Tuesday, March 6, 2012

கொக்கு வெடி

மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. வண்டுகளின்ரீங்கார ஒலிக்குப் போட்டியாக தவளைகள் அகோரமாக கோஷ்டிகானம் இசைத்தன. காரிருள் சூழ்;ந்த அவ்வேளையில் ஆங்காங்கே இருந்த காவற்கொட்டில்களின் லாம்புகள் கோலங்காட்டின. மணி ஓசையும், வெடிகளும், ஹோ ஹோ என்ற சத்தமும் இடையிடையே காற்றில் கலந்தன. நெல் அறுவடை நெருங்கியதால் முழுமையான பயனைப் பெறுவதற்கு தூங்காமல் இருந்தனர்.
செல்லையா கறுத்தக் கோட்டைப் போட்டுக் கொண்டு தலையில் ஒரு துண்டைக் கட்டினான். ஐந்து புதுப்பற்றிகளைப் போட்டுவிட்டு இருட்டுக்குள் ரோச்சை அடித்து வெளிச்சம் ஓரிடத்தில் குவிந்திருக்கிறதா எனச்சரி பார்த்தான். சாம்பலுக்குள் இருந்த தோட்டாக்களை எடுத்து பொலித்தீன் பாக்கினுள் போட்டான். நெருப்புப் பொட்டியும் பீடிகளும் தோட்டாக்களுடன் ஒட்டிக்கொண்டன.
மூலையில் இருந்த துவக்கை எடுத்து கைவிளக்கு வெளிச்சத்தில் குறிபார்த்த பின்னர் குழல் முனையில் சுண்ணாம்பைப் பூசினான். அனைத்தையும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்த பின்னர் கைவிளக்கை அணைத்துவிட்டு காவற்கொட்டிலை விட்டு வெளியேறினான்.
பீடியை ருசித்தவாறு இருளைப் பார்த்துக் கொண்டிருந்தான் செல்வன். அவனுடைய காவற்கொட்டிலின் நடுவே பிரம்பு போன்ற மெல்லிய காட்டுத்தடிகளினால் கட்டப்பட்டசிறாம்பி இருந்தது. அதன் கீழே இருந்த நெருப்புச்சட்டி காவற்கொட்டிலை வெதுவெதுப்பாக்கியது. மூலையிலே இரண்டு பெரிய தகரங்களும், இரண்டு சிறிய கொட்டன்களும் இருந்தன. செல்வனின் காவற்கொட்டிலினுள் செல்லையா நுழைந்த அதே வேளை மழை பெரிதாகப் பெய்யத் தொடங்கியது.
"என்ன செல்லையா கையோடை மழையையும் கூட்டி வந்திட்டாய் போலை".
"வரவேண்டாம் எண்டு தான் சொன்னனான் பின்னாலை வந்திட்டுது. இந்தச் சிறாம்பியிலை கிடக்கிறன். ஒன்பது மணிபோலை எழுப்பிவிடு" எனக் கூறிவிட்டு காட்டுத் தடிகளினால் கட்டப்பட்ட சிறாம்பியில் படுத்தான். நெருப்புச் சட்டியின் வெதுவெதுப்பு அவனுக்கு இதமாக இருந்தது.
மழைவிட்டதும் செல்வனின் மனைவி மீனாட்சி சாப்பாட்டுடன் வந்தான். செல்லையாவை எழுப்பி சாப்பிடுமாறு கூறினான் செல்வன். அவன் முதலில் மறுத்தான். செல்வனும் மனைவியும் வற்புறுத்தியதனால் சாப்பிட்டான். சுடுறொட்டியும், கருவாடு போட்ட பூசனிக்காய்க் குழம்பும் செல்லையாவுக்கு மிகவும் பிடித்த சாப்பாடு. செல்லையாவுக்கு தாயின் நினைவு வந்தது.
செல்லையா படிக்க வேண்டும் என்று அவனது தாய் மீனாட்சி விரும்பினாள். செல்லையாவுக்கு படிப்பில் விருப்பம் இல்லை. மீனாட்சியின் கணவன் இன்னொருத்தியுடன் ஓடியதால் செல்லையாவை வளர்க்க தாய் மிகவும் கஸ்ரப்பட்டாள். ஆசிரியரின் வயலுக்கும் தோட்டத்துக்கும் காவலாளியாக செல்லையா சென்றதும் அவளது கஸ்ரம் ஓரளவு தீர்ந்தது. அருவி வெட்டும் போது பாம்பு கடித்து மீனாட்சி இருந்ததால் ஆசிரியரின் வீட்டிலேயே செல்லையா சரணடைந்தான். அதன் பின்னர் அவன் நிரந்தரக் காவலாளியாகினான்.
"செல்வன் என்ரை வயலிலையும் ஒரு கண் வைச்சிரு. அங்காலை ரத்தினத்துக்கும் சென்னனான்" எனக் கூறியபடி வேட்டைக்குத் தயாரானான் செல்லையா.
"நீ கவலைப்படாதை செல்லையா. நான் பாத்துக் கொள்ளுறன்" என்றான் செல்வன். ஏதாவது கிடைத்தால் தனக்கும் ஒரு பங்கு இறைச்சி கிடைக்கும் என்று செல்வன் எதிர்பார்த்தான்.

அம்மியான் மோட்டையில் மரை ஒன்று திரிவதாகக் கேள்விப்பட்ட செல்லையா அம்மியான் மோட்டையை நோக்கிச் சென்றான். மழை இருளிலும் பாதை தவறாது அரை மணித்தியாலத்தில் அம்மியான் மோட்டையைச் சென்றடைந்தான். அம்மியான் மோட்டையைச் சூழவுள்ள மரங்களில் பரண் கட்டப்பட்டிருந்தது. காற்று வளம் பார்த்தது ஒரு வீரை மரத்தின் பரணில் ஏறி வசதியாக இருந்தான் செல்லையா.
இடது கையால் குறிபார்த்துச் சுடும் மிகத்திறமையான வேட்டைக்காரனான செல்லையா தனது முதலாவது வேட்டையை என்றைக்குமே மறந்ததில்லை. ஆசிரியருடன் வேட்டைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை செல்லையாவின் மனதில் இருந்தது. அதற்குரிய சந்தர்ப்பம் என்றைக்குமே கிடைத்ததில்லை. ஆசிரியர் தனது குடும்பத்துடன் ஊருக்குச் சென்ற ஒரு நாள் தனது நண்பர்களுடன் பகலில் வேட்டைக்குச் சென்றான் செல்லையா.
ஆசிரியருடன் அடிக்கடி வேட்டைக்குச் செல்வதாக செல்லையா கூறிய பொய்யை நம்பிய அவனது நண்பர்கள் செல்லையாவின் திறமையைப் பார்க்க அவனுடன் கூடச் சென்றனர். பாடசாலைக்குச் செல்வதால் தமக்கு வேட்டையைப் பற்றி எதுவுமே தெரியாது. வேட்டைக்குச் செல்லும் செல்லையா கொடுத்து வைத்தவன் என்று அவனது நண்பர்கள் நம்பினார்கள்.
செல்லையாவி; நல்ல காலம் எதிரே பெரியதொரு பன்றிக் கூட்டம் தென்பட்டது. செல்லையாவின் நண்பர்கள் ஆனந்தப்பட்டார்கள். ஒரு வேட்டையை அவர்கள் நேரடியாகக் காணும் முதலாவது சந்தர்ப்பம் இதுதான். சுடு சுடு என்று நண்பர்கள் அவசரப்படுத்தினார்கள். சுடத் தெரியாத செல்லையாவுக்கு கை கால் எல்லாம் நடுங்கியது.
ஏதோ ஓர் அசட்டுத்துணிவில் எல்லோரையும் மரங்களின் பின்னால் மறையும்படி கூறினான் செல்லையா. மரத்தின் பின்னால் மறைந்த செல்லையாவின் நண்பர்கள் மெதுவாக எட்டிப்பார்த்தார்கள். துவக்கை கமக்கட்டினுள் வைத்த செல்லையா குதிரையைத் தட்டினான். யாரோ துவக்கைப் பறித்தது போன்று உணர்ந்தான். கண்மூடித் திறப்பதற்குள் கையிலிருந்த துவக்கைக் காணவில்லை. வெடிச்சத்தம் கேட்டதும் பன்றிக் கூட்டம் கலைந்து ஓடியது.
செல்லையாவின் நண்பர்கள் மறைவிலிருந்து வெளியே வந்தார்கள். செல்லையாவுக்குப் பின்னால் கிடந்த துவக்கை ஒருவன் காட்டினான். அப்பொழுது தான் செல்லையாவுக்கு உயிர் வந்தது. துவக்கை அணைக்கத் தெரியாது வெடி வைத்ததை நினைத்தால் செல்லையாவுக்கு இப்போதும் சிரிப்பு வரும்.
நட்சத்திரங்கள் நிற்கும் நிலையைப் பார்த்த செல்லையா பன்னிரண்டு மணிதாண்டி இருக்கும் என்று நினைத்தான். மரையை இன்னும் காணவில்லை என்று சலித்துக் கொண்டான்.
செல்லையா மீண்டும் பழைய சிந்தனையில் ஆழ்ந்தான். கோயில் பொங்கல் முடிந்த மறுநாள் செல்லையாவும் வேறு சிலரும் இரவு கதைத்துக் கொண்டிருக்கையில் சுந்தரம் மூச்சிரைக்க ஓடிவந்தான்.
"செல்லையா அண்ணா செல்லையா அண்ணா அந்தப் பெரிய கலை வளவுக்கை நிக்குது உடனை வாங்கோ" என்றான் சுந்தரம்.
அவனை அனுப்பிவிட்டு ரோச் லைற்றையும் துவக்கையும் எடுத்துக் கொண்டு செல்வனுடன் சுந்தரத்தின் வளவு நோக்கிச் சென்றான் செல்லையா.
"என்ன செல்லையா தோட்டா இல்லை எண்டனி இப்ப என்னண்டு வெடி வைக்கப்போறாய்" என தனது சந்தேகத்தைக் கேட்டான் செல்வன்.
தயாராக வைத்திருந்த க‌ட்டுத் துவக்கை வெடிக்க வைத்துவிட்டு ரோச்லைற்றை அங்கும் இங்கும் அடித்தான் செல்லையா. சிறிது நேரத்தில் சுந்தரத்தின் வீட்டுக்குச் சென்ற செல்லையா "நுரையீரல் வெடி தப்பாது. விடிஞ்சாப் போலை காட்டுக்கை போய்ப்பாப்பம்" என்றான். சிரிப்பை அடக்க வெகுவாக கஸ்ரப்பட்டான் செல்வன்.
விடிந்ததும் வேப்பங்குச்சியுடன் பல்லு விளக்கியபடி வயலுக்குச் சென்றான் செல்லையா. அப்போது எதிரே வந்தான் ரத்தினம்.
"என்ன செல்லையா க‌லை தப்பிட்டுது போலை. பசுபதி வேலைக்குப் போகேல்லை நாயளையும் கூட்டிக் கொண்டு காட்டுக்குப் போய்விட்டான்" என்றான் ரத்தினம். செல்லையா சிரித்துவிட்டுச் சென்றான்.
சிந்தனை கலைந்த செல்லையா வானத்தைப் பார்த்தான். மூன்று மணி இருக்கும் இனிமேல் மரைவராது என்பதைத் தெரிந்து கொண்ட செல்லையா மரத்திலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்தான்.
"நாளைக்கு யாழ்ப்பாணத்திலை இருந்து ஆக்கள் வருகினம். மான், மரை எண்டாலும் வேணும்"என வல்லிபுரம் முதலாளி கூறியது செல்வனின் மனதில் வந்து போனது. தாண்டிக் குளத்தை அண்மித்த செல்லையாவின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் படர்ந்தன. ஜோஸப்பின் மாடுகள் செல்லையாவைக் கண்டதும் ஆசிரியரைக் கண்ட மாணவரைப் போன்று எழுந்து நின்றன. ஒன்றை ஒன்று பார்த்து "ம்மா" என்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சில கன்றுகள் பாலைக் குடித்தன.
செல்லையாவின் துப்பாக்கி வெடித்ததும் மாடுகள் சிதறி ஓடின. வெடிபட்ட மாடு அலறியபடி காலைத் து}க்கிக் கொண்டுகாட்டுக்குள் ஓடியது. தனது துரதிஷ்டத்தை நினைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்ற செல்லையா தன்னையும் அறியாமல் படுத்துத் தூங்கிவிட்டான்.
"செல்லையா செல்லையா" விதானையாரின் குரல் கேட்டதும் துடித்துக் கொண்டு எழுந்த செல்லையா வெளியே போனான். அங்கே செல்லத்துரை விதானையார், மாட்டுக்கார ஜோஸப் இன்னும் இரண்டு மூன்று பேர் நின்றனர்.
"செல்லையா ராத்திரி வேட்டைக்குப் போனனிதானே?" விதானையார் கேட்டார்.
"ஓம் விதானையார்"
"என்ன மிருகம் கிடைச்சது"
"ஒண்டும் கிடைக்கேல்லை விதானையார்"
"தாண்டிக் குளத்திலை என்னத்துக்கு வெடி வைச்சனி?"
"கொக்கு கொக்கு" தன்னையும் அறியாமல் பதறினான் செல்லையா.
"கொக்கோ உண்மையைச் சொல்லு ஜோஸப்பின் மாட்டுக்குத் தானே வெடிவைச்சனி" என்று விதானையார் மிரட்டினார்.
"தெரியாமல் வெடி வைச்சிட்டன் அறுவடை முடிஞ்ச பிறகு காசு தாறன்" என்று செல்லையா கெஞ்சினான். செல்லையாவிடம் காசு வாங்குவதற்கு ஜோஸப் சம்மதித்தால் விதானை அதனைப் பெரிதாக்கவில்லை. ஜோஸப்பின் மாடு காட்டுக்குள் செத்திருக்கும் என செல்லையா நம்பினான்.
செல்லையாவும் பசுபதியும் பகலில் உடும்பு வேட்டைக்குச் சென்றனர். அப்போது அவர்களின் எதிரே செல்லையாவிடம் சூடுவாங்கிய ஜோஸப்பின் மாடு நின்றது. சூடுபட்ட காயத்திலிருந்து ஊனம் வடிந்து கொண்டிருந்தது. அந்தக்கால் நிலத்தில் பட்டும் படாமலும் இருந்தது. மாட்டின் பார்வையைச் சகிக்க முடியாத செல்லையா துப்பாக்கியைத் தூக்கி குறிபார்த்தான். என்ன நினைத்ததோ தெரியாது நொண்டியபடி காட்டுக்குள் ஓடி மறைந்தது மாடு.
செல்லையாவும் பசுபதியும் எதுவும் பேசாமல் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென செல்லையா அவலக்குரல் எழுப்பினார். ஜோஸப்பின் மாட்டின் கொம்பில் செல்லையா துடிப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார் பசுபதி.
ஜோஸப்பின் மாடு தலையை நாலா பக்கமும் சுழற்றியது. அப்போது மாட்டின் கொம்பிலிருந்த செல்லையா கீழே விழுந்தார். ஜோஸப்பின் மாடு மீண்டும் மீண்டும் தன் கொம்பி
னால் செல்லையாவைத் தாக்கியது. கோபம் தீர்ந்ததும் நொண்டியபடி மாடு காட்டை நோக்கிச் சென்றது. மாடு சென்றதும் செல்லையாவின் அருகில் சென்று பார்த்தான் பசுபதி, செல்லையாவின் உடலில் எந்த அசைவும் இல்லை.
சூரன்.ஏ.ரவிவர்மா
யாதும் 20112 comments:

fasnimohamad said...

அருமையான கதை ரசித்தேன் ....... வாழ்த்துகள் சூரன்.ஏ.ரவிவர்மா

வர்மா said...

தங்கள் கருத்துக்கும் வரவுக்கும் நன்றி
அன்புடன்
வர்மா