Monday, November 12, 2012

விடியலைத்தேடி




கிரீச்.....கிரீச்....கிரீச்..... இருட்டின் அமைதியைக்கிழித்துக்கொண்டு அந்தப்பழைய சைக்கிள் மேட்டையும் பள்ளத்தையும் பொருட்படுத்தாது  விரைந்தது. சைக்கிளின் கிரீச் சத்தத்துக்குபோட்டியாகக்குரல் எழுப்பிய சுடலைக்குருவியின் சத்தம் ஓய்ந்துவிட்டது.  தூரத்தில்கேட்ட அந்தச்சைக்கிளின் சத்தத்தின்மூலம் வருவது ஜோசேப்தான் என்பதை உறுதி செய்தார் காதர்.

   "அண்ணை ஜொசேப்பு வாறான். இண்டைக்கு நல்ல செய்தி வருமெண்டு நினைக்கிறன்." என்றார் காதர்.காதரின் ஆறுதல் வார்த்தை குமாருக்குத்தெம்பைக்கொடுத்தது. கிரீச் என்ற சத்தம் காதரின் வீட்டுப்படலையடியில் நின்றது. படலையைத்திறந்து சைக்கிளை மரத்தில் சாத்தினார் ஜோசேப்.

 "ஆரது ஜோசப்பே"வீட்டினுள் இருந்துகேட்டபடியே வெளியே சென்றார் காதர்.
  "அது நான் ஜோசெப்" எனப்பதிலளித்தபடி வீட்டினுள் நுழைந்தார் ஜோசேப்.மங்கிய விளக்கு வெளிச்சத்தில் ஜோசேப்பின் முகத்தை அனைவரும் ஆவலாகப்பார்த்தனர்.குளிர் காற்று அவ்வப்போது கைவிளக்கை அணைப்பது போல் போக்குக்காட்டிவிட்டுச்சென்றது.
  "எல்லாம் சரி இண்டைக்கு பத்து மணிக்கு போட் வெளிக்கிடுது.பத்து நிமிசத்திலை ட்ரக்ரர் வரும். ட்ரக்ரர் உங்களைக்கடற்கரையிலை இறக்கும் பிரச்சினை இல்லாமல் போய்ச்சேரலாம்".

 ஒரு கிழமைக்குமுன்பே பயணத்துக்குத்தயாராக இருந்தவர்களுக்கு பத்து நிமிடம் பல மணி நேரம் போல் தெரிந்தது.காதரின் குடும்பத்தவர்களை ஆரத்தழுவிய குமாரின் குடும்பத்தவர்கள் கண்ணீருடன் விடைபெற்றனர். குமாரின் மனவி, மகள் பிரியா, மகன் கிருஸ்ணா  ஆகியோர் காதரின் பிள்ளகளிடம் விடை பெற்றனர்.

 குமாரின் குடும்பம் ட்ரக்ரரில் ஏறியபோது காதரின்கண்கள் பனித்தன.குமாரைப்பற்றியோ அவரின் குடும்பத்தைப்பற்றியோ காதருக்கு எதுவும் தெரியாது.இந்தியாவுக்கு ஆட்களை அனுப்பு ஜோசேப் ஒரு வாரத்துக்குமுன் குமாரின் குடும்பத்தை  காதரின் வீட்டில் தங்கவைத்தார்.
குமாரின் குடும்பத்தவர்கள் பட்ட துன்பங்களையும், துயரங்களையும் கேட்ட காதரின் குடும்பம் அதிர்ச்சியடைந்தது. வீடு, சொத்து,சுகம் எல்லாவற்றையும் இழந்து இந்தியாவுக்குச்செல்லும் குமாரின் குடும்பத்தைப்பிரிவதால் நீண்ட நாள் நண்பனைப்பிரிவதுபோல் கவலைப்பட்டார் காதர்.
  ட்ரக்ர் கடற்கரையை அடைந்ததும் எல்லோரையும் ஒரே இடத்தில் நிற்கும்படி கூறிவிட்டு போனார் ஜோசேப். இந்தியாவுக்கு அகதியாகபோகும்பலர் ஆங்காங்கே நின்றனர்.  சிறிது நேரத்தில் இரண்டுபேருடன் வந்த ஜோசேப் இவ்வளவுபேரும் என்ரை ஆக்கள்.எண்ணிப்பாத்து கூட்டிப்போங்கோ என்றார்.
  ஜோசேப்புடன் வந்த இருவரும் அவர்களை எண்ணிப்பார்த்துவிட்டுத்தங்களுடன் அழைத்துச்சென்றனர். தமது மூட்டை முடிச்சுக்களைத்தூக்கிக்கொண்டு அந்த இருவரின் பின்னால் சென்றனர்.சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் நின்றவர்களுடன் அவர்கள் இணைந்தனர்.

  "கிருஸ்ணா" அந்த இருட்டிலும் குமாரின் மகன்  கிருஸ்ணாவை அடையாளம் கண்ட ஒருவர் குரல் கொடுத்தார். அந்தக்குரலோசையிலிருந்து தன்னை அழைத்தது லம்பேட் என உறுதிசெய்தான்கிருஸ்ணா .கிருஸ்ணாவின் வீடும் குமாரின் வீடும் இராணுவமுகாமுக்கு அருகே இருந்ததனால் சொந்தவீட்டிலிருந்து வெளியேறி தாய்நாட்டிலேயே அகதியானார்கள்.கிருஸ்ணாவும் லம்பேட்டும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர்.
இந்தியாவுக்கு அகதியாகச்செல்வது இரகசியமானதால் யாருக்கும் சொல்லாமலேயே புறப்பட்டனர்.எதிர்பாராத சந்திப்பினால் இருவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
   அவர்களின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.கிருஸ்ணாவும், லம்பேட்டும் வெவ்வேறு ட்ரோலரில் ஏறும்படி பணிக்கப்பட்டனர்.
"அப்பா நான் லம்பேட்டோடைவாறன் " எனக்கூறிவிட்டு லம்பேட்டின் பின்னால் ஓடினான் கிருஸ்ணா. அதிர்ச்சியில் குமார் உறைந்து நிற்க ஐயா ஏறுங்கோ என குமாரைத்தூக்கி ஏற்றினார் ஒருவர். இருட்டிலே ஆளையாள் தெரியாது தடுமாறினார்கள்.அப்பா,அம்மா,தம்பி.தங்கச்சி,அண்ணா.அக்கா என்றும் பெயரைக்கூறியும் ஒருவரை ஒருவர் தேடினார்கள். பிரியாவின் குரலைக்கேட்ட குமார் தட்டுத்தடுமாறி அவர்களின் அருகில் சென்றார்.

    "எங்கையப்பா தம்பியைக்காணேல்லை". என்று மகனைத்தேடினார் குமாரின் மனைவி.பிரியாவும்தன் பங்குக்கு அண்ணா எங்கே என்றுகேட்டார்.குமாரின் உடம்பு படபடத்து வியர்வையில் நனைந்தது.

"அவன் லம்பேட்டோடை மற்ற போட்டிலை வாறான்"
தட்டுத்தடுமாறிக்கூறினார் குமார்.குமாரின் பதிலைக்கேட்ட மனைவி அதிர்ச்சியடைந்தார்.

"எடேதம்பி போட்டை நிப்பாட்டு போட்டை நிப்பாடு"  எனக்கூச்சலிட்டார்.

 "இதென்ன பஸ்ஸே கண்ட இடத்திலை நிப்பாட்ட.போட் நடுக்கடலிலை போகுது சத்தம் போடாதையணை" இருட்டிலிருந்து ஒருவர் குரல் கொடுத்தார்.

 "ஐயோ என்ரைபொடியன் போட் மாறி ஏறிப்போட்டான்.அந்தப்போட்டிலை இருந்து அவனை இந்தபோட்டுக்கு மாத்துங்கோ"

 " எணே ஆச்சி கத்தாதையணை. இதிலை நிப்பாட்டினா நேவிக்காரன் சுட்டுப்போடுவான்.கரைக்குப்போய் உன்ரை பொடியனைத்தேடலாம்."

   நேவிக்காரன் சுட்டுப்போடுவான் என்ற வசனம் பலரைக்கிலிகொள்ள வைத்தது.அந்த மிரட்டலால் குமாரின் மனைவியும் அமைதியானாள்.

   "அண்ணை நெருபெட்டி இருக்கா" குமாரின் அருகில் இருந்த ஒருவர் கேட்டார்.யாரோ ஒருவர் தீப்பெட்டியைக்கொடுத்தார். தீக்குச்சி வெளிச்சத்தில் அந்த இளைஞனின் முகத்தைக்கண்ட குமார் அதிர்ச்சியடைந்தார்.காணிப்பிரச்சினையின் போது துப்பாக்கியுடன் வந்து குமாரை மிரட்டிய இளைஞனும் அகதியாக வருவதை அறிந்த குமார் மனதுக்குள் சிரித்தார்.

    ட்ரோலரின் உள்ளே இருக்க விரும்பாத சிலர் மேல் தளத்தில் இருந்தனர்.எஞ்சினுக்கு அருகேசேர்ந்த கடல் நீரை சிறு பிளாஸ்ரிக் வாளியால் அள்ளி வெளியே ஊற்றினார் ஒருவர். அணியத்திலே கயிற்றைப்பிடித்து வழி காட்டியவர் எஞ்சினை நிப்பாட்டு எனச்சத்தம் போட்டார்.மேல்தளத்தில் இருந்தவர்கள் அவசரமாக உள்ளே அனுப்பப்பட்டனர். எஞ்சினை நிறுத்திவிட்டு நங்கூரத்தைக்கடலில் இறக்கினார்கள்.ஓட்டிகள் இருவரும் வழி காட்டியவருக்கு அருகில் சென்று அவர் காட்டிய திசையில் பார்த்தார்கள்.தூரத்திலே நேவியின் நடமாட்டம் தெரிந்தது.

  ஓட்டிகளில் ஒருவர் நட்சத்திரத்தைப்பார்த்து நேரத்தைக்கணித்தார். இந்த நேரத்தில் நேவி இவ்விடத்தில் நிற்பதில்லை.மூவரும் சுற்றிவரநோட்டமிட்டனர்.கண்ணுக்கெட்டியதூரத்தில் வேறு நேவிப்படகு எதுவும் தெரியவில்லை.தனித்து நிற்பது பாதுகாப்பில்லை என்பதனால் அது அதிக நேரம் நிற்காது உறுதியாக நம்பினார்கள்.

   மேல்தளத்தில் இருந்தவர்கள் அவசரமாக உள்ளே சென்றதனால் சலசலப்பு அதிகரித்தது.நித்திரையிலிருந்தவர்கள் எழுந்து மலங்க மலங்க முளித்தார்கள்.கடலிலே நேவி நிற்கும் செய்தி உள்ளே இருப்பவர்களிடம் கசிந்ததனால் சிலர் வாய்விட்டு அழத்தொடங்கினர்.சிலர் இஷ்டதெய்வங்களைத்துணைக்கு அழைத்தனர்.சிலரின் உடல் பயத்தில்சில்லிட்டது.

  கடல் அமைதியாக இருந்தது. மூவரும் அந்தக்கரும் புள்ளியையே உற்று நோக்கினார்கள்.இடையிடையே நாலாபுறமும் அவதானித்தனர்.  அவர்கள் எதிர்பார்த்த அந்தச் சம்பவம் ஆரம்பமானது.தூரத்தே தெரிந்த கரும்புள்ளி அசையத்தொடங்கியது.கரும்புள்ளி கண்ணைவிட்டு மறைந்ததும் ட்ரோலர் மீண்டும் புறப்பட்டது.அப்போது உள்ளே இருந்தவர்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். ஒருமணித்தியாலம் கடலில் தாமதித்ததனால் இந்திய எல்லையை விரைவில் அடைய வேண்டும் என்பதனால் ட்ரோலர் வேகம் பிடித்தது.

  திடீரெனக்கடலில் தோன்றிய வெளிச்சம் அனைவரையும் கிலியடைய வைத்தது.ட்ரோலரை நோக்கி அந்த வெளிச்சம் விரைந்தது. கூட்டிவை கூட்டிவை என அணியத்தில் நின்றவர் சத்தம் போட்டார்.. அமைதியைக்குலைத்துக்கொண்டு வெடிச்சத்தம் கேட்டது. ஐயோ நேவி சுடுறான் என ஒருவர் சத்தம்போட்டார்.

  உயிர் வாழவேண்டும் என்ற ஆசையில் தாய்நாட்டை விட்டுத்தப்பி ஓடுபவர்களின் உயிரைக்குடிக்கக்கடற்படைக்கப்பலிலிருந்து குண்டுகள் புறப்பட்டன.கடலிலே தீப்பிளம்பு ஒன்று தோன்றியது.போட் அடிபட்டுப்போச்சு தன்னையும் அறியாது அணியத்தில் நின்றவர் சத்தமாகச்சொன்னார்.  அதை அறிந்த குமாரின் மனைவி மகனை நினைத்து அழத்தொடங்கினாள்.

   இறங்குறதுக்கு ஆயத்தமாகுங்கோ என ஓட்டி ஒருவர் கூறியதால் அனைவரும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.ராமேஸ்வரம் வந்திட்டுது என ஒருவர் அருகில் இருப்பவரிடம் சொல்லிச்சந்தோசப்பட்டார்.முழங்காலளவு தண்ணீரில் அனைவரும் இறக்கப்பட்டனர்.ஓட்டிகளில் ஒருவர்முன்னே செல்ல அனைவரும் பின்னே சென்றனர்.பெட்டிகளையும் பாக்குகளையும் கீழேவைக்கமுடியாததனால் தலையிலும் இடுப்பிலும் சுமந்து சென்றனர்.
   கண்ணுக்கு எட்டியதூரத்தில் கடற்கரையோ கட்டடங்களோ
தெரியாததனால்தயக்கத்துடன் அவரைப்பின் தொடர்ந்தனர்.கடல் நீர் இல்லாத ஒரு இடத்தைக்காட்டி இதிலே நில்லுங்கோ. காலையிலை எங்கடை ஆக்கள் வந்து உங்களைக்கூட்டிப்போவார்கள் எனக்கூறிவிட்டுச்சென்றார். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே  அவர்களை ஏற்றிவந்த ட்ரோலர் இருட்டில் மறைந்தது.

    ராமேஸ்வரத்தில் இறங்கியதும் அகதி முகாமுக்குப்போகலாம் என நம்பியவர்கள் கடலில் இறக்கிவிடப்பட்டதனால் செய்வதறியாது தடுமாறினர்.நடுக்கடலில் எரிந்த போட்டை நினைத்து குமாரின் குடும்பம் கண்ணீர் சிந்தியது. அவர்கள் நின்ற இடத்தில் தண்ணீர் அதிகரித்தது.முழங்கால் வரைஉயர்ந்த தண்ணீர் இடுப்புவரை சென்றது.கடல் தம்மை மூழ்கடித்து விடுமோ என்ற பயத்தில் பலர் அழத்தொடங்கினர்.சிறிது நேரத்தில் நீர் குறைந்து பின்னர் உயர்ந்தது.இந்திய மீன் பிடிப்படகுகளின் வெளிச்சங்கள் ஆங்காங்கே தெரிந்தன.இருள்விலகி வெளிச்சம் மெதுவாகத்தோன்றத்தொடங்கியது. அவர்களின் கண்களுக்கு கடற்கரை தெரியவில்லை.தாம் மண்மேட்டிலே இறக்கிவிடப்பட்டதை அப்போதுதான் உணர்ந்துகொண்டனர்.

   இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதியாகச்சென்றவர்களில் ஒருவர் தனது சிறிய  வானொலிக்கு உயிர் கொடுத்தார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் செய்தி அறிக்கை ஒலி  அவர்களைப்பரபரப்படைய வைத்தது.கடற்படையினரின்  தாக்குதலில்பயங்கரவாதிகளின் படகு கடலில் மூழ்கடிக்கப்பட்டது. பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என்ற தலைப்புச்செய்தியைக்கேட்டதும் குமாரின் குடும்பம் கதறி அழத்தொடங்கியது.

  "ஐயோ அந்தப்பயங்கரவாதத்துக்குப்பயந்துதானே அகதியா வந்தனாங்கள். என்ரைபிள்ளையபயங்கரவாதியாம்"குமாரின் மனைவி எழுப்பிய அவல ஓலத்தில் வானொலிச்செய்தியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.கடலை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த ஒருவரின் முகத்தில் சந்தோச ரேகை தெரிந்தது.தான் கண்டதை மற்றவர்களுக்குக் காட்டினார்.அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். தூரத்தேதெரிந்த அப்படகு அவர்களை நோக்கி வந்தது.ஓட்டி கூறியதுபோல் அவர்களைக்காப்பாற்ற அப்படகு வருகிறதென அவர்கள் நினைத்தார்கள்.அருகில் வந்தபின்னர் அது அவர்களைக்காப்பாற்றவந்த படகு அல்ல இலங்கையிலிருந்து அவர்களுடன் வந்த அகதி ட்ரோலர் என்பதை அறிந்தார்கள்.
 ட்ரோலரில் இருந்து இறங்கியவர்கள் அந்த மேட்டை நோக்கிச்சென்றார்கள்.

  "அப்பா லம்பேட் வாறார். அண்ணாவும் வருவார்" எனப் ப்ரியா சந்தோசத்துடன் சத்தம் போட்டாள்.குமாரும் லம்பேட்டை அடையாளம் கண்டார்.குமாரின் மனைவியின் கண்ணிலிருந்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தது.குமார் ஓடிச்சென்று லம்பேட்டைக்கட்டிபிடித்து கிருஸ்ணா எங்கே எனக்கேட்டார்.
"அவன் வரேல்லை. இயக்கத்துக்குப்போட்டான்" என்றார் லம்பேட்.

சூரன்.ஏ.ரவிவர்மா.
25/10/12

No comments: