இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு உதவி செய்த அப்சல் குரு கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டார்.
நீதிமன்றத்தினால் அப்சல் குருவுக்கு பகிரங்கமாக விதிக்கப்பட்ட மரண தண்டனையை இந்திய அரசு இரகசியமாக நடத்தி முடித்துள்ளது. மும்பாய் தாக்குதலின் குற்றவாளியான கசாப்புக்கு இரகசியமாக தூக்குத் தண்டனையை நிறைவேற்றி நோட்டம் பார்த்த இந்திய அரசு அப்சல் குருவையும் இரகசியமாகத் தூக்கிலிட்டது.
காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதும் காஷ்மீரில் மூன்று நாட்கள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. பத்திரிகைகள் வெளிவரவில்லை. இணையத்தளங்கள் முடக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த உடந்தையாக இருந்த அப்சல் குருவின் மரண தண்டனையை அரசாங்கம் ஏன் நிறைவேற்றவில்லை எனக் குடைந்தெடுத்த பாரதீய ஜனதாக் கட்சி அமைதியாக இருக்கிறது.
அப்சல் குருவின் மரண தண்டனை இந்திய அரசியலில் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஏன் இன்னமும் தூக்கிலிடவில்லை என்ற கேள்வி புயலாகப் புறப்பட்டுள்ளது. மரண தண்டனையை உலகில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் போராடி வரும் நிலையில் மரண தண்டனையை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்ற குரல்களும் ஒங்கி ஒலிக்கின்றன. 134 நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டன. ஆனால் பழிக்குப் பழி வாங்க வேண்டும் எனத் துடிப்பவர்கள் மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.
எதிரணிகளின் வாயை அடைப்பதற்காக மரண தண்டனையை கருவியாகப் பாவிக்கும் உத்தியை இந்திய அரசு ஆரம்பித்து விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அப்சல் குருவின் மரண தண்டனைக்கு எதிராக காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளõர். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியே காஷ்மீரில் ஆட்சி செய்கிறது. அப்சல் குருவின் மரண தண்டனை அக்கட்சிக்கு அரசியல் ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்தும் இணைந்திருக்கும் சூழ்நிலை அக்கட்சிக்கு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காஷ்மீர் விடுதலைக்காக போராடுபவர்கள் அப்சல் குருவின் மரண தண்டனையால் பயனடையக் கூடும் என்று உமர் அப்துல்லா அச்சமடைகிறார்.
இந்திய ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி மூன்று மாதங்களில் இரண்டு மரண தண்டனையை கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். கசாப் அப்சல் குரு ஆகியோரின் மரண தண்டனை அவசரமாகவும் இரகசியமாகவும் நடைபெற்றதனால் அடுத்து தூக்கில் தூங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பஞ்சாப் முதல்வராக இருந்த பியாந்த் சிங் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பல்வந்சிங் ரஜோனாவின் தலைவிதி அடுத்து நிர்ணயிக்கப்படலாம். கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி ரஜோனா தூக்கிலிடப்பட நாள் குறிக்கப்பட்டது. அன்றைய பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் யாதவ், ரஜோனாவின் மகன் சுக்பீர் சிங் பாதவ் ஆகி÷யார் ஜனாதிபதியிடம் விடுத்த மனுவையடுத்து தூக்குத்தண்டனை தள்ளி வைக்கப்பட்டது.
சுக்பீர் சிங்க பதால் இவர் தான் அகாலிதல் கட்சியின் தலைவர். பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகளில் அகாலிதளும் ஒன்று. அப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டும் எனக் குரல் கொடுத்த பாரதீய ஜனதாக் கட்சி ரஜோனாவின் விவகாரத்தில் அடக்கியே வாசிக்கிறது.
பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்களின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுக்கும் பாரதீய ஜனதாக் கட்சி, பஞ்சாப் முதல்வரின் கொலையுடன் தொடர்புடையவரின் மரண தண்டனை பற்றி வாயைத் திறக்க மறுக்கிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 91 குற்றவாளிகள் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்ப்பித்தனர். இவர்களில் 31 கருணை மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டன. பிரதீபா பட்டீல் ஜனாதிபதியாக இருந்த ஐந்து வருடங்களில் 35 கருணை மனுக்களை ஏற்றுக் கொண்டு ஆயுள் தண்டனையாக குறைத்தார். மூன்று கருணை மனுக்களை நிராகரித்து மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்தார். இவரால் நிராகரிக்கப்பட்ட மூவரும் ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.
காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் மக்பூல் பட்டின் நினைவு நாள் கொண்டாடப்படும் வேளையில் அப்சல் குருவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1966 ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய தாக்குதல் காரணமாக மக்பூல் பட் கைது செய்யப்பட்டார். ஸ்ரீ நகர் சிறையிலிருந்து சுரங்கம் மூலம்தப்பிய மக்பூல்பட் பாகிஸ்தனுக்குத் சென்றார்.
1971 ஆம் ஆண்டு இந்திய பயணிகள் விமானத்தை மக்பூல்பட் தலைமையிலான காஷ்மீர் விடுதலை முன்னணி கடத்திச் சென்றது. இக்குற்றச்சாட்டில் மக்பூல் பட்டைக் கைது செய்த பாகிஸ்தான் பின்னர் விடுதலை செய்தது. இந்தியாவுக்குள் நுழைய முயன்ற மக்பூல்பட் கைது செய்யப்பட்டார். .
1984 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் துணைத் தூதரக அதிகாரி கடத்தப்டார். அவரை விடுதலை செய்வதற்கு மக்பூல் பட் விடுதலை செய்யப்பட வேண்டும். ஒரு மில்லியன் பவுண்ட் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடப்படுகிறது. பேச்சுவார்த்தை நடைபெறும் போது துணைத் தூதரக அதிகாரி கொல்லப்படார்.. இதன் காரணமாக மக்பூல் பட்டின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
அப்சல் குருவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதனால் காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ளது.
மெட்ரோநியூஸ் 15/02/13
No comments:
Post a Comment