Monday, December 15, 2008

இங்கிலாந்தின் சவாலை தகர்த்தது இந்திய அணி



இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 387 ஓட்டங்களை அடித்து ஆறு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது இந்திய அணி.
ஷேவாக், கம்பீர் ஆகியோரின் அதிரடியான அடித்தளமும் சச்சின், யுவராஜ் ஆகியோரின் நிதானமான துடுப்பாட்டமும் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.
இங்கிலாந்து அணி முதலாவது இன்னிங்ஸில் 316 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் 247 ஓட்டங்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டு இந்திய அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
387 என்பது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும் அணிக்கு நெருக்கடியைக் கொடுக்கக் கூடிய இமாலய இலக்கு.
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான ஷேவாக் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களைத் திணற வைத்தார்.
68 பந்துகளில் நான்கு சிக்ஸர் 11 பௌண்டரிகள் அடங்கலாக 83 ஓட்டங்கள் எடுத்த ஷேவாக் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணிக்கு நிம்மதியை அளித்தது.
இந்திய அணி தனி ஒரு வீரரில் தங்கி இருக்கவில்லை என்பதை ஏனைய வீரர்கள் நிரூபித்தனர்.
கம்பீர் 41 ஓட்டங்களுடனும் டிராவிட் இரண்டு ஓட்டங்களுடனும் ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
ஒரு விக்கெட்டை இழந்து 131 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 256 ஓட்டங்கள் என்ற இலக்குடன் ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. டிராவிட் நான்கு ஓட்டங்களுடன் வெளியேறினார். முதல் இன்னிங்ஸில் மூன்று ஓட்டங்களை மட்டுமே பெற்றார். ஆகையினால் டெஸ்ட் அணியில் இருந்து டிராவிட் கழற்றி விடப்படும் நாள் தூரத்தில் இல்லை.
டிராவிட் வெளியேறியதும் கம்பீருடன் இணைந்தார் டெண்டுல்கர். இந்திய அணி 183 ஓட்டங்கள் எடுத்த போது 66 ஓட்டங்கள் எடுத்த கம்பீர் ஆட்டமிழந்தார்.
டெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்த லக்ஷ்மன் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி நான்கு விக்கட்களை இழந்து 224 ஓட்டங்கள் எடுத்தபோது ஐந்தாவது இணைப்பாட்டமாக சச்சினுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார்.
இவர்கள் இருவரும் பொறுப்புடன் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். இந்த ஜோடியைப் பிரிப்பதற்கு இங்கிலாந்து வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தவிபொடியாகின.
இந்திய மண்ணில் இந்திய அணியை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மிகப் பிரமாண்டமான இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது.
டெஸ்ட் போட்டியின் முதல் நான்கு நாட்களும் இங்கிலாந்து அணியின் கையே ஓங்கி இருந்தது.
முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்களை அச்சுறுத்தி ஆட்டமிழக்கச் செய்த இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களின் யுக்தி இரண்டாவது இன்னிங்ஸில் பலிக்கவில்லை.
இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொண்ட சச்சினும் யுவராஜும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து துடுப்பெடுத்தாடினர்.
அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளை டெஸ்ட் போட்டியில் தோல்வியடையச் செய்த இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெற்றது.
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் சதமடித்து தனது 41 ஆவது சதத்தை பூர்த்தி செய்த அதேவேளை இந்திய அணி வெற்றி பெற்றது.
196 பந்துகளுக்கு முகம் கொடுத்த சச்சின் டெண்டுல்கர் ஒன்பது பௌண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்கள் எடுத்தார்.
131பந்துகளுக்கு முகம் கொடுத்த யுவராஜ் ஒரு சிக்ஸர் எட்டு பௌண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்கள் எடுத்தார்.
நான்கு விக்கட்டுகள் இழந்து 387 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணி ஆறு விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக ஷேவாக் தெரிவு செய்யப்பட்டார். டெஸ்ட் போட்டியில் 2008 ஆம் ஆண்டு 2008 ஆம் ஆண்டு 1445 ஓட்டங்கள் எடுத்து ஷேவாக் சாதனை செய்துள்ளார்.

1 comment:

கணினி தேசம் said...

இன்றைய வெற்றி சிறப்புமிக்க வெற்றி.!!

வெற்றி ஓட்டங்களை பெற்றவுடன் சச்சின் முகத்தில் ஏற்பட்ட உற்சாகத்தை பார்க்கவேண்டுமே!