Tuesday, June 2, 2009
முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும்காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்
தமிழக அரசாங்கத்தில் தமக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என்ற கோஷத்தை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் உரக்கக் கூறத் தொடங்கி விட்டனர். மத்திய அரசின் அமைச்சரவையில் இடம்பிடிப்பதற்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டதனால் மனஸ்தாபங்களின் பின்னர் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு இல்லாமலேயே மத்தியில் ஆட்சி அமைக்கக் கூடிய பெரும்பான்மை காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கொடுக்கும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளாது தமிழக முதல்வர் முரண்டு பிடித்ததை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் விரும்பவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தயவுடனேயே திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி புரிகிறது. தமிழக அமைச்சரவையில் தமக்கும் பங்கு தரும்படி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விடுத்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் கண்டு கொள்ளவில்லை. அமைச்சுப் பொறுப்புகளுக்காக தமிழக முதல்வர் மத்திய அரசை மிரட்டியதால் தமிழக அரசில் தமக்கும் அமைச்சுப் பதவி வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களின் வேண்டுகோளைப் புறக்கணித்த முதல்வர் கருணாநிதி மத்தியில் தனக்கு வேண்டியவர்களை அமைச்சராக்குவதில் குறியாக இருந்தார். தமிழக முதல்வரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது என்று காங்கிரஸ் தரப்பில் இருந்து உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது.முன்னாள் அமைச்சர்களான டி.ஆர். பாலு, ராசா ஆகியோருக்கு பதவி வழங்க முடியாது என்று காங்கிரஸ் தரப்பில் உறுதியாக கூறப்பட்டது. தயாநிதி மாறன், மு.க.அழகிரி, கனிமொழி ஆகிய மூவரின் பெயர்களும் தமிழக முதல்வர் கொடுத்த பெயர்ப் பட்டியலில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை அமைச்சராக்க முடியாது என்று காங்கிரஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.
இதனால் கனிமொழி சுழற்றிவிடப்பட்டார். தயாநிதி மாறனும் அழகிரியும் கபினட் அந்தஸ்து உள்ள அமைச்சரானார்கள். அரசியல் வேண்டாம் இலக்கியமே போதும் என்றிருந்த கனிமொழி அரசியலுக்கு இழுத்து வரப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார். கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினரானதும் விரைவில் அமைச்சராவார் என்று எதிர்வு கூறப்பட்டது. புதிய அரசில் கனிமொழி அமைச்சராவார் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமானது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ வெளியேறியதும் முரசொலி பத்திரிகையைக் கவனிப்பதற்கும் கட்சியை வளர்க்கவும் மு.க. அழகிரி மதுரைக்கு அனுப்பப்பட்டார். மதுரையில் முடி சூடா மன்னனாக விளங்கும் அழகிரி அரசியலில் தன்னை முழுமையாக வெளிப்படுத்தி தனது அரசியலை நடத்தினார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் அøமச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரானார். அரசியலில் அனுபவம் இல்லாத அழகிரி அதிர்ஷ்டத்தினால் அமைச்சரானார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக சிறைவாசம் சென்று அரசியல் அனுபவம் உள்ள ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலத்தின் பின் இப்போதுதான் நிறைவேறி உள்ளது.
ஸ்டாலின் முதல்வராகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று மேடை தோறும் பிரசாரம் செய்யப்பட்டது. நீங்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சிகரமான செய்திவிரைவில் வெளிவரும் என்று முதல்வர் கருணாநிதி பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியின் பின்னணியில் ஸ்டாலினின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆகையினால் அவருக்கு உரிய கௌரவம் வழங்கப்பட்டுள் ளது. முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் உள்ளாட்சித்துறை அமைச்சரான ஸ்டாலினை துணை முதல்வராக ஆளுநர் பர்னாலா அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக முக்கியமானவர்களில் ஒருவரான டி.ஆர். பாலுவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. துணை சபாநாயகர் பெயருக்கு டி.ஆர். பாலுவின் பெயர் அடிபடுகிறது. டி.ஆர். பாலுவுக்கு மிக முக்கியமான பொறுப்பு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இல்லையேல் கடந்த ஆட்சிக் காலத்தில் டி.ஆர். பாலுவின் முறை கேடு காரணமாகவே அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மையாகி விடும் சூழ்நிலை உள்ளது.
மத்தியில் அமைச்சரவையில் திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பிடித்தது போல் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசில் பங்கு பெற வேண்டும் என்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கையை தமிழக முதல்வர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு தமிழக அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும், அமைச்சராக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர்.
அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை தமிழகத்தில் இருந்து அகற்றியது. அண்ணாவின் அன்புத் தம்பியான கலைஞர் கருணாநிதியின் அரசு காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்தது என்ற அவப் பெயர் வந்து விடுமோ என்று தமிழக முதல்வர் கருணாநிதி அஞ்சுகிறார்.
மத்தியில் அமைச்சரவையில் இடம்பிடிப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் முட்டி மோதியதால் தமிழகத்தில் காங்கிரஸிற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தான் தமிழக அரசு தப்பிப் பிழைத்துள்ளது. ஆகையினால் தமிழக காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைக்கு சாதகமாக பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது என தமிழக காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தும் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் பங்கு கொடுக்க விரும்பவில்லை.
தமிழகத்தில் காங்கிரஸ் பல கோஷ்டிகளாகப் பிரிந்து செயற்படுவதனால் அதன் செயற்றிறன் குறைந்துள்ளது. இதனைக் காரணம் காட்டி அமைச்சரவையில் காங்கிரஸை சேர்ப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் மறுப்புத் தெரிவிக்கலாம் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத் தலைவர்கள் படுதோல்வி அடைந்ததும் மக்கள்மத்தியில் காங்கிரஸுக்குச் செல்வாக்கு இல்லை என்று காரணம் கூறி தவிர்த்து விடும் சூழ்நிலையும் உள்ளது.
ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழா, தமிழக காங்கிரஸின் அமைச்சரவை ஆசை இரண்டையும் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளார் முதல்வர் கருணாநிதி.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு30/05/09
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
காங்கிரசாரானாலும், பா.ம.கா வினரானாலும் கலைஞர் ஒன்றுதான் செய்வார்.
அமைச்சரவையில் இடம் தர மாட்டார். மாறாக, இதயத்தில் இடம் தந்து விடுவார்.
அதிமுக வை கூட்டணி கட்சிகள் கைவிட்டனரா ...........? கடவுளே...!
Post a Comment