Saturday, July 7, 2012

ஒலிம்பிக் தீபத்தை பறிக்க முயன்ற சிறுவர்கள்


ஒலிம்பிக் தீப அஞ்லோட்டத்தினுள் இடையே புகுந்த பாடசாலை சிறுவர்கள் இருவர் தீவிர பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட ஒலிம்பிக் தீபத்தை வெடுக்கெனப் பறித்தெடுக்க முனைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒலிம்பிக் தீபத்தை மிகவும் பாதுகாப்புடன் அஞ்சலோட்டம் மூலம் பிரித்தானியா முழுவதும் எடுத்துச் செல்லும் 45ஆம் நாள் நிகழ்வு கௌன்றி ஊடாக நடைபெற்ற போதே இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. புனிதமான ஒலிம்பிக் தீபத்தைப் பாதுகாக்கவென அதி உச்ச பயிற்சி பெற்ற பாதுகாப்பு அணி அங்கிருந்த போதிலும் அசட்டுச் சிரிப்புடன் காணப்பட்ட இந்த இரண்டு சிறுவர்களும் அந்த இரண்டு அடி நீளமுடைய ஒலிம்பிக் தீபத்தை வெடுக்கெனப் பறிப்பதற்கு முன்னர் அங்கு போடப்பட்டிருந்த பொலிஸ் தடையையும் மீறி உள்ளே நுழைந்துள்ளனர்.  

கறுத்த பீனி தொப்பிகளையும் பாடசாலைச் சீருடைகளையும் அணிந்த நிலையில் காலை 7.20 மணியளவில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லவென ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அந்த ஐந்து  பணியாளர்களிடையே ஒலிம்பிக் தீபம் கைமாற்றப்பட்ட வேளை, அவர்களையும் முந்தியபடி இரு சிறுவர்களும் பாய்ந்து ஒலிம்பிக் தீபத்தை தாவிப் பிடித்தனர்.
இதனைக் கண்ட பொலிஸாரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சனக்கூட்டத்திற்குள் புகுந்து அந்தக் குறும்புக்காரச் சிறுவர்கள் இருவரையும் விரட்டியடித்தனர். இரண்டு மெய் வல்லுநர்களிடையே ஒலிம்பிக் தீபம் கைமாற்றப்பட்டுக் கொண்டிருந்த போதே இந்த எதிர்பாராத சம்பவம் இடம்பெற்றது.
ஒலிம்பிக் தீபத்தை கையிலேந்தியவாறு ஓடி வந்திருந்த ஆண் போட்டியாளர் ஒருவர் இதனைக் கெட்டியாக இறுகப் பிடித்தவாறு இருந்தபோது, பாதுகாப்பு அணியினர் விரைந்து செயற்பட்டு சிறுவர்களை அப்புறப்படுத்தினர். ஒலிம்பிக் தீப அஞ்சல் நிகழ்வின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள 70 பேரடங்கிய மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரே இவ்வாறு விரைந்து செயற்பட்டு விபரீதம் ஏற்படாதவாறு தடு த்து நிறுத்தியவர்களாவர். சாம்பல் நிற ரீஷேர்ட்டுகளையும், காற்சட்டைகளையும் அணிந்த நிலையில் நாளொன்றுக்கு முப்பது மைல்கள் வரை அடிக்கடி ஓடும் இந்தப் பாதுகாப்பு அணியினர், கடந்த 2010இல் இதற்கென விண்ணப்பித்திருந்த 664 பேரில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

.இந்தக் குறும்புக்கார இளையோர் இருவரினதும் திடீர் தாக்குதலால் ஒலிம்பிக் தீப அஞ்சல் நிகழ்வு எதுவிதத்திலும் பாதிப்படையவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார்,  ஒலிம்பிக் தீபம் எடுத்துச் செல்லும் வழியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் போதும் குறுக்கே ஓடுவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றியும் எச்சரித்துள்ளனர்இந்த  சம்பவத்தை நேரில் பார்த்த அலுவலகப் பணியாளரான பிரையன் வோர்ட் (34) இது பற்றி தெரிவிக்கையில், அந்தக் காட்சி நம்ப முடியாதளவுக்கு ஆபத்தானதாகவே இருந்தது. ஏனெனில், அந்தச் சிறுவர்கள் இருவரும் உண்மையில் ஒலிம்பிக் தீபத்தை தொட்டே விட்டனர். தீபத்தை ஏந்தி வந்தவர் அதனைக் கீழே போட்டிருந்தால் அந்தச் சிறுவர்கள் தீப்பற்றி எரிந்திருப்பார்கள் அல்லது வேறு எவரேனும் எரிகாயங்களுக்குள்ளாகியிருப்பர் எனவும் கூறினார். 
பிரித்தானியாவில் ”சுற்றிக் கொண்டிருக்கும் இந்த 70 நாள் ஒலிம்பிக் தீப அஞ்சல் ஓட்டம் நிகழ்வு, ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்ப வைபவத்தில் முடிவடையும்.

 மெட்ரோநியூஸ்06/07/12

1 comment:

ரங்குடு said...

எல்லாம் அவிய்ங்களே பந்தம் பிடிச்சுட்டுப் போனா, சாமானியர்கள் எப்போ புடிக்கறதாம்?