Saturday, November 22, 2025

பிரசாரத்துக்குத் தயாராகும் தமிழகத் தலைவர்கள்


கரூரில் நடைபெற்ற அசம்பாவிதத்துக்குப் பின்னர் அமைதியாக  இருந்த தமிழக தேர்தல் களம் மீண்டும் சூடு பிடிக்க  உள்ளது. சுமார் ஒரு மாத மெளனத்துக்குப் பின்னர் விஜய் தனது அரசியல் பணிகளை ஆரம்பித்துள்ளார். டிசம்பரில் தேர்தல் பிரசாரம் செய்ய விஜய்யின் கட்சி மனு அளித்தது. அதற்கு அரசாங்கம் அனுமதி கொடுத்துள்ளது.  எடப்பாடியும்  இந்த மாத இறுதியில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார்.

தமிழக வெற்றிக் கழ்கத் தலைவர் விஜய் கடந்த மாதம் கரூரில் பிரசாரம் செய்தபோது  கூட்ட நெரிசலில் 41  பேர் இறந்தனர். அந்தச் சம்பவம் விஜயின் அரசியல் வாழ்வில் கரும் பிள்ளியாக இருக்கிறது.

  சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.    சேலம் பொலிஸ் ஆணையரிடம் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.  அந்த மனுவில் அடுத்த மாதம் 4ம் திக‌தி அனுமதி கோரப்பட்டுள்ளது. சனிக்கிழமைக்கு பதிலாக அதில் வியாழனன்று விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரப்பட்டது.

விஜயில் பிரசாரக் கூட்டங்கள் சனிக்கிழமைகளில் இதுவரை காலமும் நடைபெற்றன. இப்போது விஜய் கிழமையை மாற்றி விட்டார். சேலத்தில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெறும். சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால்   கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இப்போது வியாழக்கிழமையை விஜய் தேர்ந்தெடுத்துள்ளார்.

  வியாழக்கிழமை, விஜய் என்ற 'வி' சென்டிமென்டோடு, வியாழக்கிழமை என்றால் பெரும்பாலும்  மாணவர்கள் பாடசாலைக்குச்  சென்று விடுவார்கள், இளைஞர்களும் வேலைகளுக்கு சென்று விடுவார்கள், இதனால் பெரிய அளவில் கூட்டம் திரள வாய்ப்பில்லை என்பதால் தான் அந்த கிழமையை தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது.

 கரூர் சம்பவத்துக்குப் பின்னர் விஜய்யின்  கூட்டத்துக்கு  அதிகளவில் மக்கள் வருவார்களா  என்ற சந்தேகமும் உள்ளது.

விஜயின் பிரசார கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் கரூர் நெரிசல் சம்பவத்திற்கு பிறகு  பொலிஸார் மீது  கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்ட நிலையில் இனி வரும் காலங்களில் அது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க உரிய கண்காணிப்பு ,பாதுகாப்பு ஏற்பாடுகளை  பொலிஸார் மேற்கொள்வார்கள் என்பதால், ஊருக்கு வெளிப்புறங்களில் மட்டுமே விஜய்க்கு பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் சேலம்.  எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் இருந்து விஜய் தனது பிரசாரத்தை தொடங்க இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விஜய் தனித்து போட்டி என சிறப்பு பொதுக்குழுவில் அறிவித்த பிறகு அதிமுகவும் விஜயை விமர்சிக்க தொடங்கியுள்ளது. எனினும், விஜய் தனது பிரசாரத்தில் அதிமுகவை பெரிய அளவில் சீண்டியது இல்லை. எனினும், தற்போதைய அரசியல் சூழலில், விஜயின் அணுகுமுறையில் மாற்றம் இருக்குமா? இல்லை.  அதிமுகவிற்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் வகையில் அவரது பேச்சு இருக்குமா? என்பது சேலம் பிரசாரத்தில் ஓரளவு தெரிந்து விடும் என்று தவெகவினர் எதிர்பார்க்கிறார்கள். விஜய் மீண்டும் பிரசாரம் தொடங்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தவெகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 விஜயை எதிர் பார்த்துக் காத்திருந்த எடப்பாடி  ஏனைய கட்சிகளுடன்  பேச்சு வார்த்தை நடத்துகிறார். செந்தில் பாலாஜிக்குச் சவால் விடுவதற்காக கரூர் சென்று பாதிக்கப்பட்ட விஜய் இப்போது எடப்பாடியின் ஊரில் கால் வைக்கிறார்.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி  இந்த மாதம்    27 அல்லது 28 ஆம் திகதி  திருவள்ளூரில் இருந்து தனது தொகுதி வாரியான பிரசாரத்தை மீண்டும் தொடங்குகிறார்.

வட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, வானிலை நிலவரத்தைப் பொறுத்து இந்த அட்டவணை மாற்றியமைக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரூர் மாவட்டத்தில் நடந்த கூட்ட நெரிசல் சோகத்தைத் தொடர்ந்து, 41 பேர் உயிரிழந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தனது மக்கள் சந்திப்பு பயணத்தை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது பயணத்தை அவர் தொடங்கப் போகிறார். மக்களைக் காப்போம்; தமிழ்த்தாயை மீட்போம் என்ற பெயரில் ஜூலை மாதம் கோவையில் தொடங்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியின் பிரசாரம், இதுவரை 174 சட்டமன்றத் தொகுதிகளை எட்டியுள்ளது.

திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, ஈரோடு ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மீதமுள்ள தொகுதிகளை ஒரு நாளைக்கு இரண்டு என்ற வீதத்தில் அவர் நிறைவு செய்ய இலக்கு வைத்துள்ளார்.

பிரசாரத்தை ஆரம்பிக்கும் அதேவேளை கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளையும் எடப்பாடி நடத்துகிறார்.கூட்டணியை வலுவாக்கும் முயற்சியையும்  எடப்பாடி தீவிரப்படுத்தியுள்ளார். தீவிரப்படுத்தியுள்ளதாம். கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளதாக சொல்கிறார்கள்.

 நோய்வாய்ப்பட்ட‌  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை,  வைத்தியசாலையில் எடப்பாடி சந்தித்தபோது  அடுத்த முதலமைச்சராக உங்களைக் காண விரும்புவதாகத் தெரிவித்தார். இதை அதிமுக தலைவர்கள், சாதகமான பேச்சாகப் பார்க்கிறார்களாம்.  பாமக நிர்வாகிகள் தரப்பிலும், இரு கட்சிகளுக்கும் இடையே நடக்கும் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நன்றாக முன்னேறி வருவதாக சொல்கிறார்கள்.  கட்சியின்  உள்விவகாரம்   வரவிருக்கும் அரசியல் போட்டியில் இருவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நிற்க விரும்புவதாக அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள்  தெரிவித்தார்கள்.

  பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார். செங்கோட்டையன் விவகாரம் தொடர்பாக அவர் பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாமகவைப் போலவே, இன்னும் தேமுதிகவின் நிலைப்பாடு தெளிவாக இல்லை.  அந்தக் கட்சி கடலூர் மாநாட்டுக்குப் பிறகுதான் நிலைப்பாட்டை அறிவிக்கப் போவதாக கூறியுள்ளது. அதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் பிரேமலதா தொடர்பில் இருக்கிறார்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்டமைப்பு இன்னும் வலுவாகவில்லை. இப்போதைக்கு பெரிய கட்சியாக பாஜகவும், அதிமுகவும் மட்டுமே உள்ளன. மற்றவை சிறிய கட்சிகளே. தேமுதிக, பாமக போன்றவை வந்தால்தான் கூட்டணிபலமானதாக  இருக்கும்.

ரமணி

23/11/25

No comments: