Monday, October 24, 2011

தடுமாறும் தலைமைகள்தவிக்கும் @வட்பாளர்கள்


தமிழக உள்ளாட்சித் தேர்தலை ஒரு அறிக்கையின் மூலம் கருணாநிதி மாற்றியதால் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தேர்தலின் போது தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தைக்கு ஒரு குழு அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவு காணப்படுவதே தமிழக அரசியலின் வழமையான செயற்பாடு. இதை எல்லாம் மீறி யாரையும் கலந்து பேசாமல் தேர்தலில் தனித்துப் போட்டி என்று தடாலடியாக அறிவித்தார் கருணாநிதி. கருணாநிதிக்குச் சளைத்தவர் இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக ஜெயலலிதாவும் தனிவழி செல்ல முடிவு எடுத்திருந்தார்.
ஜெயலிலதாவின் பாணி சற்று வித்தியாசமானது. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்பே மேயர் வேட்பாளர்களின் பெயரை அறிவித்து விட்டார். பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஏனைய வேட்பாளர் பட்டியலைக் கட்டம் கட்டமாக வெளியிட்டார். ஜெயலலிதாவுடன் மிக ஒட்டியிருந்த கூட்டணிக் கட்சிகள் தாமாகவே வெளியேறின.
ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பதவிகளுக்கு நான்கு இலட்சத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தனித் தனியே போட்டியிடுவதால் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாதுள்ளது. மாநிலத் தேர்தல் அதிகாரியின் மேற்பார்வையில் நடைபெறும் தேர்தல் என்பதனால் ஆளும் கட்சிக்குச் சாதகம் அதிகம். இது வரை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும்கட்சி தோற்றதில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஒரு தேர்தலிலும் தனித்துப் போட்டியிடவில்லை. இம்முறையும் பலமில்லõத மூன்று சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்தக் கட்சிகளினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்தவித இலாபமும் இல்லை. அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றி வாய்ப்பைத் தரக் கூடிய பலம் அந்தச் சிறிய கட்சிகளுக்கு இல்லை. தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற சகல தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், அண்ணாதிராவிடக் முன்னேற்ற கழகத்தைப் பின் தள்ளியது.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்திலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி வாய்ப்பை இழந்தது. விஜயகாந்தும், ஜெயலலிதாவும் இணைந்ததனால் இருவரும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றனர். தமிழகச் சட்டசபைத் தேர்தல்களின் போது ஒட்டி உறவாடிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், தேசிய முற்போக்குத் திராவிட முன்னேற்றக் கழகமும் இப்போ கீரியும் பாம்பும் போல் ஆளை ஆள் எதிர்த்து நிற்கின்றன. தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது ஜெயலலிதாவும், விஜயகாந்தும் ஒரே மேடையில் ஏறவில்லை. தேர்தல் முடிந்த பின்னர் தமிழக அரசைப் பற்றி பாராட்டியும், விமர்சித்தும் விஜயகாந்த் பேசவில்லை. தமிழக அரசின் நூறு நாள் ஆட்சி போன்று கூட்டணித் தலைவர்கள் புகழ்ந்து பேசிய போது விஜயகாந்த் மௌனமாக இருந்தது தேர்தல் முடிவுக்குப் பின்னர் இரு கட்சியின் தேவை முடிந்து விட்டது. ஆகையினால் கூட்டணி தேவை இல்லை. இந்த நிலைப்பாட்டையே ஜெயலலிதாவும், விஜயகாந்தும் எடுத்திருந்தனர்.
ஜெயலலிதா அவமானப்படுத்தியதும் மார்க்ஸிஸ்ட் கட்சி ஓடிச் சென்று விஜயகாந்துடன் ஒட்டிக் கொண்டது. பூட்டி இருந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கதவைப்பலம் கொண்ட மட்டும் தட்டிப் பார்த்து ஏமாந்த இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி கடைசிநேரத்தில் விஜயகாந்தைத் தேடிச் சென்றது. கொம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதா மீது நம்பிக்கை வைத்ததனால் விஜயகாந்துடனும் கூட்டணிச்சேர முடியாமல் நிலை உள்ளது. கொம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்ஸிஸ்ட் கட்சியும் பல சந்தர்ப்பங்களில் ஒரே நாளில் பிரச்சினைகளை வெளிப்படுத்திய போதிலும் தேர்தல் நேரத்தில் மட்டும் யார் பலசாலி என்பதில் தமக்குள் மோதிக் கொள்ளவுள்ளனர். இப்போதும் அப்படிப்பட்ட ஒரு நிலையே தோன்றியுள்ளது.
தமிழக காங்கிரஸின் நிலை மோசமாகவே உள்ளது. 1989 ஆம் ஆண்டின் முன்னர் இப்போது தான் தனியாகத் தேர்தலைச் சந்திக்கிறது. காங்கிரஸின் கட்சி. 1989 ஆம் ஆண்டு 9.83 சதவீத வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலின் போது தமது உண்மையான வாக்கு வங்கியே காங்கிரஸ் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பமாக ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டிப் பூசல் இன்னமும் முடிந்தபாடில்லை. தமிழக சட்ட மன்றத் தேர்தலின் பின்னர் தமிழக காங்கிரஸ் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்தார் தங்கபாலு. இன்று வரை அவருக்குப் பதிலாக இன்னொருவர் தலைவராக நியமிக்கப்படவில்லை. இப்போதும் தான் தான் தலைவர் என்ற பந்தாவில் வலம் வருகிறார் தங்கபாலு.
வேட்பாளர்பட்டியலில் ஒருவரின் பெயர் நீக்கப்பட்டதõல் கடந்த வாரம் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பெரும் ரகளை ஏற்பட்டது. அதிகாரிகளால் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டன. தங்கபாலுவின் படம் கழற்றி எறியப்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெறும் குத்து வெட்டுக்களை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்துள்ளனர். இழந்த பெருமையை மீட்பதற்கு கங்கணம் கட்டியுள்ளனர் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள். தமிழக சட்ட மன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழக தோல்விக்குக் காரணமாக ஸ்பெக்ரம் இப்போ வலுவிழந்துள்ளது. ஸ்பெக்ராம் விவகாரத்தில் சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் பெயரும் அடிபடுவதனால் ஸ்பெக்ரம் விவகாரம் திசை திரும்பி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு மின்வெட்டும் ஒரு காரணம். ஜெயலலிதாவின் ஆட்சியில் மின் வெட்டு தாண்டவமாடுகின்றது. தமிழ் சட்ட மன்றத் தேர்தலின் வெற்றியைத்தக்க வைக்க வேண்டிய நிலையில் உள்ளõர் ஜெயலலிதா.
காங்கிரஸும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையைக் கடந்த காலங்களில் மேற்கொண்டன. உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்களுக்குரிய சந்தர்ப்பத்தை இரண்டு கட்சிகளும் வழங்கவில்லை. இளைஞர்கள் இதனால் நொந்து போயுள்ளனர்.
தமிழகத் தேர்தல்களின் போது ரஜினியின் பெயர் அடிபடாத சந்தர்ப்பங்கள் மிக மிகக் குறைவு. சட்டசபைத் தேர்தலின் போது வேட்பாளர்களும், இரண்டாம் கட்டத் தலைவர்களும் ரஜினியைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி சுய விளம்பரம் தேடினார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேயர் வேட்பாளரின் வெற்றிக்காக ரஜினி ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.
சூரன்.ஏ.ரவிவர்மா



வீரகேசரிவாவாரவெளியீடு09/10/11

No comments: