Sunday, November 16, 2025

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு உயிர் பயத்தில் இலங்கை வீரர்கள்

 

 பாகிஸ்தானில் குண்டு  வெடிப்பு

உயிர் பயத்தில் இலங்கை வீரர்கள்

பாகிஸ்தானில் கிறிக்கெற் தொடர் விளையாடுவதற்காக  இலங்கை அணி சென்றுள்ளது.  மூன்று போட்டிகள்  கொண்ட தொடரின் முதல்  போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.  இரண்டாவது போட்டிக்காக  இரண்டு அணிகளும் தயார் நிலையில் இருந்த போது  இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டு  வெடிப்பால் இலங்கை வீரர்கள் அச்சமடைந்துள்ளனர். இஸ்லாமாத்தில்  இந்தக் குண்டு வெடிப்பில் 12 பேர் பலியானார்கள் 20 பேர் காயமடைந்தனர்.

 பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள வானா இராணுவக் கல்லூரியின் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள்   திட்டமிட்டிருந்ததாகக் கிடைத்த தகவலை அடுத்து  பாதுகாப்புப் படையினர் அதன முறியடித்தனர்.இதனால் பாரிய சேதம் தவிர்க்கப்பட்டது.

தற்கொலைத் தாக்குதல் நடந்த இஸ்லாமாபாத் நகரில் இலங்கை வீரர்கள் தங்கி இருந்தனர். தற்கொலைத்த தாக்குதலின் விளைவுகளால் அச்சமடைந்த  இலங்கை வீரர்கள்   பாகிஸ்தானில் தங்கி இருப்பதற்குப் பயந்து நாடு திரும்ப வேண்டுகோள் விடுத்தனர்.

கிறிக்கெற்  தொடரின் பாதியில் வீரர்கள் வெளியேறினால்  பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என மற்றைய நாட்டு  வீரர்களும் மறுப்புத் தெரிவிப்பார்கள் என  பாகிஸ்தான் கிறிக்கெற் கருதியது.  சுமார்  10 வருடங்களாக பாகிஸ்தானில் கிறிக்கெற்  போட்டி நடைபெறவில்லை.  அப்படி ஓரு நிலை பாகிஸ்தானுக்கு வரக்கூடாது என்பதில் பாகிஸ்தான் கிறிக்கெற் உறுதியாக  இருந்தது.

 2009 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத சம்பவத்தை இலங்கை வீரர்கள் நினைத்துப் பார்த்தார்கள்.  லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில்  விளையாடுவதற்காக இலங்கை வீரர்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது  பயங்கரவாதிகள்  இலங்கை வீரர்கள் சென்ற பஸ்ஸின்  மீது சரமாரியாக கண்மூடித்தனமாகச் சுட்டனர்.

பயங்கரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளால் மஹேல , குமார் சங்ககார, அஜந்தா மென்டிச், திலன் சமர வீர உள்ளிட்ட வீரர்கள் காயமடைந்தனர்.  இந்தப் பயங்கரவாதச் சம்பவத்தின் பின்னர் சுமார் 10 வருடங்களாக பாகிஸ்தானில் சர்வதேச கிறிக்கெற் நடைபெறவில்லை.

 2009-ம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலே முக்கியக் காரணம். லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்திற்கு அணி வீரர்கள் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மஹேல ஜெயவர்த்தனே, குமார் சங்கக்காரா, அஜந்தா மெண்டிஸ், திலன் சமரவீரா உள்ளிட்ட பல இலங்கை வீரர்கள் படுகாயமடைந்தனர். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் சர்வதேச கிறிக்கெற் போட்டிகள் நடைபெறவில்லை.

 மூன்று வருடங்களுக்கு முன்னர்  பாகிஸ்தானில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து  வீரர்கள் சென்றனர்.   பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப் படலாம் என்ற உளவுத் தகவலால்  நியூஸிலாந்து வீரர்கள்  உடனடியாக பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்கள்.

பாகிஸ்தானின்  உளதுறை அமைச்சரும், பாகிஸ்தான்  கிறிக்கெந்ற் சபையின் தலைவருமான மொஹ்சின் நக்வி இலங்கை வீரர்களை நேரடியாகச் சந்தித்து பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக எடுத்துக் கூறினார்.இலங்கை வீரர்களின் அச்சத்தை அவரால் நீக்க முடியவில்லை.

இலங்கை கிறிக்கெற் சபையுடன் தொடர்புகொண்ட மொஹ்சின் நக்வி   பாதுகாப்புத் தொடர்பாக  உறுதியளித்தார்.

 பாகிஸ்தான்  கிறிக்கெற் சபையின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்ட இலங்கை கிறிக்கெற் சபை  கிறிக்கெற் போட்டி தொடரும் இலங்கை வீரர்கள் இடையில் திரும்பி வரமாட்டார்கள் என  உறுதியளித்தது.

இலங்கை கிறிக்கெற் சபை வெளியிட்ட அறிக்கையால்  வீரர்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர்.

 இலங்கை கிறிக்கெற் அணிக்கு பாகிஸ்தான் தகுந்த  பாதுகாப்பு வழங்கி உள்ளது. வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், உதவியாளர்கள்  எவரும்  இடையில் நாட்டுக்குத் திரும்பக் கூடாது. இதனை மீறி  யாராவது நாடு திரும்பினால்  விசாரணை நடைபெறும் என  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு அறிக்கை போல் தெரியவில்லை. எச்சரிக்கை போல் இருப்பதாக  சிலர் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானில் தொடர்ந்து விளையாட இலங்கை வீரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும்,  இலங்கைக்கு நன்றி என பாகிஸ்தான்  அறிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை நடைபெற இருந்த இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும். 15 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற இருந்த மூன்றாவது ஒருநாள் போட்டி 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

ஸிம்பாப்வே, இலங்கை , பாகிஸ்தான் ஆகிய நாடுகள் விளையாடும் ரி20 முத்தரப்புத் தொடர் நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமாகும்.ராவல்பிட்டியில் இரண்டு போட்டிகளும், லாகூரில் ஐந்து போட்டிகளும் நடைபெறும்.

நவம்பர் 27 ஆம் திகதி முத்தரப்புத் தொடர் முடிவடையும். அதுவரை வீரர்கள் பெரும் பதற்றத்தில் இருப்பார்கள். பாகிஸ்தானில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கும்

  


No comments: