முதல் இரவுக் கனவுகளுடன் பள்ளி அறையில் காத்திருந்தவனுக்கு மனைவி இன்னொருவனின் காதலி என்ற உண்மை தெரிய வருகிறது. காதலனை மறக்க முடியாதுசந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணத்திற்கு சம்மதித்தவள் தற்கொலை செய்ய முயற்சிக்கிறாள். காதலனுடன் சேர்த்து வைப்பதாகத் தன் மனைவியிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு மனைவியின் காதலனை தேடுகிறான். இந்த படம் எப்படி முடியும் என்ற பரப்பரப்புடன் 1981 ஆம் ஆண்டு வெளியான படம் அந்த 7 நாட்கள்.
திரைப்படத்திற்கு இசை அமைக்கும் கனவுடன் ஆமோனியப் பெட்டியுடன் பாலக்காட்டிலிருந்து சென்னைக்குச் செல்லும் பாக்கியராஜ் அம்பிகாவின் வீட்டில் வாடகைக்கு குடி இருக்கிறார். பாக்கியராஜின் உதவியாளராக வருகிறார் காஜா ஷெரீப். பாக்கியராஜும் காஜா ஷெரீபும் அடிக்கும் லூட்டிகள் தியேட்டரை கலகலப்பாக்கின. சிக்கலான பல பிரச்சினைகளை நகைச்சுவையுடன் தீர்த்து வைக்கிறார் பாக்கியராஜ்.
அம்பிகாவின் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த பாக்கியராஜ் அம்பிகாவின் மனதில் குடிப்புகுந்தார். இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். மலையாள மணத்துடன் பாக்கியராஜ் பேசும் தமிழ் ரசிகர்களை குஷிப்படுத்தியது. பாக்கியராஜ் அம்பிகா காதல் வெளிச்சத்துக்கு வந்ததால் அம்பிகாவின் வீட்டில் பூகம்பம் வெடிக்கிறது. பாக்கியராஜை மனதில் இருத்தி வேண்டா வெறுப்பாக டாக்டர் ராஜேஷுக்கு கழுத்தை நீட்டுகிறார் அம்பிகா. முதலிரவன்று அம்பிகாவின் மனதில் பாக்கியராஜ் இருப்பதை அறிந்த ராஜேஸ் பாக்கியராஜுடன் அம்பிகாவை இணைத்து வைப்பதாக உறுதிக்கூறி தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது என்று அம்பிகாவிடம்சத்தியம் வாங்குகிறார்.
பாக்கியராஜைச் சந்திக்கும் ராஜேஷ் தான் அம்பிகாவின் கணவன் என்ற உண்மையை கூறாது தனது படத்துக்கு இசை அமைக்கும் படிவேவண்டுகோள் விடுகிறார். தனது இலட்சியம் நிறைவேறப் போவதால் மகிழ்ச்சியடைந்த பாக்கியராஜ் உடனே ஒப்புக்கொள்கிறார். தனது படத்தின் கதை என்று தனது கதையைசொல்கிறார் ராஜேஷ். அந்த கதையில் நாயகன் தான் என்பதையும் காதலி அம்பிகா என்பதையும் காதலியின் கணவன் ராஜேஷ் என்பதையும் அறியாத அப்பாவி பாக்கியராஜ். எப்படி பாடல் இருக்க வேண்டும் எப்படி காட்சி அமைக்க வேண்டும் என்று ராஜேஷுடன் ஆலோசனை நடத்துகின்றார்.
பாக்கியராஜ் ராஜேஷ் காஜா ஷெரீப் ஆகிய மூவரும் ஒருநாள் படக்கதையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் ராஜேஷின் தாய் இறந்துவிட்டதாகத் தொலைபேசி அழைப்பு வருகின்றது. அப்போது அடுத்த காட்சி என்ன என்று பாக்கியராஜ் கேட்கிறார். கதாநாயகியை மணமுடித்தவரின் தாய் இறந்துவிட்டதாக கூறுகிறார் ராஜேஷ். இறந்தது ராஜேஷின் தாய் என அறியாத பாக்கியராஜ் நல்ல திருப்பம் ஆடியன்ஸ் அதிர்ச்சியடைவார்கள் என்று கூறி சோக இசை ஒன்றை ஆர்மோனியத்தில் வாசிப்பார். தாய் இறந்தது தாக்காத ராஜேஷ் அழுகிறார். அதனை பார்த்த பாக்கியராஜ் ஆயான் அழுது ஆயான் அழுது. தியேட்டரே ஓவென்று அழும் என்று காஜா ஷெரிப்பிடம் கூறி உச்சஸ்தானியில் இசை அமைக்கிறார்.
கதையை இன்னும் நீடிக்காது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என விரும்பிய ராஜேஷ். பாக்கியராஜை தன் வீட்டுக்கு வரும்படி அழைக்கிறார். ராஜேஷின் வீட்டில் அம்பிகாவை கண்ட பாக்கியராஜ் அதிர்ச்சியடைகிறார். அம்பிகாவின் மனதில் தான் இல்லை என்று கூறிய ராஜேஷ் அம்பிகாவை ஏற்றுக் கொள்ளும்படி பாக்கியராஜிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.ராஜேஷ் தனது கதையை கூறியபோது காதலனும் காதலியும் இணைய வேண்டும் என்று கூறிய பாக்கியராஜ் அம்பிகாவை ஏற்றுகொள்ள மறுக்கிறார். தாலியை கழற்றி எறிந்துவிட்டு வந்தால் தான் அம்பிகாவை ஏற்றுக் கொள்வதாகக் கூறுகிறார் பாக்கியராஜ். தாலியை கழற்ற முடியாது என்கிறார் அம்பிகா.
பாக்கியராஜும் அம்பிகாவும் ஒன்று சேர்வார்களா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு கடைசியில் தாலிக்கு முக்கியத்துவம் கொடுத்து ராஜேஷயும் அம்பிகாவையும் சேர்த்து வைக்கிறார் பாக்கியராஜ்.
ஆர்மோனிய பெட்டியுடனும் நாலுமுழ வேட்டியுடனும் படம் முழுக்க வந்து கலகலப்பை ஏற்படுத்துகிறார் பாக்கியராஜ். பாக்கியராஜுக்கு இணையாக கலக்கினார் காஜா ஷெரிப். கல்லாப்பெட்டி சிங்காரமும் தன்பங்குக்கு சிரிக்க வைத்தார். ராஜேஷ் அம்பிகா ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்தனர். குறைந்த பாத்திரங்களுடன் நிறைந்த படத்தைத் தந்தார் பாக்கியராஜ்.
கதை வசனம் டைரக்ஷன் பாக்கியராஜ் இசை எம்.எஸ்.விஸ்வநாதன் எண்ணி இருந்தது ஈடேற, கவிதை அரங்கேறும் நேரம், தென்றலது உன்னிடத்தில் சொல்லவந்தசேதி என்னவோ போன்ற பாடல்கள் மனதை நிறைத்தன. வில்லங்கமான ஒரு திரைக்கதையை தனக்கே உரிய நகைச்சுவையுடன் தந்தார் பாக்கியராஜ்.வோசாத்தின் என்ற பெயரில் ஹிந்தியிலும் வெளியாகி வெற்றி பெற்றது. தனது மனைவி இன்னொருவனின் காதலி என அறிந்த நடிகர் சந்திரபாபு காதலர் தனைச் சேர்த்து வைத்தார்.சந்திரபாபுவின் வாழ்க்கையைத்தான் அந்த 7 நாட்கள் படமாக எடுத்ததாக அண்மையில் பாக்கியராஜ் தெரிவித்தார்.
ரமணி
மித்திரன்26/02/12
No comments:
Post a Comment