கார்லோஸின் பயிற்சியைப் பறைசாற்றும் ஓர் உதாரணம். இதற்கு முன்பு கார்லோஸ் கியூரோஸ் ரியல் மாட்ரிட்டின் பயிற்சியாளராகவும்  மான்செஸ்டர் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் 2010-ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியின் போது போத்துகல்  அணியின் பயிற்சியளராகக் கடமையாற்றியவர்.

மொராக்கோவுக்கு இது கொஞ்சம் போதாதகாலம்தான்.   2026 உலகக்கிண்ணப் போட்டியை நடத்தும் உரிமைகோரும் போட்டியில் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ இணை நாடுகளால் தோற்கடிக்கப்பட்டது. போட்டியை வெல்லுமளவுக்கு முயன்றபோதும்  துரதிர்ஷ்டவசமாக  ஈரானிடம் தோற்றிருக்கிறது.

No comments: