Saturday, June 23, 2018

ஆரம்பமாகிறது கமலின் அரசியல்சதுரங்கம்


தமிழக முதல்வராவதுடான் சினிமா நடிகர்களின்  அதிகபட்ச ஆசை. சினிமாவில் அதி உச்சங்களைத் தொட்ட கமலும் ரஜினியும் இதற்கு விதி விலக்கல்ல. கருணாநிதியும் ,ஜெயலலிதாவும் அரசியலை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தபோது ரஜினியின் குரல் ஓங்கி ஒலித்தது. அன்று ஆரம்பித்த ரஜினியின் அரசியல் ஆசை இன்றுவரை தொடர்கதையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று ரஜினி அறிவித்துக்கொண்டிருக்கிறார். கமல் தனது அரசியல் பயணத்தை அரம்பித்துவிட்டார்.

கமல்,தனது அரசியல் கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் கேலிசெய்தார்கள். மற்றைய அரசியல் தலைவர்கள் கமலின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றனர். மக்களுடன் நெருங்கிப் பழகி கருத்துக் கேட்பது, ஆய்வு செய்வது என கமல் தனது அரசியல் சதுரங்கத்தை ஆரம்பித்துவிட்டார்.

ரஜினியும் கமலும் தமக்காக அரசியல் கட்சியை ஆரம்பித்தாலும் கூட்டணி இல்லமல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னால்  பாரதீய ஜனதா இருப்பதாக நம்பப்படுகிறது. கமலின் அரசியல் நகர்வின் பின்புலத்தில் இருப்பது யார் என்ற கேள்விக்கு இன்னமும் சரியான பதில் இல்லை. ராகுலையும் சோனியாவையும் கமல் சந்தித்தபின்னர் அந்தக் கேள்விக்கான விடையை ஓரளவு ஊகிக்கக் கூடியதாக உள்ளது.

ராகுலை கமல் சந்திக்கப்போவது பற்றிய தகவல்  தமிழக காங்கிரஸ் தலவர்களுக்கு  முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த சந்திப்பு ஊடகங்கள்  மூலம் தான் தமிழக காங்கிரஸ் தலவர்களுக்குத் தெரிய வந்தது. ராகுல் காந்தியும் கமலும் அரசியல் பற்றி பேசவில்லைஎன்ர அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை யாரும் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. இது போன்றுதான் திருமாவளவனின் சந்திப்பும் மூடி மறைக்கப்பட்டிருந்தது. ராகுலைச் சந்தித்த பின்னர், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தலமையிலான கூட்டணியில் போட்டியிடப்போவதாக திருமாவளவன் தெரிவித்தார். கமலும் அதுபோன்ற கருத்தைத்தான் சொல்லியுள்ளார்.

சோனியா, மன்மோகன் ப.சிதம்பரம் போன்ற காங்கிரஸ்  தலைவர்கள் கருணாநிதியுடன் மிக நெருக்கமாகப் பழகினார்கள்.  ராகுல் காந்தி அந்த நெருக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை. தமிழகத்துக்கு விஜயம் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக கருணாநிதியைச் சந்திப்பார்கள். தமிழகத்துக்கு விஜயம் செய்யும் ராகுல் காந்தி, கருணாநிதியைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். 2ஜி விவகாரம் காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவைப் பிரித்தது. காற்றிலே ஊழல் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

2ஜி விவகாரத்தைக் கையில் எடுத்து மிரட்டியதால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது ஸ்டாலினின் விருப்பம். கருணாநிதி அதனை விரும்பவில்லை. கருணாநிதி இப்போது அமைதியாக இருக்கிறார். ஸ்டாலினின் முடிவை மற்றைய தலைவர்கள் மறுக்க மாட்டார்கள்.  மூன்றாவது அணியின் முயற்சிக்கு ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் அதிர்ந்து போயுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனமான பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தமிழக காங்கிரஸ் தலமைக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது.

தமிழக அரசுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் சில முடிவுகளுடன் காங்கிரஸ் ஒத்துப்போவதில்லை. நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிக தொகுதிகளைப் பெற வேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடு.  கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் எட்டுத் தொகுதிகளில் மட்டும்தான்  காங்கிரஸ்  வெற்றி பெற்றது. ஆகையால் காங்கிரஸ் எதிர் பார்க்கும் அதிகளவான தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுக்கொடுக்காது.  திராவிட முன்னேற்றக் கழகம் கைவிட்டால் கமலின் கரத்தைப் பற்றிப்பிடிக்க ராகுல் விரும்புகிறார்.

மூன்றாவது அணி என்று முதல் குரல் கொடுத்த மமதாவுக்கு ஸ்டாலின் வாழ்த்துச் சொன்னதையும் மூன்றாவது அணியை பலப்படுத்த விரும்பும் சந்திரசேகரராவ் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியைச் சந்தித்ததையும் காங்கிரஸ் தலைவர்கள் ரசிக்கவில்லை. மூன்றாவது அணியின் பக்கம் ஸ்டாலின் சாய்ந்தால், காங்கிஸின்   தமிழகத்தில் கூட்டணி அமைத்து தமிழகத்தில் தேர்தலைச் சந்திக்க ராகுல், விரும்புகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான தமிழக அரசியல் கூட்டணியில் கமலும் திருமாவளவனும் இணைவார்கள். திராவிடக் கட்சிகளுடன்  சேரமாட்டேன் எனச் சபதம் எடுத்த டாக்டர் ராமதாஸும் வருவார் என காங்கிரஸ் நம்புகிறது. தினகரனுக்கும் பலமான கூட்டணி தேவைப்படுகிறது. ஆகையால் காங்கிரஸ் தலைமையிலான  கூட்டணியில் தினகரன் சேருவதற்குச் சந்தர்ப்பம் உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழ்கத்தின் தலைமையில் கூட்டணி அமைந்தால் கொடுக்கப்படும் தொகுதிகளைப் பெறுவதைத் தவிர காங்கிரஸுக்கு வேறுமார்க்கம் இல்லை.  தமிழகத்தில் காங்கிரஸ்தலைமையில் கூட்டணி அமைந்தால் தாம் விரும்பியவாறு அதிகளவான தொகுதிகளில் போட்டியிடலாம் என காங்கிரஸ் நம்புகிறது. அவற்றில் எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி  பெறும்  என்பதைத் தலைவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கும்.

வர்மா

No comments: