குடைச்சல்
கொடுத்த
பத்திரிகையாளரைக்
கொன்றது இஸ்ரேல்
காஸாவில்
இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அல் ஜஸீராவின் பிரதான செய்தியாளரான அனஸ் அல் ஷெரீஃப் உட்பட ஏழு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில்
ஐவர் அல் ஜஸீராவின் ஊழியர்கள்.
இஸ்ரேலின்
கொடுமைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டிக் காட்டியவர்களில் அனஸ் அல் ஷெரீஃப் முக்கியமானவர். அனஸ் அல் ஷெரீஃப் வெளியிடும் உண்மைச் செய்திகளால் இஸ்ரேல் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தது.
கிழக்கு
காஸா நகரத்தில் உள்ள ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் உள்ள கூடாரத்தில் ஊடகவியலாளர்கள் தங்கி இருந்தனர். அனல் அல் ஷெரீஃப்புக்கு
வைக்கப்பட்ட குறியில் அவரின் சகாக்கள் ஆறு
பேர் பலியானார்கள்.
இஸ்ரேலின்
தாக்குதலில் அல்-ஷெரீப், அல் ஜசீரா நிருபர்
முகமது கிரீகே,கமரா ஒபரேட்டர்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌபால் , மோமென் அலிவா உட்பட மொத்தம் ஏழு பேர் கொல்லப்பட்டதாக
கட்டாரைத் தளமாகக் கொண்ட ஒளிபரப்பாளர் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்
போல் பவனி வரும் அல் ஷெரீப் ஹமாஸ் பிரிவின்
தலைவராக இருந்தார், "இஸ்ரேலிய பொதுமக்கள்,
இஸ்ரேலிய படைகள் மீது ராக்கெட் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு அவர் பொறுப்பேற்றார்"
என்று இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது, காஸாவில் கிடைத்த
உளவுத்துறை ஆவணங்களை இஸ்ரேல் ஆதாரமாக மேற்கோள் காட்டியுள்ளது.
ஆனால்
காஸா போரின் கொடூரங்களை
பிரதான செய்தியாக வெளியிட்டதற்காக அவர்
குறிவைக்கப்பட்டதாகவும், இஸ்ரேலின் கூற்றுக்கு ஆதாரங்கள் இல்லை என்றும் மனித உரிமை
ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அல் ஷெரீப்பை இஸ்ரேல் குறிவைப்பதால் காஸாவில் இருந்து வெளியேறுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதைத் தெரிந்துகொண்ட அல் ஷெரீப் காஸாவை விட்டு வெளியேற மறுத்துவிட்டார்.
அல்-ஷெரீப்பை
"காசாவின் துணிச்சலான பத்திரிகையாளர்களில் ஒருவர்" என்று அழைத்த அல் ஜசீரா,
இந்த தாக்குதல் "காசாவின் ஆக்கிரமிப்பை எதிர்பார்த்து குரல்களை அடக்குவதற்கான
ஒரு தீவிர முயற்சி" என்று கூறியது.
இஸ்ரேலிய ஐடிஎஃப் செய்தித் தொடர்பாளர் அவிச்சாய்
அத்ரே, கடந்த மாதம் அல்-ஷெரீப்பின் வீடியோவை
X இல் பகிர்ந்து அவர் ஹமாஸின் இராணுவப் பிரிவைச்
சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டினார். அந்த நேரத்தில், கருத்துச் சுதந்திரம் குறித்த
ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ஐரீன் கான், அதை "ஆதாரமற்ற கூற்று" என்றும்
"பத்திரிகையாளர்கள் மீதான அப்பட்டமான தாக்குதல்" என்றும் தெரிவித்தார்.
"எந்த நேரத்திலும் நான் குண்டுவீசித் தியாகியாகலாம்
என்ற உணர்வுடன்" வாழ்வதாக ஜூலை மாதம்,
பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவிடம்
அல்-ஷெரீஃப் கூறினார்.
"நம்பகமான
ஆதாரங்களை வழங்காமல் பத்திரிகையாளர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தும் இஸ்ரேலின்
முறை, பத்திரிகை சுதந்திரத்திற்கான அதன் நோக்கம், மரியாதை ஆகியவற்றைச் சாடுவதாக பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவின் பிராந்திய இயக்குனர் சாரா குடா கூறினார்.
28 வயதான அல் ஷெரீஃப் மனைவியையும்,
இரண்டு சிறு குழந்தைகயும் விட்டுச்
செல்கிறார். டிசம்பர் 2023 இல் காஸா நகரில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள குடும்ப
வீட்டின் மீது இஸ்ரேலிய தாக்குதலில் அவரது தந்தை கொல்லப்பட்டார்.
ஹமாஸ் , பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டிய ஆறு காஸா பத்திரிகையாளர்களில் அல் ஷெரீப்பையும் ஒருவராக இஸ்ரேல் குறிப்பிட்டது.
கடந்த மார்ச் மாதம் ஹோசம் ஷபாத் , ஓகஸ்ட் மாதத்தில் இஸ்மாயில் அல்-கோல் அவரது கமரா மன் ராமி அல்-ரிஃபி உட்பட பல அல் ஜசீரா பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் இஸ்ரேல் கொன்றுள்ளது .
500,000
க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட X கணக்கில்
இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு இஸ்ரேல்
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காஸா நகரத்தின் மீது தீவிரமாக குண்டுவீசி வருவதாக அல் ஷெரீப், பதிவிட்டார். அதுவே அவரது கடைசிப்பதிவானது.
இதற்கிடையில்,
இந்தக் கொலை இஸ்ரேலிய தாக்குதலின் தொடக்கத்தைக் குறிக்கலாம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
"பத்திரிகையாளர்களின் படுகொலையும், எஞ்சியிருப்பவர்களை அச்சுறுத்துவதும், காசா
நகரில் ஆக்கிரமிப்பு திட்டமிட்டுள்ள ஒரு பெரிய குற்றத்திற்கு வழி வகுக்கிறது"
என்று அந்தக் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தலைமை
நிருபர் வேல் அல் தஹ்தூவின் மனைவி, மகன், மகள்
, பேரன் ஆகியோர் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரில் கொல்லப்பட்டனர். சில வாரங்களுக்குப் பிறகு அல் ஜசீரா
கமரா மன் சமர் அபு டாக்கா கொல்லப்பட்டார்.
காஸாவிற்குள்
வெளிநாட்டு பத்திரிகையாளர்களை அனுமதிக்காத இஸ்ரேல், உள்ளூர் பத்திரிகையாளர்களை குறிவைத்து
தாக்குதல் நடத்தி வருகிறது . 2023 அக்டோபர் 7 ஆம் திகதி போர் தொடங்கியதிலிருந்து
237 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக
காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாமோதலில் குறைந்தது 186 பத்திரிகையாளர்கள்
கொல்லப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. வேண்டுமென்றே
பத்திரிகையாளர்களை குறிவைத்ததாக கூறப்படுவதை இஸ்ரேல் மறுக்கிறது.
No comments:
Post a Comment