Saturday, October 29, 2011

கடாபியைஅழித்த மக்கள்புரட்சி

மன்னர் ஆட்சியிலிருந்த லிபியா 1969 ஆம் ஆண்டு செப்ரம்பர் முதலாம் திகதி இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் விடுதலையடைந்தது. இளம் இராணுவ அதிகாரி முயாமத் அபு மின்யர் அல் கடாபி தலைமையிலான இராணுவக் குழு லிபியாவைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. மனனராட்சியிலிருந்து லிபியாவை மீட்ட கடாபியை மக்கள் புகழ்ந்தார்கள். வீதியில் இறங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். கடாபி என்ற மாவீரனைப் பெற்றதால் லிபியா மகிழ்ச்சியடைந்தது. 42 வருடங்களின் பின்னர் லிபியத் தலைநகர் திரிபோலியிலிருந்து சொந்த ஊரான சியாட்டிற்கு துரத்தப்பட்டார் கடாபி.
இரத்தம் சிந்தா புரட்சியின் மூலம் லிபியாவை விடுதலை செய்த கடாபியிடமிருந்து லிபியாவை மீட்க நடந்த போராட்டத்தில் ஏராளமான இரத்தம் சிந்தப்பட்டது. 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணமானார்கள். 42 வருடங்களின் முன்னர் விடுதலை வீரன் கடாபியைப் பார்த்து வியந்த லிபிய மக்களின்று கடாபியின் பிணத்தைப் பார்க்க வரிசையில் நிற்கிறார்கள். மேற்குலகுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய கடாபிக்கு அவரது நடவடிக்கையே எமனாக அமைந்தது. எகிப்தியத் தலைவர் கமால் அப்துல் நாசரால் ஈர்க்கப்பட்ட கடாபி, நாசரைப் போன்றே புரட்சியின் மூலம் லிபியாவைக் கைப்பற்றினார்.
அரபுலகில் அண்மையில் ஏற்பட்ட புரட்சியினால் டியூனிஷிய ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பி ஒடிவிட்டார். எகிப்து ஜனாதிபதி கொஸ்னி முபாரக் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்நோக்கியுள்ளார். லிபியாவில் புரட்சி வெடித்தபோது தனது எதிரிகளை அடக்கி விடலாம் என்றே கடாபி நினைத்தார். கடாபிக்கு எதிரான புரட்சிப் படைகளின் பின்னால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகள் இருந்தன. வெளிநாடுகள் ஆயுத உதவி செய்தாலும் புரட்சிப் படையை அழிக்கக் கூடிய ஆயுத பலம் கடாபியின் இராணுவத்திடம் உள்ளது. ஐ.நா. வும் சர்வதேச நீதிமன்றமும் கடாபிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததனால் லிபியாவின் களநிலைவரம் மாறியது. கடாபிக்கு எதிரான புரட்சிப் படைக்கு ஆதரவாக நேட்டோ களமிறங்கியது. கடுமையான போராட்டத்தின் பின் லிபியத் தலைநகர் திரிபோலி வீழ்ந்தது. கடாபியின் குடும்பம் தப்பிச் சென்றது.


தாய் நாட்டை விட்டு ஓடமாட்டேன். எலிகளைப் போல் எதிரிகளைத் தேடி அழிப்பேன் என்று சூளுரைத்த கடாபி கானுக்குள் பதுங்கியபோது வெளியே இழுத்து எடுத்து சுட்டுக் கொல்லப்பட்டார். கடாபி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காலில் பலத்த காயம் உள்ளது என்று முதலில் செய்தி வெளியானது. அந்தச் செய்தியை உறுதிப்படுத்த முன்பே கடாபி கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி வெளியானது. கைது செய்யப்பட்ட பின் கடாபி கொல்லப்பட்டரா அல்லது சண்டையின்போது கொல்லப்பட்டாரா என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கடாபிக்கு இழைக்கப்பட்ட அநீதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காலில் பலத்த காயமடைந்ததாகக் கூறப்பட்ட கடாபி நடந்து சென்ற காட்சி தெளிவாகத் தெரிந்தது. கடாபியைக் கண்டதும் மாத்திரம் மேலிட்ட புரட்சிப் படையினர் அவர்மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இத்தனை காலமாக எங்களை வதைத்த கடாபியைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே அங்கிருந்தவர்களிடம் மேலோங்கியது. கடாபியைக் காப்பாற்ற அங்கு யாருமே இல்லை. கடாபியை உயிருடன் பிடிக்கப்பட்டதும் அவரைக் காண்பதற்காக புரட்சிப் படையினர் பலரும் முண்டியடித்தனர். தன்னைக் கைது செய்த புரட்சிப் படை வீரர்களிடம் என்ன தவறு செய்தேன் எனக் கேட்டார். தன்னைச் சுட வேண்டாம் என்று தெரிவித்தார். அவரின் பேச்சை அங்குள்ள யாருமே கவனத்தில் எடக்கவில்லை. கடாபியின் பேச்சைக் கேட்பதற்காக ஒரு காலத்தில் முண்டியடித்த மக்கள் கூட்டம் இன்று அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
கடாபியின் மகன் முட்டாஸி உயிருடன் கைது செய்யப்பட்டு பின் சிறிது நேரத்தின்பின் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்திவெளியாகியுள்ளது. புரட்சிப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்ட பின்னரே சுட்டுக் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தற்போது வெளியாகி உள்ளன. இதுவும்
யுத்தக்குற்றவிசாரணைக்குட்படலாம் எனத்தெரிகிறது.
கடாபி உயிருடன் கைது செய்யப்பட்டால் வெளிநாட்டில் ஒப்படைக்க மாட்டோம் நாம் விசாரணை செய்து தண்டனை வழங்குவோம் என்று புரட்சிப்படைத் தலைவர்கள் கூறியிருந்தனர். ஆனால் கடாபியைக் கைது செய்த புரட்சிப்படை வீரர் ஒருவர் கடாபியைச் சுட்டுக் கொலை செய்துவிட்டார். தலையிலும் கையிலும் சுடப்பட்ட கடாபி அரைமணி நேரத்தின் பின்னரே உயிர் பிரிந்ததாக புரட்சிப்படை வீரர் ஒருவர் கூறியுள்ளார். நிராயுத பாணியாகச் சரணடைந்த கடாபி சுட்டுக் கொலை செய்ததால் புரட்சிப் படை மீது யுத்த மீறல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை அடக்குவதற்காகப் புகுந்த அமெரிக்காவும் நேட்டோ படைகளும் தலிபான்களையும் ஒஸõமாவையும் அங்கிருந்து விரட்டின. பாகிஸ்தானில் ஒஸாமாவை அமெரிக்காவின சிறப்புப் படையணி சுட்டுக் கொலை செய்து சடலத்தையும்கொண்டு சென்றது. ஈராக்கில் சதாமின் ஆட்சியை அகற்றுவதற்காகக் களம் புகுந்த அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் சதாமை கைது செய்து தூக்குத் தண்டனை வழங்கினர்





ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் நேரடியாகத் தலையிட்ட அமெரிக்காவும் நேட்டோப் படையும் லிபியாவில் புரட்சிப் படைகளுக்கு உறுதுணையாக இருந்து கடாபியை அழித்துவிட்டமை இறைச்சி பதனிடப் பயன்படும் அறையொன்றில் கடாபியினதும் அவரது மகனினதும் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. அச்சடலங்களைப் பார்ப்பதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
உலகெங்கும் உள்ள வங்கிகளிலும் ரியல் எஸ்டேட் முதலீடுகளிலும் கடாபிக்கு 200 பில்லியன் டொலர் சொத்து இருப்பதாக லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் 37 பில்லியன் டொலர் சொத்துக்களும் லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள கடாபியின் 30 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புரட்சிப் படையும் சில வெளிநாடுகளும் விரும்பியது போல கடாபி அழிக்கப்பட்டு விட்டார். இனி லிபியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும். கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் லிபியா சின்னாபின்னமாகியுள்ளது. கட்டடங்கள் மதகுகள் வீதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. இவற்றை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அவற்றுக்கான நிதியை எப்படிப் பெறுவது என்பது லிபியாவின் அடுத்த ஆட்சியாளர்களில் முன்னாள் உள்ள பாரிய சவாலாகும்.








கடாபியை அகற்றுவதற்காகப் போராடிய புரட்சிப் படையிலும் பல பிரிவுகள் உள்ளன.
அந்தப் பிரிவினைகளை இடைக்கால அரசு எப்படிச் சமõளிக்கப் போகிறது. இடைக்கால அரசு எவ்வளவு காலத்துக்கு செயற்படும் நிலையான ஆட்சி எப்படி அமையும் போன்ற கேள்விகளுக்கு சரியான விடை கிடைக்கவில்லை. ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள பொம்மை அரசு போன்ற ஒரு பொம்மை அரசு லிபியாவில் ஏற்படுமா அல்லது லிபிய மக்கள் விரும்பும் அரசு ஏற்படுமா என்ற சந்தேகம் உள்ளது.
கடாபியின் உடல் ஆறு நாட்களின் பின்னர் பாலைவனத்தில் இரகசியமாகப் புதைக்கப்பட்டுள்ளது. சதாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சதாமின் ஆதரவாளர்கள் கூடி சதாமை நினைவு கூர்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒஸாமா பின் லேடனின் உடல் கடலில் வீசப்பட்டது. இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கு விரோதமாக ஒஸாமாவின் உடல் கடலில வீசப்பட்டது என்று குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அக் குற்றச்சாட்டுக்கு இன்னும் சரியான பதிலை அமெரிக்கா வழங்கவில்லை. கடாபி உடலையும் பகிரங்கமாக புதைக்கப்பட புரட்சிப்படை விரும்பவில்லை. அதன் காரணமம்க இரகசியமாக கடாபியின் உடல் புதைக்கப்பட்டது.
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்தால் அவரது உடல் 24 மணி நேரத்தினுள் புதைக்கப்பட வேண்டும். கடாபி அவரது மகன் முட்டாஸி அமைச்சர் யுனிஸ் ஆகியேõரின் உடல்கள் ஆறு நாட்களின் பின்னரே அடக்கம் செய்யப்பட்டன. இறைச்சி பாதுகாக்கும் குளிர்சாதன அறையில் மூவரின் சடலமும் நிலத்தில் வைக்கப்பட்டிருந்தன. கடாபியின் உடலைப் பார்த்த பலரும் புகைப்படம் எடுத்ததுடன் கடாபியைத் திட்டித் தீர்த்தனர்.
ஆட்சியைக் கைப்பற்றியபோது லிபியாவை நல்ல வழியில் இட்டுசென்றார் கடாபி. காலம் செல்ல செல்ல பதவி ஆசையும் குடும்பத்தின் சுயநலமும் கடாபியைத் தவறான வழிக்கு அழைத்துச் சென்றன. கடாபி இல்லாத லிபியாவை நினைத்துபார்க்க சிரமமாக உள்ளது.
ரமணி

மெட்ரோநியூஸ் 28/10/11


No comments: