வள்ளிப்பிள்ளை
தன்னைச்சுற்றி இருப்பவர்களை ஒரு முறை பார்த்தாள். அங்கு இருப்பவர்ர்களில் அதிகமானவர்கள் அவளைவிட வயதில்
குறைந்தவர்கள். தூரத்தில் இருப்பவர்கள் அவளைச்சுட்டிக்காட்டிப்பேசும்போது அவளுக்கு
வெட்கமாக இருந்தது.
இந்த வயதில் இது தேவையா? என்று தன்னைத்தானே ஒருமுறை
கேட்டாள். பேரப்பிள்ளைகளு ம்
பீட்டப்பிள்ளைகளும் இருக்கையில் இப்படி ஒரு ஏற்பாடுதேவைதானா? இதை நிறுத்தமுடியாதா?
அவள் தன்னைத்தா னே கேட்டாளே
தவிர எவருக்கும் அதைப்பற்றிச்சொல்லமுடியாதநிலை
கணவனே ஒப்புக்கொண்டபின்னர் அவள் மறுத்து என்ன பயன்.
இந்தச்சின்னப்பிள்ளையளுக்கு முன்னாலை தனக்கு நடக்கப்போவதை நினைக்க நினைக்க அவளுக்கு
வெட்கத்தில் என்ன செய்வதென்றேதெரியாது தவித்தாள்.
தனக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று
வள்ளிப்பிள்ளை கனவிலும் நினைக்கவில்லை.நடக்கப்போவது நல்லதென்றுதான் அனைவரும்
கூறுகிறார்கள். ஆனால் அவளுக்கு இதி துளி கூடவிருப்பம் இல்லை.
வள்ளிபிள்ளையின் கணவன் கந்தசாமிக்கு வலு
சந்தோசம். அவரது வாழ்நாளில் செய்யமுடியாத சாதனை இன்று நடக்கப்போகிறது என்பதில்
அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.கந்தசாமியின்மீது வள்ளிப்பிள்ளைக்கு ஏற்பட்டகோபம்
இன்னும் அடங்கவில்லை.
எத்தனை வயதில் தனக்குத்திருமணம் நடந்ததென்று
வள்ளிப்பிள்ளைக்குத்தெரியாது. அவள் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் போது
ஒரு நாள் தகப்பன் வந்து இடையில் கூட்டிச்சென்றார்.அன்று இரவு கந்தசாமியின் கையால் சோறு குடுப்பித்தார்கள்.அன்றிலிருந்து
அவள் கந்தசாமியின் மனைவி.
கந்தசாமி வள்ளிப்பிள்ளையின் முறை மைத்துனன்.நல்ல
குடிகாரன்.கள்ளு,சாராயம், கசிப்பு என எது கிடைத்தாலும் முடாக்கணக்கில் குடிப்பான்.கா
ணி,பூமி இருந்ததனால் படிப்பைப்பற்றிக்
கந்தசாமி கவலைப்படவில்லை.
வருடம் கூடக்கூட
கந்தசாமியின் குடும்ப எண்ணிக்கையும் கூடியது.நான்கு பெண்பிள்ளைகளும் கடைசியாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்தபின்னர்
குடும்ப அங்கத்தவர் தொகையும் நின்று விட்டது.
வள்ளிப்பிள்ளையின் பெண் பிள்ளைகள் அனைவரும் அழகானவர்கள்
என்பதனால் கனடா,ஜேர்மனி,பிரான்ஸ், அவுஸ்திரேலியா
ஆகியநாடுகளில் உள்ள உறவினர்களும் நண்பர்களும் சம்பந்திகளாயினர்.கடைசி
யா கப்பிறந்த வனும் மூத்த அக்காவுடன்
கனடாவுக்குச்சென்றுவிட்டான்.
ஒரு குறையும் இல்லாமல் வள்ளிப்பிள்ளை வாழ்ந்து
கொண்டிருக்கிறாள். அளுக்கு ஒரு குறை இருப்பதாக கந்தசாமி கூறியதால் தான் இன்று
அந்தக்குறையைத்தீர்ப்பதற்கான ஏற்பாடு நடைபெறுகிறது.
ஆலமரத்துக்குக்கீழே ஒ ரு தடியாகக்கிடந்த அண்ணமார் இன்று பிள்ளையார்
கோயிலாகி உள் மண்டபம் ,வெளி மண்டபம்,வெளி வீதி, தேர் என்று சிறப்பாக இருக்கிறது.ஊரிலுள்ள
மண்வீடுகள் எல்லாம் மாளிகையாகி விட்டன.ஊரே சிறப்பாக இருக்கும்போது வள்ளிப்பிள்ளை
ஏன் சிறப்பாக இருக்கக்கூடாது எனக்கந்தசாமி கேட்டதனால் இன்று பிள்ளையார் கோயிலில்
வள்ளிப்பிள்ளையின் கழுத்தில் தாலிகட்டப்போகிறார் கந்தசாமி.
"என்ன பொம்ளை முகத்திலை வெக்கம் களைகட்டுது".சுந்தரேசக்குருக்கள்
வள்ளிப்பிள்ளையைப்பார்த்து பகிடி பண்ணினார்.
"எங்க மாப்பிளை? அவர் எப்பவும் மாப்பிளைதான்.பேரன்
பிறந்தா என்ன? பேத்தி பிறந்தா என்ன? பூட்டி பிறந்தா என்ன? கந்தசாமி எண்டைக்கும்
மாப்பிளைதான்" சுந்தரேசக்குருக்கள் கூறியதைக்கேட்ட வள்ளிப்பிள்ளை மேலும்
வெட்கப்பட்டாள்.
தொப்புளில் புரளும் இரட்டைப்பட்டுச்சங்கிலி,
புலிப்பல்லுப்பதித்த பதக்கம்,தடித்த கைச்சங்கிலி,விரல்கள் நிறைய மோதிரம்,
தங்கமுலாம் பூசிய கைக்கடிகாரம் என நகைக்கடைபோல் ஜொலித்தார் கந்தசாமி.இதற்கு
மாறாக வள்ளிப்பிள்ளையின் உடலை ஒரு நூல் சங்கிலியும் ஒரு சோடி காப்புமே அலங்கரித்தன.
ஆலயமணி டாண் டாண் என ஒலி எழும்பியபோது விஷேட பூஜையின் பின் தனது அன்பு மனைவியின் கழுத்தில்
கந்தசாமி தாலி கட்டினார். கந்தசாமியின் மனதில் இருந்த பாரம் இறங்கியது.வள்ளிப்பிள்ளையின்
கழுத்தில் பாரம் ஏறியது.வாழ்ந்துகெட்ட நேரத்தில் இது தேவையா என வள்ளிப்பிள்ளை
கேட்டபோது,தேவைதான் எனப்பிள்ளைகள் கூறியதால் பிள்ளைகள் செய்து கொடுத்த தாலியைச்சுமந்தாள்
வள்ளிப்பிள்ளை.
கந்தசாமியின் வீடு அன்று கல்யாணக்களை கட்டியது.உறவினர்கள்,நண்பர்கள்,சம்பந்தி
வீட்டுக்காரர்கள் எல்லோருக்கும் தடல் புடலாக கல்யாண விருந்து நடைபெற்றது.கந்தசாமியும்
தன் பங்குக்கு போத்தல் போத்தலாக நண்பர்களுக்கு ஊற்றிக்கொடுத்தார்.எப்பவோ நடக்க
வேண்டிய நல்ல காரியம் எத்தனையோ வருடங்களின் பின் நடந்தது.
இரவு இரண்டுமணி வரை கந்தசாமியும் வள்ளிப்பிள்ளையும்
நித்திரை கொள்ளவில்லை. ஐந்து பிள்ளைகளும் மாறிமாறிக்கதைத்தார்கள்.அதிகாலை ஐந்து
மணிக்கு எழும்பி தோட்டத்துக்குப்போகும் கந்தசாமி எட்டுமணி வரை எழும்பவில்லை.நித்தி
ரைம் முழிப்பும் அளவுக்கு மிஞ்சின
குடியும் அவரை எழும்பவிடவில்லை.
"என்னப்பா
இன்னும் எளும்ப மனமில்லையே"
"எளும்புறன் எளும்புறன்" எனக்கூறிக்கொண்டு
கண்விழித்த கந்தசாமிக்கு வள்ளிப்பிள்ளையின் புதுப்பொலிவு ஆச்சரியத்தைக்கொடுத்தது.மடிப்புக்கலையாத
புதுத்தாலியுடன் வள்ளிப்பிள்ளை வேலை செய்வதைப்பார்த்த கந்தசாமியின் மனம் ஒருகணம்
துணுக்குற்றது.
குளித்துச்சாப்பிட்டுவிட்டுவழமைபோல்
சைக்கிளுடன் வெளியேறினார் கந்தசாமி.
"என்னப்பா எங்கை போறியள்? நேத்து கனக்க
குடிச்சனீங்கள்தானே. இண்டைக்கெண்டாலும் குடியாதேங்கோ"
"இல்லை இல்லை குடிக்கப்போகேல்லை.பொடியனுக்கு
ஒரு சம்பந்தம் பாக்கச்சொல்லி புறோக்கருக்குச்சொன்னனான். அந்தாள் இண்டைக்கு வரச்சொன்னது.
நான் மறந்துபோனன்." எனக்கூறிக்கொண்டு சைக்கிளை உதைத்து ஏறினார் கந்தசாமி.
வீட்டு வாசலில் சைக்கிள் மணிச்சத்தம் கேட்டது."ஆர்
ஓவசியரே? அவர் சந்திப்பக்கம் போட்டார்"உள்ளே இருந்து குரல் கொடுத்தார்
வள்ளிப்பிள்ளை.
"சந்திக்கோ?
அங்கை ஏதோபிரச்சினயாம்.அதுதான் அந்தப்பக்கம் போகவேண்டாம் எண்டு சொல்லத்தான்
வந்தனான்"
"பிரச்சினையோ?எ
ன்னபிரச்சினை ஓவசியர்?"
"ஏதோ ஹர்த்தாலாம். கடையைப்பூட்ட வேண்டாம்
எண்டு ஆமிசொல்லுதாம். கடை எல்லாம் பூட்டித்தான் கிடக்காம்"
ஓவசியர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சந்திப்பக்கம்
துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டது.
"என்ன ஓவசியர் வெடிச்சத்தம் கேக்குது?" வள்ளிப்பிள்ளை கலக்கத்துடன் கேட்டாள்.
"நீ உள்ளை போ பிள்ளை நான் பாத்து வாறன்." எனக்கூறியபடி ஓவசியர் வேகமாகச் சந்திப்பக்கம்
சைக்கிளைச்செலுத்தினார்.
ஓவசியர் சந்தியை நோக்கிச்செல்ல சந்தியிலிருந்து
சனம் அடிச்சுப்பிடிச்சுக்கொண்டு ஓடிவந்தது.
"ஓவசிரியர் அங்கை போகாதேங்கோ. ஆமிக்காரன்
சுடுறான்.நாலுபேர் செத்துப்போச்சினம்.கந்தசாமிக்கும் சூடு பட்டுப்போச்சு.திரும்புங்கோ."
என்றான் எதிரேவந்த பசுபதி.
"எடே கந்தசாமிக்கு
என்ன நடந்து."
ஓவசியரின் கேள்விக்குப்பதில் கூறாமல் சைக்கிளை
வேகமாக மிதித்தான் பசுபதி.
சூரன்.ஏ.ரவிவர்மா
மித்திரன்
05/11/2006
2 comments:
ஒட்டியில் பதிவுகளை வேகமாக தேர்ந்தெடுக்க முடிகிறது.
இதனால் எனக்கு ஒட்டி பிடிக்கும்
http://otti.makkalsanthai.com
பயன்படுத்தி பாருங்கள் உறவுகளே!! ஒட்டி உங்களுக்கும் பிடிக்கும்
ஒட்டியில் பதிவுகளை வேகமாக தேர்ந்தெடுக்க முடிகிறது.
இதனால் எனக்கு ஒட்டி பிடிக்கும்
http://otti.makkalsanthai.com
பயன்படுத்தி பாருங்கள் உறவுகளே!! ஒட்டி உங்களுக்கும் பிடிக்கும்
Post a Comment