Tuesday, October 18, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 8பாசமுள்ள அண்ணன் தங்கை உறவை கொச்சைப்படுத்துகிறது சமூகம். தங்கையின் கணவன் மனைவி மீது சந்தேகப்படுகிறான். தன் குழந்தையின் தகப்பன் தான் இல்லை என்று கூறுகிறான். தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியால் அண்ணன் தங்கை உறவை வெளிப்படுத்த முடியாது தவிக்கிறான் நாயகன். இப்படி ஒரு வித்தியாசமான கதை அம்சத்துடன் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இதய வீணை.
பெற்றோரை கொலைசெய்த‌தவனை பழி வாங்குவது, கடத்தல் கும்பலை அழிப்பது. தொழிலாளர்களை ஏமாற்றும் முதலாளிக்கு பாடம் புகட்டுவது போன்ற அடித்தடி படங்கள்தான் எம்.ஜி.ஆருக்கு புகழைத் தேடிக் கொடுத்தன. அவற்றிலிருந்து வேறுபட்டு கதை அம்சமுள்ள சில படங்களும் எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்த்தன‌. இதய வீணை படத்தில் பாசமுள்ள அண்ணனாக நடித்துபாராட்டுப்பெற்றார்.
எம்.ஜி.ஆருக்கும் தந்தை வக்கீலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் உங்கள் மகன் என்பதை வெளிப்படுத்த மாட்டேன் என்று சபதம் செய்கிறார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் தங்கை லக்ஷ்மி பணக்காரனான சிவக்குமாரை காதலிக்கிறார். இந்த காதலுக்குப் பல தடைகள் எழுந்தது. திருமணம் நடக்க உதவி புரிகிறார் எம்.ஜி.ஆர். லக்ஷ்மியின் அண்ணன் தான் எம்.ஜி.ஆர் என்பது சிவகுமாருக்கு தெரியாது.
எம்.ஜி.ஆர் மஞ்சுளாவை காதலிக்கிறார்.வில்லன்களான நம்பியார், ஆர்.எஸ்.மனோகர் ஆகியோரின் சூழ்ச்சியால் எம்.ஜி.ஆர் மீது கொலைப்பழி விழுகிறது. எம்.ஜி.ஆர் தலை மறைவு வாழ்க்கை வாழுகிறார். ஒரு நாள் தங்கை லக்ஷ்மியின் வீட்டுக் கூரையின் மீது ஏறி தப்பிச் செல்கிறார் எம்.ஜி.ஆர். அப்போது லக்ஷ்மி குளித்துக் கொண்டிருக்கிறாள். இதனைக் கண்ட சிவகுமார் தனது மனைவி குளிப்பதை எம்.ஜி.ஆர் பார்த்ததாக கூறுகிறார். சிவகுமாரின்சுடுசொற்களால் லக்ஷ்மி மனம் கலங்குகிறாள். எம்.ஜி.ஆர் யாரென்று சொல்ல முடியாது தவிக்கிறாள். எம்.ஜி.ஆருக்கும் லக்ஷ்மிக்கும் தொடர்பு இருப்பதாக ஊரே கூறுகிறது. எம்.ஜி.ஆரின் காதலி மஞ்சுளாவும் இதனை நம்புகிறார். இறுதியில் தனது திறமையால் கொலைப்பழியிலிருந்து தப்புகிறார் எம்.ஜி.ஆர். மகனின் பெருமையை உணர்ந்த தகப்பன் எம்.ஜி.ஆர் தான் தன் மகன் என்று கூறுகிறார். எம்.ஜி.ஆர் லக்ஷ்மியின் சகோதரர் என்ற உண்மை அறிந்து சிவகுமார் மனம் திருந்துகிறார்.
பிரபல எழுத்தாளரான மணியன் எழுதி வாரம் @தாறும் ஆனந்த விகடனில் வெளியான தொடர் நாவல்தான் இதய வீணை. இலட்சக்கணக்காண வாசகர்கள் ஆனந்த விகடனை வாங்கியதும் இதயவீணை தொடரைத்தான் முதலில் படிப்பார்கள். தனது எழுத்துக்களால் வாசகர்களை கட்டிவைத்த மணியனின் நாவலுக்கு வசனம் எழுதியவர் சொர்ணம். நாவலின் மூலக்கதை சிதறாமல் படமாக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர், மஞ்சுளா, எம்.ஜி.சக்கரபாணி, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், லக்ஷ்மி, சிவகுமார், ஜிசகுந்தலா, தேங்காய் சீனிவாசன், ஏ.சகுந்தலா, சச்", எஸ்.லீலா, பூரணம், விஸ்வநாதன், மாஸ்டர் சேகர், மாஸ்டர் பிரபாகர், ஐசரி வேலன், டி.என்.வெங்கட்ராமன், திருப்பதி சாமி, கன்னையா, பாண்டு, உசிலமணி ஆகியோர் நடித்தனர்.வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் பாடல்களை எழுதினர். சங்கர் கணேஷ் இசையமைத்தனர். காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர், பொன்னந்தி மாலை பொழுது, இன்று போல என்றும் வாழ்க எங்கள் வீட்டு திருமகளே, ஆனந்தம் இன்று ஆரம்பம், ஒரு வாலுமில்ல நாலு காலுமில்ல ஆகிய பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. ஒளிப்பதிவு ஏ.சண்முகம். காஷ்மீரில் அழகாக அற்புதமாகப் படமாக்கினார் மணியனும் வித்துவார் வேலட்சுமணனும் இணைந்து தயாரித்தனர். இரட்டையர்களான கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள்.
சிறந்த கதையம்சம் உள்ள இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிப்பெற்றது. ஹிந்தியிலும் தெலுங்கிலும் டப் பண்ணி வெளியிட்டார்கள்.
மித்திரன்16/10/11

No comments: