Wednesday, August 13, 2025

ஆரம்பமானது ராகுலின் ஆட்டம் 300 எம்பிக்கள் டெல்லியில் கைது


 

 ஆரம்பமானது ராகுலின் ஆட்டம்

300 எம்பிக்கள்  டெல்லியில் கைது 

இந்தியத் தேர்தல் ஆணையமும், பாரதீய ஜனதாக் கட்சியும் சேர்ந்து வாக்குகளைத்திருடியதாக எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

ராகுல் சொல்வது போல் தேர்தல் மோசடி எதுவும் நடைபெறவில்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பாரதீய ஜனதா வழமைபோல மெளனமாக இருக்கிறது.

எந்த விதமான வசதியும் இல்லாத  ஒரு வீட்டில் 80 வாக்காளர்கள்  இருப்பதாக  ஆதாரத்துடன் ராகுல் தெரிவித்துள்ளார்.

40 ஆயிரம் வாக்காளர்களின் வீட்டு இலக்கம்   ஸீரோ ஸீரோ  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா,பீகார்,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போலி வாக்காளர்கள் வகை தொகையாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரு வாக்காளைரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளின் வாக்காளர் பட்டியலில் பல வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரே வாக்காளர், பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா தொகுதியிலும், கிழக்கு லக்னௌவிலும், மும்பையில் கிழக்கு ஜோகேஸ்வரி தொகுதியிலும் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

தனது ஆய்வுக் குழு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை அடையாளம் கண்டுள்ளதாக ராகுல் காந்தி கூறினார். அவர்களின் முகவரிகள் தவறானவை அல்லது முகவரிகள் இல்லை அல்லது அந்த முகவரிகளில் அவர்கள் வசிக்கவில்லை.

ஒவ்வொரு வீட்டு முகவரியிலும் 80 வாக்காளர்களும், 46 வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தனி வீடுகளில் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது.

புதிய வாக்காளராகப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் படிவம் 6, பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற 33,692 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

 தலித்துகளினதும், முஸ்லிம்களினதும்  பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது போன்ற ராகுல் காந்தியின் குற்றச் சாட்டுகளுக்கு தேர்தல் ஆனையம் பதிலளிக்கவில்லை.

ராகுலின்  குற்றச் சாட்டுகலுக்கு பதிலளிக்கும்படி நீதிமன்றம் கேட்டபோதும்  சட்டத்தில் இடம் இல்லை எனக்கூறியது இந்தியத் தேர்தல் ஆணையம்.

வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுகளை விசாரணை நடத்தக் கோரியும், பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய கூட்டணி எம்.பி.க்கள் நேற்று திங்கட்கிழமை  காலை பாராளுமன்ற வளாகத்திலிருந்து டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தை நோக்கி ஒரு பிரமாண்ட பேரணியை நடத்தினர். இந்தப் பேரணிக்கு ராகுல் காந்தி தலைமை தாங்கினார்.

பேரணியால் டெல்லியில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டிருந்தது. துணை இராணுவப்படை அழைக்கப்பட்டிருந்தது.

25 கட்சிகளைச் சேர்ந்த  300 க்கும்  மேற்பட்ட எம்.பி.க்கள் இதில் பங்கேற்றனர். காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி , சிவசேனா, தேசிய மாநாடு உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர். திமுக எம்.பி. கனிமொழி, திருச்சி சிவா, டி.ஆர். பாலு, துரை வைகோ  உட்படப்  பலர் பங்கேற்றனர். பேரணிக்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை. வீதி எங்கும் தடை போட்டு பேரனி தடுக்கப்பட்டது.

பேரணியில் சென்று கொண்டிருந்த எம்.பி.க்களை டெல்லி  பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

 டெல்லி பொலிஸார் எம்.பி.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில், பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். சில எம்.பி.க்கள் பொலிஸ் தடுப்புகளைத் தாண்டி குதித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

  தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார்.

 பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், அகிலேஷ் யாதவ், சஞ்சய் ராவத், சாகரிகா கோஷ், கனிமொழி, ஜோதிமணி  , தமிழச்சி தங்க பாண்டியன், திருச்சி சிவாஉட்பட 300 எம்பிக்கள் கைது செய்ய்யப்பட்டனர்.    பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட அனைவரும்   அருகிலுள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு  இரண்டு மணித்தியாலயத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தப் பிரச்சனை இத்துடன்  முடியப்போவதில்லை.  பெரும் புரட்சியாக வெடிக்கும் அபாயம் உள்ளது என ஆய்வாள‌ர்கள் கருதுகிறார்கள். 

No comments: