Monday, December 29, 2008

அழகிரியின் அதிரடியால் தடுமாறுகிறது தி.மு.க‌


தமிழக அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் அங்கீகரிக்கிறார்களா என்பதை அறிவதற்கு ஒரு சந்தர்ப்பமாக திருமங்கலம் தொகுதியின் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமங்கலம் தொகுதியில் உறுப்பினரான இளவரசன் மரணமானதால் திருமங்கலம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரான இளவரசன் சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
திருமங்கலம் தொகுதியின் இடைத்தேர்தலிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தவேளையில் அத்தொகுதியின் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்று வைகோ அறிவித்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் தொகுதி வைகோவால் மறக்க முடியாத தொகுதியாகும். திருமங்கலம் தொகுதியில் வைகோ பேசிய பேச்சின் காரணமாகதான் அன்றைய முதல்வர் ஜெயலலிதா வைகோவை பொடா சட்டத்தில் சிறையில் தள்ளினார். வைகோவுடன் பொடா சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்தான் இளவரசன்.
இளவரசனின் இடத்துக்கு அழகு சுந்தரத்தை வைகோ நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. வைகோவுடன் பொடா சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்களில் அழகு சுந்தரமும் ஒருவர். திருமங்கலம் இடைத்தேர்தலின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் நேருக்கு நேர் மோதுவதற்கு ஜெயலலிதா தயாராகி விட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் திருமங்கலம் தொகுதியின் இடைத் தேர்தல் விறுவிறுப்பாக அமையும்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்த மார்க்ஸிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் வெளியேறி விட்டன. மார்க்ஸிஸ்ட் கட்சி அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. ஆயினும் திருமங்கலத்தில் அக்கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காகப் பிரசாரம் செய்யும்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கட்சியுடன் இணையும் என்று இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது விஜயகாந்தின் தேசிய முன்னேற்றத் திராவிடக் கட்சி ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றில் கம்யூனிஸ்ட் கட்சி இணையும் சாத்தியக் கூறு உள்ளது.
யாருடனும் கூட்டணி இல்லை. தனித்தே போட்டியிடுவேன் என்ற விஜயகாந்தின் கொள்கையினால் கம்யூனிஸ்ட் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் சாத்தியமும் உள்ளது. தமிழக அரசாங்கத்தை தோல்வியடையச் செய்ய வேண்டுமானால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவதைத் தவிர வேறு மார்க்கம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி தனியாகவே உள்ளது. அக்கட்சியுடன் கூட்டணி சேர எந்த ஒரு கட்சியும் தயாராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தால் ஒதுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாட்டாளி மக்கள் கட்சியை கண்டுகொள்ளாததனால் இணைப்பு சாத்தியப்படவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியை நோக்கி முதல்வர் கருணாநிதி நேசக்கரம் நீட்டியுள்ளார். செயற்குழு கூடி முடிவெடுக்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சித் திரõவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியனவற்றின் செயற்குழுவின் முடிவு கட்சித் தலைவரின் விருப்பத்துக்கு மாறான முடிவுகளை எடுத்ததில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தை மிக மோசமாக விமர்சித்த பாட்டாளி மக்கள் கட்சி இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் பிரசாரப் பீரங்கியான காடு வெட்டி குரு சிறை வைக்கப்பட்டதும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதும் கூட்டணி பற்றிய ரகசியப் பேச்சுவார்த்தையின் பிரதிபலன் என்றே எண்ணத் தோன்றுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபடப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் டில்லித் தலைவர்களின் விருப்பதை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரும் சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன.
திருமங்கலம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பாரதிய ஜனதாக் கட்சி அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முன்னேற்ற திராவிடக் கழகம் ஆகியவற்றுடன் சமமாகப் போட்டியிடும் வல்லமை இல்லாததனால் பாரதீய ஜனதாக் கட்சி இடைத் தேர்தலில் இருந்து ஒதுங்கி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலம் சற்று குறைந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலம் கொஞ்சம் கூடி உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை, மின்வெட்டு ஆகியன திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்கு எதிரான முக்கிய பிரசாரமாக அமைய உள்ளது.
இலவசப் பொருட்களின் பட்டியலினால் ஆட்சியை பிடித்த திராவிட முன்னேற்றக் கழகம், பொங்கலுக்காக பொருட்களை இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இது தவிர மாறன் குடும்பத்துடனான சமரசமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக அமைய உள்ளது. சன் தொலைக்காட்சியின் பிரசாரம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சாதகமானதாக உள்ளது.
முதல்வர் கருணாநிதியின் மகனான மு. க. அழகிரியின் கோட்டையாக மதுரை விளங்குவதால் தனது கௌரவத்தை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு அழகிரி தள்ளப்பட்டுள்ளார். அவர் மீது அதிகளவு நம்பிக்கை வைத்துள்ள முதல்வர் பிரசாரக் குழுத் தலைவராக அவரை நியமித்துள்ளார்.
தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தாலும் மதுரை முதல்வர் மு.க.அழகிரி என்றே அங்குள்ளவர்கள் கூறுவார்கள். அழகிரியின் பலத்தினால் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் நம்பிக்கையில் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட் பாளராக லதா அதியமான் நியமிக்கப்பட் டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டப் பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற அதியமான் இறந்த பின்னர் அவரது மனைவியாரான லதா கழகப் பணியைச் செய்கிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக முத்துராமலிங்கம் போட்டியிடு கிறார்.
1996ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் இப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமாக உள்ளார்.
திருமலங்கலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தனப்பாண்டியனை தேசிய முன்னேற்ற திராவிடக் கட்சி மீண்டும் தெரிவு செய்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முன்னோடியாக திருமங்கலம் இடைத் தேர்தல் அமைய உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்களா? இல்லையா? என்பதை திருமங்கலம் இடைத் தேர்தல் முடிவு வெளிப்படுத்த உள்ளது
.வர்மாவீரகேசரி 28 12 2008

No comments: