Friday, November 29, 2024

ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி” – அணிந்துரை


 ஈழத்து இலக்கிய உலகில் ஊடகப் பரப்பில் இருந்து கொண்டு இலக்கியம்

சமைத்தோரில் பரவலான எழுத்துகளை வெளிப்படுத்திய வகையில் ரவிவர்மா தனித்துவமானவர். வடமராட்சி மண்ணின் மைந்தன் அவரின் தொடர்பு இந்த இணைய உலகில் தான் கிடைத்தது.

ரவிவர்மாவின் எழுத்துகளை வலைப்பூக்கள் வழியாகப் படித்த போதும், “வடக்கே போகும் மெயில் என்ற அவரது சிறுகதைத் தொகுதியைப் படித்த போதும், என் பால்யகாலத்தில் ஊடகராக இயங்கிக் கொண்டு எழுத்தாளராகப் பரிணமித்த நெல்லை.க.பேரன் தான் நினைவுக்கு வந்தார்.

தான் கொண்ட களத்துக்கேற்ப எழுத்தைக் கொடுக்கும் பட்டறவு ரவிவர்மாவிடம் உண்டு. அதனால் தான் அவரின் பிரதேச வழக்கியல் சார்ந்த மொழி நடையோடு சிறுகதைகளை எழுதியவர், திரைக்கு வராத சங்கதி வழியாக ஒரு பொதுத்தமிழைக் கையாண்டிருக்கிறார். இதனால் ஈழத்தவருக்கு மட்டுமன்றி தமிழகத்தவரும் இலகுவில் இவரின் மொழி நடையோடு இயல்பான வாசிப்பனுபவத்தைப் பெற முடியும்.

ஈழத்து எழுத்துலகில் உலக சினிமா அளவுக்கு இந்திய சினிமா அதுவும் குறிப்பாகத் தமிழ் சினிமா குறித்த சங்கதிகள் பேசப்படுவது அரிது எனலாம். அதை ஒரு தீண்டத்தகாத சமாச்சாரமாகவும் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் நூற்றாண்டு தொடப்போகும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஆச்சரியமானதும், சாதனைக்குரியதுமான பக்கங்கள் பலவுண்டு. அத்தோடு இலக்கியத்தரமான படைப்புகளைக் காட்சி ஊடகம் வழி பரந்து விரிந்த பாமர உலகுக்குக் கொண்டு சென்ற வகையில் தமிழ் சினிமாவின் ஆச்சரியப் பக்கங்கள் பலவுண்டு.

ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி யில் அவர் கொடுத்த கட்டுரைகளைப் படித்தாலேயே போதும், முன் சொன்னதன் நியாயம் புரியும். சினிமாக் கட்டுரைகளில் ஆய்வு, வரலாற்றுத் தன்மை இவற்றில் மிக ஆழமான பின்புலத்தோடு இருந்தாலொழிய சினிமாக் கட்டுரைகளில் ரவிவர்மா கையாண்டிருக்கும் தொடர்ச்சித்தன்மையும், ஒன்றிலிருந்து இன்னொன்றைத் தொடர்புபடுத்தி எழுதும் வல்லமையும் இலகுவில் கிடைக்காது.

இந்தக் கட்டுரைகளில் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் நடந்த சங்கதிகளைத் தற்காலத்தோடும், கடந்த் தசாப்தத்தோடும் இணைத்து எழுதும் பண்பும், அவற்றின் மெய்த்தன்மையும் ரவிவர்மாவின் எழுத்துகளின் பலம் எனலாம்.

ஏற்கனவே ஏவிஎம் நிறுவனம் குறித்த நூல்களை அந்த நிறுவனம்சார்ந்தவர்களாலேயே எழுதப்பட்டதைப் படித்த வகையில் சொல்கிறேன், “ஏவிஎம் படத்தலைப்பில் வாழும் நடிகர்கள் என்ற கட்டுரையைப் படித்த போது அந்த நூல்களில் கூட இடம்பெறாத செய்திகளும், அப்படியே இடம்பெற்ற செய்திகளையும் தகுந்த முடிச்சுப் போட்டுக் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர். 

படக்கதைகள் உருமாறிய வரலாறுகளையும், படத் தலைப்புகள் தலைமுறை கடந்து பயன்படுத்தப்பட்ட பாங்கையும் இணைத்து கட்டுரைகள் கொடுத்திருக்கிறார்.

புகைப்படக் கலைஞர் மனசு வைத்தால் கூட நல்ல கலைஞர்களை அறிமுகப்படுத்தமுடியும் என்பதையும் ஒரு கட்டுரை சொல்லி வைக்கின்றது.

இலட்சிய நடிகருடன் ஜோடி சேர மறுத்த பானுமதி கட்டுரையின் தலைப்பைப் பார்த்தால் பானுமதியின் கர்வமான தோற்றம் தான் தோன்றி மறையும், ஆனால் அதன் பின்னால் நெகிழ வைக்கும் பின்னணியைக் கொடுக்கிறார். சினிமாவில் கூட யதார்த்தம் பேணிய முன்னோர்கள் என்பதை அது உணர்த்துகிறது.

கவிஞர் முத்துலிங்கத்துக்காக எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிக் கொடுத்த பாட்டைப் பற்றி அவரே சுவைபடக் கூறினாலும் இங்கே அதைப் பற்றி எழுதும் ரவிவர்மா அதன் நீட்சியாக முத்துலிங்கம் குறித்த தகவல்களை இன்றைய சந்ததிக்கும் சொல்லி வைக்கிறார்.

தோல்வியை வெற்றியாக்கும் சூக்குமம் கைவரப்பெற்ற படைப்பாளிகளும் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். அவற்றை வெற்றிபெற்ற படங்களுக்குப் பின்னால் சொல்லியும் இருக்கிறார்கள். எழுத்தாளரும் தன்னுடைய கட்டுரைப் பதிவில் இத்தகு உதாரணங்களோடு எழுதிச் செல்கிறார்.

தமிழ்த் திரையுலகின் பழைய வரலாறுகளை மட்டுமன்றி கடந்த தசாப்தத்தில் புதிய அலையைப் படைத்த செல்வராகவன் குறித்த பின்னணியும் உண்டு. இன்று இசைஞானி இளையராஜா, கலைஞானி கமல்ஹாசன் என்ற பட்டங்களோடு அடையாளப்படுபவர்களின் ராசியை கலைஞர் வழங்கிய காலத்தால் அழியாத பட்டங்கள் வழிப் பதிவு செய்கிறார்.

இயக்குநர் பந்துலுவின் மகள் பி.ஆர்.விஜயலட்சுமி, தன் தந்தை திடீரென்று இறந்த போது கடன்காரர் தொல்லையால் குடும்பம் அவஸ்தைப்பட்ட சூழலில் தன் அண்ணனும், தானும் சேர்ந்து போய் அழுது கொண்டே எம்.ஜி.ஆரைச் சந்தித்து அவர் உதவிய வரலாற்றைச் சொல்லி இருக்கிறார்.இங்கோ பந்துலுவோடு எம்.ஜி.ஆருக்கு இருந்த பந்தத்தைக் காட்டி நிற்கின்றார் ரவிவர்மா.

ஒரு காலத்தில் திரைப்பட நாயகிகள் தற்கொலை செய்து கொள்ளும் வரலாறு போய், இன்று சின்னத்திரைக் கலைஞர்கள் தற்கொலை செய்யும் அவலத்தையும் காட்டுகிறார்.

கண்ணகி சிலைக்கு மாதிரி உருவமாக அமைந்த நடிகை விஜயகுமாரி குறித்துப் பதிவு செய்யும் போது அவரின் நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் கொடுக்கிறார். 

நடிகர் விஜயகுமார் சினிமாவுக்கு வந்த கதையே ஒரு சினிமா ஆக்கக் கூடிய சுவாரஸ்யம் நிறைந்தது. அந்த சுவாரஸ்யம் ரவிவர்மாவில் எழுத்தில் மின்னுகிறது.  

சந்திரபாபு குறித்த கட்டுரையைப் படிக்கும் போது அதை நீட்டி முழு வரலாற்று நூலாக்கக் கூடிய பண்பு அமைந்திருக்கின்றது.

இன்று உறுதிப்படுத்தப்படாத பொய்ச் செய்திகளோடும், பரபரப்பு அறிக்கைகளோடும் இணைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திரை இலக்கியத்தை மெய்த்தன்மை பொருந்திய வரலாற்றுச் சங்கதிகளோடு கொடுத்த ரவிவர்மாவுக்கு இந்த வேளை மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.

Sunday, November 24, 2024

அவுஸ்திரேலிய டெஸ்ட்டில் இந்தியாவின் சாதனைகள்

இந்திய ,அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே  பேர்த்தில் நடைபெறும்  முத்லாவது டெஸ்ட் போட்டியில்  3 ஆம் நாள்  முடிவில்  நிகழ்த்தப்பட்ட சாதனைகள்

7 முறை 5 விக்கெட்ஸ் பும்ரா வெளிநாட்டில் அபாரம்

இப்போட்டியில்  பும்ரா எடுத்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்ட சேனா நாடுகளில் நாடுகளில் ஜஸ்ப்ரித் பும்ரா 7 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் சேனா நாடுகளில்    அதிக முறை 5 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற கபில் தேவ் வாழ்நாள் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இதற்கு முன் கபில் தேவும் சேனா நாடுகளில் 7 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர்களுக்கு அடுத்த இடத்தில் ஜாகீர் கான் ,பிஎஸ் சந்திரசேகர் ஆகியோர் தலா 6 விக்கெற்கள்  எடுத்துள்ளார்கள்.

இந்திய மண்ணில்  பும்ரா 2 முறை மட்டுமே 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் ஒட்டுமொத்த வெளிநாட்டு மண்ணில் அவர் 11 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

                                         கிங் விராட் கோலி படைத்த 3 சாதனைகள்

அவுஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி 7 சதங்கள் அடித்து   சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். மேலும் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கர் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

1. சுனில் காஸ்கர் : 7, வெஸ்ட் இண்டீஸில்

1. விராட் கோலி: 7, அவுஸ்திரேலியாவில்

2. ராகுல் டிராவிட்: 6, இங்கிலாந்தில்

 2. சச்சின் டெண்டுல்கர்: 6, அவுஸ்திரேலியாவில்

 டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்த விராட் கோலி புதிய சாதனை படைத்தார்.

 1. ராகுல் டிராவிட்: 210

 2. விவிஎஸ் லக்ஷ்மன்: 135

 3. விராட் கோலி: 116*

 4. சச்சின் டெண்டுல்கர்: 115

5. சுனில் கவாஸ்கர்: 108

             கம்பீரின் 16 வருட சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்

ஜெயஸ்வால் மிகவும் நிதானமாக விளையாடி  1273*  ஓட்டங்கள் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய இடதுகை பேட்ஸ்மேன் என்ற கௌதம் கம்பீர் சாதனையை உடைத்து  புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2008ஆம் ஆண்டு தற்போதைய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் 1134 ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனை

1. யசஸ்வி ஜெய்ஸ்வால்: 1273* (2024)

 2. கௌதம் கம்பீர்: 1134 (2008)

 3. சௌரவ் கங்குலி: 1106 (2007)

15பவுண்டரி 3 சிக்சருடன் அவர் 161 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதையும் சேர்த்து 2023 – 2025 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற ஜோ ரூட் உலக சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். அந்த இருவருமே இதுவரை 12 முறை 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக்  குவித்துள்ளார்கள்.

இளம் வயதில் அரை சதம் அடித்த இந்திய இடது கை பேட்ஸ்மேன் என்ற பெருமையும் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற மெக்கல்லம் சாதனையை உடைத்துள்ள ஜெய்ஸ்வால் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

 1. யசஸ்வி ஜெய்ஸ்வால்: 35 (2024)

2. ப்ரெண்டன் மெக்கல்லம்: 33 (2014)

 3. பென் ஸ்டோக்ஸ்: 26 (2022)

                                 சேவாக் சாதனையை சமன் செய்த ராகுல்

ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 201  ஓட்டங்கள் எடுத்தார் ராகுல்இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கழித்து அவுஸ்திரேலிய மண்ணில் 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையை ராகுல்ஜெய்ஸ்வால் படைத்துள்ளனர். கடைசியாக 2004ஆம் ஆண்டு வீரேந்திர சேவாக்ஆகாஷ் சோப்ரா அவுஸ்திரேலியாவில் 100+ ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்கள்.

2000ஆம் ஆண்டு ஆண்டுக்குப் பின் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் அதிக முறை 100+ ஓட்டங்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவிய இந்திய வீரர் என்ற வீரேந்திர சேவாக் சாதனையையும் ராகுல் சமன் செய்துள்ளார். சேவாக், ராகுல் ஆகிய இருவருமே 2000ஆம் ஆண்டுக்குப்பின் சேனா நாடுகளில் இந்தியா தலா 3 முறை 100+ ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவியுள்ளார்கள்.

ஜெய்ஸ்வால்ராகுல் ஜோடி 38 வருட சாதனையை முறியடித்தது.

அவுஸ்திரேலியாவில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சுனில் கவாஸ்கர்ஸ்ரீகாந்த் சாதனையையும் அந்த ஜோடி உடைத்துள்ளது. இதற்கு முன் 1986ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் அவர்கள் 191 ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனை

Saturday, November 23, 2024

சீனாவை தோற்கடித்த இந்தியா மகளிர் ஆசிய சம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. .

 பீகார் மாநிலம் ராஜிகிரில் நடைபெற்ற மகளிர் ஆசிய சம்பியன்ஸ் டிராபி ஹொக்கி இறுதிப் போட்டியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தித் தக்க வைத்தது.

  இந்திய ஸ்ட்ரைக்கர் தீபிகா மீண்டும் இந்தியாவுக்காக விளையாடினார், ஒரு அற்புதமான ரிவர்ஸ் ஹிட் கோலை அடித்தார், பரபரப்பான இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவை வென்றதன் மூலம்  இந்தியா பட்டத்தைத் தக்கவைக்க உதவியது.

31வது நிமிடத்தில் பெனால்டி கார்னரில் இருந்து தீபிகாவின் தீர்க்கமான கோல் 11 கோல்களுடன் போட்டியின் அதிக கோல் அடித்த வீராங்கனை என்ற இடத்தைப் பிடித்தது. இது இந்தியாவின் மூன்றாவது ACT பட்டத்தை குறிக்கிறது, இதற்கு முன்பு 2016 மற்றும் 2023 இல் வென்றது, போட்டியின் வரலாற்றில் தென் கொரியாவுடன் தலா மூன்று பட்டங்களுடன் சமன் செய்யப்பட்ட அணியாக  இந்தியா உள்ளது.   

  சீனா தனது மூன்றாவது ரன்னர்-அப் போட்டியுடன் திருப்தி அடைய வேண்டியிருந்தது. முன்னதாக நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மலேசியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

ராஜ்கிர் ஹொக்கி ஸ்டேடியத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் ரூ.10 லட்சம் வழங்கப்படும்" என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் மற்றும் அவரது துணைப் பணியாளர்கள் கூட முதல்வர் நிதிஷ் குமாரின் அரசாங்கத்தால் வெகுமதியாகப் பெறுவார்கள்.

மேலும், தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங்குக்கு ரூ.10 லட்சமும், மற்ற துணைப் பணியாளர்கள் தலா ரூ.5 லட்சமும் பரிசாகப் பெற்றனர். உயர்மட்ட ஹொக்கி பல ஆண்டுகளுக்குப் பிறகு பீகாருக்குத் திரும்பியது

குரு' அஷ்வின் 'சிஷ்யன்' லியான் மீண்டும் ஒரு 'சுழல்' மோதல்

அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிறிக்கெற் அணி 'பார்டர்- - கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும்  கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில்  ஆரம்பமானது.

இத்தொடரில் இந்தியாவின் அஷ்வின் 38, அவுஸ்திரேலியாவின் நேதன் லியான் 36, 'சுழல்' ஜாலம் நிகழ்த்த உள்ளனர். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில்   அஷ்வின் 105 போட்டிகளில் , 536 விக்கெற்களை எடுத்து 7 ஆவது இடத்திலும்,  8 ஆவது  இடத்தில் லியான் (129 போட்டிகளில்  530 விக்கெற்கள எடுத்து இருக்கிறார்.

இருவரும் எப்படி பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஒட்டுமொத்தமாக அஷ்வின் 114 விக்கெட் (22 போட்டி), லியான் 116 விக்கெட் (26 போட்டி) வீழ்த்தியுள்ளனர். இதில் அவுஸ்திரேலிய மண்ணில் அஷ்வின் 39 விக்கெட் (10 போட்டி), லியான், 60 விக்கெட் (15 போட்டி) சாய்த்துள்ளனர்.

 சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு சராசரியில் ஆசிய மண்ணில் அஷ்வின் (21.76), லியானை (30.81) முந்துகிறார். ஆசியாவுக்கு வெளியே அஷ்வினைவிட (33.14), லியான் (30.09) அசத்தியுள்ளார். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அஷ்வின் (40 போட்டி, 194 விக்.,), லியான் (43 போட்டி, 187 விக்.,) முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.

கூட்டணிக் கதவு அடித்துமூடப்பட்டது அரசியல் அரிச்சுவடியை ஆரம்பித்த விஜய்

விஜயின் அரசியல் பிரவேசம்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலாவது  மாநாட்டில் அனல் பறக்கப் பேசிய விஜய், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், பாரதீய ஜனதாவையும்  ஒரு பிடி பிடித்துள்ளார்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி விஜய் எதுவுமே  பேசவில்லை.

மத்திய அரசையும் ,  தமிழக அரசையும்  போட்டுத்தாக்கிய விஜயின் மனதில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புனிதமானதாகத் தெரிந்தது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர விஜய் விரும்புவதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.விஜயின் தமிழக வெற்ரிக் கழகத்தின் சார்பில் கருத்துத் தெரிவிக்கும்  பொதுச் செயலாளர்  புஸ்லி ஆனந்தன் வாயைத் திறக்காமல் மெளனம் காத்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணி  உண்மையாக  இருக்கும் என்ற சந்தேகம் நிலவியது.

மெகா கூட்டணி அமைக்கும் கனவில் இருக்கும் எடப்பாடிக்கு   விஜயின் சமிக்ஞை தேனாக  இனித்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி இல்லை என புஸ்லி ஆனந்தன் பகிரங்கமாக அறிவித்ததால்   கூட்டணிக் கதவு மூடப்பட்டது. இந்த இடை வெளியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்  ,தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இடையில் நடைபெற்ற இரகசியப் பேச்சுவார்த்தை முறிவடைந்து விட்டதாகசெய்தி  வெளியாகியது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளைக் கொடுக்க முன்வந்தபோதும், 60 தொகுதிகளும், துணை முதல்வர் பதவியும் வேண்டும் என விஜய்தரப்பு அடம் பிடித்துள்ளது. இதனால்  இரகசியப் பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

விஜயுடன் கூட்டணி சேர பல கட்சிகள் தயாராக  இருக்கின்றன. ஆனால், எந்தக் கட்சியும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும்  போட்டியிடுவதற்கு பலமான வேட்பாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இல்லை. விஜயும்,  புஸ்லி ஆனந்தும்  மட்டும்தான் தெரிந்த முகங்களாக  இருக்கின்றன. விஜய்  இருப்பதால்  வெற்றி பெற்று விடலாம் என புஸ்லி ஆனந்தும்  மற்றவர்களும் நம்புகின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள கட்சிகளில் ஒருசில   வெளியேறும்  என்ற எதிர் பார்ப்பில் எடப்பாடி இருக்கிறார். விஜய் தரப்பும் அதே நிலைப் பாட்டில் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் திருமாவளவன்   அடிக்கடி முரண்படுகிறார்.அவரது கட்சிப் பிரமுகரான ஆதவன் அர்ஜுனா திராவிட முன்னேற்றக் கழகத்தை பகிரங்கமாக விமர்சிக்கிறார். இந்தக் காரணங்களினால்  திருமாவின் வெளியேற்றத்தை எடப்பாடியும், விஜயும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி   அந்தப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திரவிட முன்னேற்றக் கழகமும் தமிழகத்தில் 65 சதவீத வாக்குகளைக்  கொண்டுள்ளன. ஏனைய கட்சிகள்  மிகுதியான 35 சதவீத வாக்குகளைப் பங்கு போட்டுள்ளன.  விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எத்தனை சதவீத வாக்குகளைப் பெறும் என்பது தேர்தலுக்குப் பின்பே தெரியவரும். 

நடிகர் விஜய், அரசியல்தலைவரானதும் சென்னையில் நடைபெறும் அம்பேத்கர் புத்தகவிழாவில் கலந்துகொள்ளப்போவதாகவும் அந்த நிகழ்ச்சியில் திருமாவளவனும் பங்கேற்பார் என்ற தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணல் அம்பேத்காரின் வழியில் அரசியல் நடத்துபவர் திருமாவளவன். விஜயும் தனது அரசியல் வழிகாட்டியாக அம்பேத்காரைப் பின்பற்றுகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திருமாவளவனுக்கும் இடையிலான பஞ்சாயத்து முடிவுக்கு வந்த வேளையில் டிசம்பர் 6 ஆம் திகதி  புத்தக வெளியீட்டு விழா நடைபெறும் என்றஅறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை 1999-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக விசிக முன்வைத்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கடந்த செப்.ரெம்பர் 12 ஆம் திகதி  நிர்வாகிகளுடன் பேசும்போது, ஆட்சியில் பங்கு தொடர்பான கருத்தை திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்த காணொலி, வெளிநாட்டு பயணத்தை முடித்து முதல்வர் தமிழகம் திரும்பிய நிலையில், திருமாவளவனின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நீக்கப்பட்டது சர்ச்சையானது. எனினும், இந்த கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என திருமாவளவன் உறுதிபட தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, விசிக இல்லாமல் வடமாவட்டங்களில் திமுக வென்றிருக்க முடியாது என்பது உள்ளிட்ட விமர்சனங்களை தெரிவித்த நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கூட்டணியில் தொடர்கிறோம் எனக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் திருமாவளவன்.

இந்நிலையில், கடந்த 27‍ம் திகதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்திய கட்சித் தலைவர் விஜய், கூட்டணியில் சேருவோருக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று அறிவித்தார். இதன்மூலம் அவர் விசிகஉள்ளிட்ட கட்சிகளுக்கு மறைமுகமாக கூட்டணி அழைப்பு விடுப்பதாகபேசப்பட்டது.

விஜய்யின் ஆட்சியில் பங்கு தொடர்பான கருத்துக்கு விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆதரவு தெரிவித்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவனோ, "பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனைபோல" ஆட்சியதிகாரத்தில் பங்கு என்ற அரசியல் உத்திவெளிப்பட்டுள்ளது என கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்த கருத்து மோதல்களுக்கு இடையே, இரு தலைவர்களும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒரே மேடையை பகிர்ந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஒரு வார இதழ் சார்பில் சட்டமேதை அம்பேத்கர் குறித்த தொகுப்பு ஒன்று தயாராகி வருகிறது. இத்தொகுப்பில் நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பங்களிப்பு செய்துள்ளனர். சென்னையில் வரும் டிசம்பர் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அம்பேத்கரை கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில்விசிக தலைவர் திருமாவளவனுக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற உள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கட்சி ஆரம்பித்த தவெக தலைவர் விஜய். கடந்த மாதம் நடந்திய மாநாட்டின் மூலம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர் தவெக தலைவர் விஜய். மாநாடு நடந்து கிட்டதட்ட 20 நாட்களுக்கு மேலான நிலையில் இன்று வரை மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு குறித்து தான் அரசியல் கட்சி தலைவர்கள் இன்றுவரை ஆதரவாகவும், எதிராகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த செய்திக்கு திருமாவளவன் பல முறை மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தான் நாங்கள் கூட்டணி வைப்போம் என்றும் உறுதியாக தெரிவித்தார்.புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து பின்னர் தான் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், சென்னையில் டிசம்பர் 6ம் திகதி  நடைபெற உள்ள புத்த வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைக் கொண்டு தான் திருமாவளவன் பங்கேற்க மறுப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. திருமாவளவன் மறுப்பு தெரிவித்த நிலையில், தவெக தலைவர் விஜய்யின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒவ்வொரு விஷயத்திற்கும் வித்தியாசமாக முடிவெடுக்கும் விஜய் இதற்கு என்ன முடிவெடிப்பார் என்று பெருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரமணி

24/11/24