Saturday, November 10, 2012

நெருக்குகிறார் ஜெயலலிதா விலகுகிறார் கருணாநிதி


இந்திய அரசியல் கட்சிகள்  அனைத்தும் பொதுத் தேர்தலை நோக்கியே காய் நகர்த்துகின்றன. மாநிலத்தில் ஆட்சி செய்யும் அரசியல் கட்சிகளும் மாநிலத்தில் ஆட்சியில் இல்லாத அரசியல் கட்சிகளும் மத்திய அரசில் அங்கம் வகிப்பதையே பெரிதும் விரும்புகின்றன. ஜெயலலிதாவும் கருணாநிதியும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் இந்தியப் பொதுத் தேர்தலை குறிவைத்தே காய்களை நகர்த்தி வருகின்றனர்.

வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சற்று வீழ்ச்சியடைந்திருப்பதனால் அடுத்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் திராவிட முன்னேற்றக்கழகம் கைக்கோர்ப்பது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது.

காங்கிரஸ்கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான சூழலை  எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது திராவிட முன்னேற்றக்கழகம் ஸ்பெக்ரம் ஊழலின் பின்னர் காங்கிரஸ் திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவர்களிடையேயான உறவில் விரிசல்ஆரம்பித்தது. இந்திய மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை திராவிட முன்னேற்றக்கழகம் முன்னெடுக்கத் தொடங்கியது. பங்காளிக் கட்சியாக இருந்தாலும் அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளை வெளிப்படையாக விமர்சனம் செய்தது திராவிட முன்னேற்றக்கழகம்.

ஸ்பெக்ரம் ஊழல் காரணமாக ஆர்.ராசாவும், தயாநிதி மற்றும் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தனர். ஸ்பெக்ரம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆர்.ராசா பிணையில்  விடுதலையாகினார் தயாநிதி மாறன் மீதான விசாரணை இன்னும் ஆரம்பமாகவில்லை. இரண்டு முக்கிய அமைச்சுக்களை இழந்த திராவிட முன்னேற்றக்கழகம் அவற்றைத் திரும்பிப் பெறும் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இழந்த அமைச்சுக்களைத் திரும்பிப் பெறுவதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் முயற்சி செய்யவில்லை.

இந்திய மத்திய அமைச்சரவை கடந்த வாரம் மாற்றியமைக்கப்பட்ட போது அமைச்சரவையில் சேர்வதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் ஆர்வம் காட்டவில்லை. அரசியல் கட்சிகள் அனைத்தும் அமைச்சுப் பதவிக்கு ஆலாய் பறக்கும் வேளையில் தேடி வாய்ப்புகளை உதறித்தள்ளி அமைச்சுப்பதவியில் ஆசையில்லை என்பதை வெளிப்படுத்தியது  திராவிட முன்னேற்றக்கழகம். திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு அமைச்சுப் பதவியில் ஆசை இல்லையா அல்லது கூட்டணி மாறுவதற்கான சமிக்ஞையா என்பது பொதுத் தேர்தல் நெருங்கும் போது தான் வெளிப்படும்.

தமிழக சட்ட மன்றத் தேர்தலின்பாது ஜெயலலிதா ,விஜயகாந்த் கூட்டணி பெரும் புரட்சியை ஏற்படுத்தியது புரட்சித்தலைவி, புரட்சிக்கலைஞர் என்ற பட்டத்துக்கேற்ப இருவரும் இணைந்து கலைஞருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். தமிழக சட்ட மன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக்கழகமும் விஜயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தன.இரண்டு கட்சிகளுக்கும் தண்ணி காட்டி விட்டு ஜெயலலிதாவிடம் சரணடைந்த விஜயகாந்த் இன்று அடுத்து என்ன செய்வதென்று தெரியாது திக்குமுக்காடுகிறார்.

சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தை உச்சாணிக் கொப்பில்  ஏற்றி வைத்த ஜெயலலிதாவே அவருக்குக்  குழி பறிக்கும் நடவடிக்கையை  ஆரம்பித்துள்ளார். தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தவறான கூட்டணியுடன் சேர்ந்ததாகக் காலம் தாழ்ந்து உணர்ந்து கொண்ட விஜயகாந்த்,  ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் படிப்பிப்பார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் அவரின் கட்சியை உடைக்கும் கைங்கரியத்தை செய்துள்ளார் ஜெயலலிதா.

இந்திய  நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது விஜயகாந்துடன் வேறு கட்சிகள் எவையும் கூட்டணி சேரக்கூடாது என்பதே ஜெயலலிதாவின் விருப்பம் அதன் முதல் கட்ட நடவடிக்கையாகவே விஜயகாந்த் கட்சியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தனி வழி சென்றுள்ளனர். பொதுத்தேர்தலுக்கு முன்னர் விஜயகாந்தின் கட்சியிலிருந்து 10 சட்டமன்ற  உறுப்பினர்களை வெளியேறுவர் என்று அரசியல் அவதானிகள் ஆருடம் கூறியுள்ளனர்.

விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் வெளியேறினால்.  கட்சியின் அங்கீகாரம் கேள்விக்குறியாகும். கட்சியின் சின்னமும் முடக்கப்படும் நிலை ஏற்படலாம். அப்படியொரு நெருக்கடி  ஏற்பட்டால் விஜயகாந்துடன் கூட்டணி சேர பெரிய கட்சிகள் விரும்ப மாட்டாது. அதே வேளை  பேரம் பேசும் சக்தியை விஜயகாந்த இழந்து விடுவார். விஜயகாந்தின் அரசியலை எதிர்காலத்துக்கு இவை பின்னடைவாகவே உள்ளது.

காங்கிரஸ் கட்சியுடனான நெருக்கத்திலிருந்த கருணாநிதி விலகி நிற்க காங்கிரஸுடன் நெருக்கத்தை ஏற்படுத்த ஜெயலலிதா முயற்சி செய்கிறார். தமிழக சட்ட மன்ற வைர விழாக் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்புரையாற்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்ற ஜனாதிபதி முகர்ஜி சிறப்புரையாற்ற ஒப்புக்கொண்டுள்ளார்.

அப்துல் கலாம் ஜனாதிபதியான போது தமிழக சட்ட சபையில் அவரைக் கௌரவிக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். அப்துல் கலாம்சம்மதம் தெரிவித்தார். இதனை அறிந்த  கருணாநிதி குமுறினார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மதிக்கப்படுவதில்லை. ஜனநாயக விரோத அரசு நடைபெறுவதில்லை என்ற கருணாநிதியின் குமுறலைக் கேட்ட அப்துல் கலாம்  தனது பயணத்தை ரத்துச் செய்தார்.

கருணாநிதி அரசியலுக்கு அடி எடுத்த பொன் விழாவை திராவிட முன்னேற்றக்கழகம் சிறப்பாகக் கொண்டாடியது. சட்டமன்றத்தில் கருணாநிதியை  பாராட்டி உரையாற்ற ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அழைப்பு விடுத்தனர். அப்துல் கலாம் ஒப்புதல் அளித்தார்.

நான் முதல்வராக இருந்த போது அன்று ஊடகங்கள் கருணா நிதி சட்ட சபைக்கு வரவில்லை.வருகைப் பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டார். சபை நடவடிக்கையொன்றிலும் கலந்து கொள்ளாத கருணாநிதி எப்படிப் பொன் விழாக் கொண்டாடுவார் என்ற ஜெயலலிதாவின் கேள்வியினால் பாராட்டுரையாற்ற அப்துல் கலாம் மறுத்தார்.

தமிழக சட்டமன்றத்தின் வைர விழாவைச் சிறப்பாகக் கொண்டாட ஜெயலலிதா தீர்மானித்துள்ளார். இது திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு  கசப்பான செய்தியாக உள்ளது. ஜெயலலிதா நடத்தும் விழாவில் ஜனாதிபதி முகர்ஜி கலந்து கொள்வதை கருணாநிதி விரும்பமாட்டார். ஜனாதிபதி வேட்பாளராக முகர்ஜி  அறிவிக்கப்பட்டதும் முதலில்  தமிழகத்துக்கு விஜயம் செய்து கருணாநிதியைச் சந்தித்தார். தன்னுடன் மிக நெருக்கமாக  இருக்கும் ஜனாதிபதி தனது பரம எதிரியான ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்ற‌தை கருணாநிதியால் ஜீரணிக்க முடியாதுள்ளது.
இந்தியஜனாதிபதித்தேர்தலில்சங்மாவைழிமொழிந்தவர்ஜெயலலிதா.ஜனாதிபதித்தேர்தலில் பொது வேட்பாளரைநிறுத்த‌ எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட‌ முயற்சி தோல்வியடைந்ததனால் வேறு வழியின்றி எதிர்க்கட்சிகள் அனைத்தும் சங்மாவை ஆதரித்தன.

இந்திய ஜனாதிபதித் தேர்தலின் போது முகர்ஜியை தோல்வியடையச் செய்ய ஜெயலலிதாமேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்  முடிந்தன. முகர்ஜி ஜனாதிபதியாவதை விரும்பாத ஜெயலலிதா இன்று அவரை தமிழக சட்ட சபையில் உரையாற்ற  அழைத்துள்ளார். ஒருவரை தூற்றுவதும் ஒருவரை போற்றுவதும் ஜெயலலிதாவுக்கு புதிய விடயமல்ல. இந்திய ஜனாதிபதியின் விடயத்திலும் அதுவே நடந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 ஆவது விழாவில் பங்கேற்பதற்காக கடந்த செப்ரெம்பரில்  ஜனாதிபதி முகர்ஜி தமிழகம் சென்ற போது முதல்வர் ஜெயலலிதாவரவேற்றதை கருணாநிதி ரசிக்கவில்லை. தமிழக சட்டமன்றத்தின் வைர விழாவில் திராவிட முன்னேற்றக்கழகம் பங்குபற்றுமா புறக்கணிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன் ஜெயலலிதா மிகவும் நெருக்கம் காட்டினாலும் சோனியாவின் மனதில் ஜெயலலிதாவுக்கு இடம் இல்லை என்பதனால் காங்கிரஸ் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கான கூட்டணி இப்போதைக்கு சாத்தியமில்லை.
மெட்ரோநியூஸ் 09/10/12

No comments: