Sunday, October 23, 2011

தி.மு.க.அ.தி.மு.க பலப்பரீட்சை

தமிழக அரசியல் களம் புதியதொரு பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு சகல அரசியல் கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன. நீண்ட காலத்தின் பின்னர் மும்முனைப் போட்டியைச் சந்திக்கத் தயாராகியுள்ளது. தமிழகம் வாக்கு வங்கி, சாதிப்பலன் அரசியல் செல்வாக்கு, தனி மனித ஆதிக்கம் என்பனவற்றின் மூலம் இதுவரை தேர்தலைச் சந்தித்த தமிழக அரசியல் கட்சிகள் தமது உண்மையான பலம் எது என்பதை அறியக்கூடிய நேரம் வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் பலவீனங்களைத் தமது பலமாக மாற்றிய கட்சிகள் நிலை குலைந்து போயுள்ளன.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக வைகோவும் டாக்டர் ராமதாஸும் ஏற்கெனவே அறிவித்து விட்டனர். திராவிடக் கட்சிகளால் ஏமாற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்டவர் வைகோ மகனின் நாடாளுமன்றப் பதவிக்காக திராவிடக் கட்சிகளை ஏமாற்றியவர் டாக்டர் ராமதாஸ். வைகோ கட்சித் தொண்டர்களையும், டாக்டர் ராமதாஸ் வன்னியர்களையும் நம்பி தனியாகக் களமிறங்கியுள்ளனர். பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு யாருமே முன்வராத நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் தம்மைக் கைவிட மாட்டார்கள் என்ற ஏனைய கட்சிகளின் தலைவர்கள் நினைத்தனர். அவர்களின் நினைப்பு தவிடு பொடியாகியது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போதும் தமிழக சட்டமன்றத் தேர்தலின்போதும் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் மிரட்டிப் பணியவைத்த கூட்டணிக் கட்சிகள், தமிழக உள்ளாட்சித் தேர்தலின் போது தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் உதவியின்றி தனித்துப் போட்டியிடப் போவதாக கருணாநிதி அதிரடியாக அறிவித்தார். கருணாநிதியின் தனிவழி அறிவிப்பால் காங்கிரஸும் விடுதலைச் சிறுத்தைகளும் அதிர்ச்சியடைந்தன. தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த கருணாநிதியின் அதிரடி அறிவிப்பினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகள் பெரிதும் மகிழ்ந்தன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகளின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மேயர் வேட்பாளர்களின் பெயரை வெளியிட்டார் ஜெயலலிதா. குறைந்தது இரண்டு மேயர் களையாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த விஜயகாந்துக்கு ஜெயலலிதாவின் அறிவிப்பு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஜெயலலிதாவின் அறிவிப்பினால் கலக்கமடைந்த இடதுசாரிகள் நிலைமையைச் சீர்படுத்துவதற்கு முயற்சி செய்தன. ஜெயலலிதாவின் பிடிவாத குணம் இறங்கிவர மறுத்தது. நிலைமை கட்டுமீறிப் போவதை உணர்ந்த மார்க்சிஸ் கட்சி வெளியேறியது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கதவு திறக்காதா எனத் தவமிருந்தது. கதவு திறக்கப்படாதென உறுதியாகத் தெரிந்ததும் விஜயகாந்திடம் சரணடைந்தது கம்யூனிஸ்ட் கட்சி.
குடியரசுக் கட்சி, பார்வர்ட் பிளாக், முஸ்லிம் லீக் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பேரம் பேசும் கட்சிகளுடன் ஜெயலலிதா கூட்டணி சேரவில்லை. கொடுத்ததை வாங்கும் சமத்துவகட்சிகளையே தன் அருகில் வைத்திருக்கிறார் ஜெயலலிதா. கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகவே விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் புண்ணியத்தால் எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானதை ஜெயலலிதா ரசிக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்தைக் கூட்டணியில் சேர்த்தால் அவர் இன்னமும் அதிகமாகச் செல்வாக்குப் பெற்று விடுவார் என அஞ்சுகிறார் ஜெயலலிதா.

மக்களுடனும் ஆண்டவனுடனும் தான் கூட்டணி என்று வாய் கிழியப் பேசிய விஜயகாந்த், தமிழக சட்டமன்றத்தேர்தலில் கருணாநிதிக்குப் பாடம், புகட்டுவதற்காக ஜெயலலிதாவுடன் சேர்ந்தார். உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதா கைவிட்டதும் இடதுசாரிகளைக் கைப்பிடித்தார். சந்தர்ப்பவாத அரசியல் என்ன என்பதை விஜயகாந்த் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளார். சட்டமன்றக் கூட்டத் தொடரில் வாய் திறக்காத விஜயகாந்த் தேர்தல் பிரசார மேடைகளில் அனல் பறக்க பிரசாரம் செய்யத் தயõராகி விட்டார்.
கருணாநிதியே கதி என்று இருந்த திருமாவளவன் அரசியல் சதுரங்கத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டார். காங்கிரஸ் கட்சியைத் தூக்கி எறிந்த கருணாநிதி திருமாவளவனையும் கழற்றி விட்டார். சுனாமியில் சிக்கிய நாடு போல கதி தெரியாது கலங்கிப் போயுள்ளார் திருமாவளவன். இஸ்லாமிய அமைப்புகளையும் தலித் அமைப்புகளையும் ஒன்றிணைத்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளிய கிருஷ்ணசாமி, ஜெயலலிதா இன்னமும் திருந்தவில்லை என்ற உண்மையை ஒப்புக் கொண்டுள்ளõர்.
தமிழக சட்டமன்றத்துக்கு கிருஷ்ணசாமியை அன்புடன் அழைத்துச் சென்ற ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தலில் நடுத்தெருவில்விட்டு விட்டார். தனது பலத்தைக் காட்டுவதற்காக தனித்துக் களமிறங்குகிறார் கிருஷ்ணசாமி.
வீரவசனம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆடிப் போயுள்ளனர். காங்கிரஸின் முதுகில் கருணாநிதி சவாரி செய்த காலம் போய் கருணாநிதியின் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தலிலும் சவாரி செய்யக் காத்திருந்தது. காங்கிரஸின் போக்கை நன்கு தெரிந்த கருணாநிதி காங்கிரஸைத் தூக்கி எறிந்தார். கருணாநிதி நட்டாற்றில் கைவிடுவார் என்பதை எதிர்பார்க்காத காங்கிரஸ், விஜயகாந்துடன் கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை எல்லாம் நிர்மூலமாக்கிய விஜயகாந்த் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்தார்.
1971 ஆம் ஆண்டிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முதுகில் உல்லாசமாகச் சவாரி செய்த காங்கிரஸ் தனிமைப்பட்டுப் போயுள்ளது. தனித்துத் தேர்தலைச் சந்திக்கத் திராணி இல்லாத நிலையில் விஜயகாந்துடன் இணைவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்பினார்கள். அவர்களின் விருப்பம் ஈடேறாததினால் வீரவசனங்களுடன் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கிறது காங்கிரஸ்.
தமிழகத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே ராகுலின் விருப்பம். ராகுலின் விருப்பத்துக்கு இளங்கோவன், யுவராஜ் போன்றவர்கள் தூபமிட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர்களையும் மிக மோசமாக விமர்சித்தனர். இவர்களின் அவமானங்கள் எல்லாவற்றையும் பொறுமையாக சந்திக்க கருணாநிதி சந்தர்ப்பம் பார்த்து காங்கிரøஸக் கழற்றிவிட்டுள்ளõர். காங்கிரஸின் பலம் பலவீனம் என்ன என்பதை மத்திய அரசு தெரிந்து கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளார் கருணாநிதி. ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோருடன் போட்டி போட முடியாத தமிழக காங்கிரஸ், வைகோ, ராமதாஸ் ஆகியேõரின் கட்சிகளை விட கூடுதலான இடங்களைப் பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே உள்ளாட்சித் தேர்தலைக் கருதுகிறார் கருணாநிதி. பெரிய கட்சிகளின் தயவால் வெற்றி பெறும் சிறிய கட்சிகளின் உண்மையான செல்வாக்கு உள்ளாட்சித் தேர்தலில் வெளிப்படப் போகிறது. உள்ளாட்சித் தேர்தலின் முடிவு புதிய கூட்டணிக்கு அச்சாரமிடும்.
உள்ளாட்சித் தேர்தல், திருச்சி மேற்கு இடைத் தேர்தல் ஆகிய இரண்டிலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமது பலத்தை வெளிப்படுத்தக் களமிறங்கியுள்ளனர். படை பலம் எதுவும் இல்லாமல் இருவரும் நேருக்கு நேர் மோதத் தயாராகிவிட்டனர்.

சூரன்.ஏ.ரவிவர்மா


வீரகேசரிவாவாரவெளியீடு02/10/11


No comments: