Tuesday, March 20, 2012

மிரட்டுகிறது தி.மு.க. மிரளுகிறது காங்கிரஸ்

இரு துருவங்களான ஸ்டாலினும் அழகிரியும் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கைகோர்த்து பிரசாரம் செய்வதால் எதிர்க்கட்சிகள் அமைதி காக்கின்றன.
ஜெயலலிதாவின் செல்வாக்கை அம்பலப்படுத்தப் போவதாக சூளுரைத்திருக்கும் விஜயகாந்த் இடது சாரிகளை நம்பிக் களமிறங்கியுள்ளார்

சங்கரன் கோவில் இடைத் தேர்தல் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் அதை விடச் சூடான விவாதம் இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் விடுத்த கோரிக்கைக்கு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெளிவாக பதிலளிக்காமையினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இடது சாரிக் கட்சிகள் ஆகியவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தன. திருமாவளவனும் இவர்களுடன் இணைந்து வெளிநடப்புச் செய்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் திராவிட முன்னேற்றக் கட்சித் தலைவர் கருணாநிதியும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனீவாவில் ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மன்மோகன் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் பதில் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள பதிலும் தெளிவான முடிவு பற்றிக் குறிப்பிடவில்லை. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் எழுதிய கடிதங்களும் ஏனைய தமிழகத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோள்களும் தமிழக மக்கள் அனுப்பிய தந்திகளும் மிக.
ஏனைய பிரச்சினைகளை விட இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாகவே மிக அதிகமான கடிதங்களும் அறிக்கைகளும் இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலை என்ன என்று தெரிந்துள்ளது. இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்யப் போகிறது என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகிலும் மாறி மாறி சவாரி செய்த காங்கிரஸ் கட்சி இப்போது நிரந்தரமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் சவாரி செய்கிறது. காங்கிரஸைத் தொடர்ந்தும் முதுகில் சுமந்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கும் சரிந்து விடும்.

தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைகளில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையின் முடிவை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொண்டர்களின் விருப்பத்தை தலைமை நிறைவேற்ற வேண்டும் என்பதை கருணாநிதி உணர்ந்துள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளன. இந்திய மத்திய அரசியல் பங்காளியான திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்புள்ளது.
ஏனைய கட்சிகள் செய்வதைப் போன்று ஆர்ப்பாட்டம், வெளிநடப்பு என்பனவற்றுடன் திராவிட முன்னேற்றக் கழகம் நின்று விடுமா அல்லது அதையும் தாண்டி ஆக்கபூர்வமான நடவடிக்கையை அது எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஐந்து அமைச்சர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளனர். ஸ்பெக்ரம் ஊழல் விவகாரத்தினால் ராஜாவும் தயாநிதிமாறனும் அமைச்சுப் பதவியை ராஜினாமாச் செய்தார்கள். இலங்கைப் பிரச்சினை விவகாரத்தில் இந்திய மத்திய அரசு தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுவதனால் மத்திய அரசில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மத்திய அரசில் இருந்து வெளியேறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இப்போது இறுதிச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தமிழக அரசியலில் அவ்வப்போது இலங்கைப் பிரச்சினை தலைதூக்குவது வழமை. இப்போதும் அதேபோன்ற சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. சங்கரன் கோவில் இடைத் தேர்தல் பிரசாரத்தில் இலங்கை விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளார் ஜெயலலிதா. சட்ட சபைத் தேர்தலின் போது சங்கரன் கோவில் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 10,365 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மறைந்த அமைச்சர் கருப்புசாமி 72297 வாக்குகளைப் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் உமாமகேஸ்வரி 61902 வாக்குகளைப் பெற்றுக் கடந்த தேர்தலை விட அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேறக் கழகம் பிரசாரம் செய்கிறது. இதேபோன்று ஒரு நோக்கத்துடனேயே திராவிட முன்னேற்றக் கழகமும் களம் இறங்கியுள்ளது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தெரியும். அதேவேளை கடந்த தேர்தலை விட கூடுதலான வாக்குகள் பெறுவதற்காகவே திராவிட முன்னேற்றக் கழகம் களம் இறங்கியுள்ளது.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் எதிரும் புதிருமாக பிரசாரம் செய்த ஸ்டாலினும் அழகிரியும் ஒன்றாகப் பிரசாரம் செய்கிறார்கள். கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டியினால் இருவருக்குமிடையேயான பிரச்சினைகளையே ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்கள் அழகிரியும் ஸ்டாலினும் கை கோர்த்து பிரசாரம் செய்வதைப் பொறாமையுடன் பார்க்கின்றன.
ஜெயலலிதாவை முதல்வராக்குவதில் பெரும் பங்கு வகிப்பதில் விஜயகாந்துக்கும் இடதுசõரிகளுக்கும் அதிக பங்கு உள்ளது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் தனது செல்வாக்கை வெளிப்படுத்த களம் இறங்கியுள்ளார் விஜயகாந்த். விஜயகாந்த்துக்கு பக்க துணையாக இடதுசாரிகள் களம் இறங்கியுள்ளனர். சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிவினால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது.
கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினை, மின் வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பனவற்றினால் ஜெயலலிதாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதா சரிந்துள்ளதா என்பதை தீர்மானிக்கும் களமாக சங்கரன்கோவில் இடைத் தேர்தல் உள்ளது.
வர்மா

சூரன்,ஏ,ரவிவர்மா

வீரகேசரிவாரவெளியீடு18/03/12

No comments: