Friday, February 1, 2013

மோடிக்கு அதிகரிக்கும் ஆதரவு


இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகிவிட்டன. காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் கீழ் போட்டியிட  காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அனைவரும் தயாராகிவிட்டனர். ராகுல்தான்? பிரதமர் வே
ட்பாளர்  என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்காத நிலையிலும் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் ராகுல் தான் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் உள்ளனர்.

இந்தியாவில் ஆட்சி அமைக்கக் கூடிய செல்வாக்குமிக்க தலைவர்கள் பாரதீய ஜனதாக் கட்சியில் இல்லை. வாஜய்பாய்க்குப் பின்னர் இந்தியாவில் செல்வாக்குமிக்க தலைவர்கள் பாரதீய ஜனதாக் கட்சியில்  இல்லை. இதன் காரணமாக  பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியாத நிலையில்  உள்ளது. அத்வானி, சுஷ்மா சிவராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி போன்ற தலைவர்கள் பாரதீய ஜனதாக் கட்சியில் இருந்தாலும் மோடியைப் போன்ற பிரபல்யமானவர்கள் எவரும் இல்லை.  பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படலாம் என்ற ஊகம் உலாவியது. பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சிங்காவின் மோடிக்கு ஆதரவான குரல் அந்த ஊகத்தை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் மத்திய நிதி அமைச்சராகப்  பதவி வகித்தவர் யஸ்வந்சிங்கா. இவரின் கருத்துகளுக்கு பாரதீய ஜனதாக்  கட்சியில் பலத்த ஆதரவு உள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியின் சக்திமிக்க தலைவர்களில் ஒருவரான யஷ்வந் சிங்காவின் மோடிக்கு ஆதரவான நிலைப்பாடு மோடிக்கு பலத்தைக் கூட்டியுள்ளது.

பிரதமர் வேட்பாளராகும் தகுதி மோடிக்கு உண்டு என்று  யஷ்வந்சிங்கா கூறியதற்கு எதவிதமான பதில் கருத்தும் பாரதீய ஜனதாக் கட்சியிலிருந்து வெளிவரவில்லை. பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராஜ்நாத்சிங் கையேற்ற பின்னர் மோடியைச் சந்தித்தார். ராஜ்நாத் சிங் மோடி சந்திப்புப் பற்றிய விபரம் எதுவும் வெளிவராத நிலையில் மோடிக்கு ஆதரவாக யஷ்வந்சிங்கா குரல் கொடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் அதிகாரம் கட்சிக்கே உரியது. கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, தேர்தலுக்கு பொறுப்பான குழு என்பன அலரி ஆராய்ந்த பின்பே பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
இந்தக் குழுக்கள் பிரதமர் வேட்பாளர்  என்பன சிந்திப்பதற்கு முன்பே யஷ்வந்சிங்கா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது யஷ்வந்சிங்காவின்  தனிப்பட்ட கருத்து என்று பாரதீய  ஜனதாக் கட்சித் தலைவர்  ராஜ்நாத் சிங் அதனை பூசி மெழுகி முனைகிறார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் மோடிக்கு ஆதரவுக்கரம் நீட்டுமா என்பது சந்தேகமே.  பாரதீய  ஜனதாக் கட்சியில் உள்ளவர்களை ச்சமாளித்தாலும்   கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக  மோசடிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

பாரதீய ஜனதாக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இந்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கக் களமிறங்கும் இவ்வேளையில்  இந்திய நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு திராவிடமுன்னேற்றக்கழகம் காய்நகர்த்தத் தொடங்கி உள்ளது. டெசோ தீர்மானங்களை தூசு தட்டிக் கையில் எடுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். இலங்கைத் தமிழர்கள்  நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக டெசோ அமைப்பு 14 நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீர்மானங்களை ஜனாதிபதி பிரணாப்  முகர்ஜியிடம்  ஸ்டாலின் தலைமையிலான  குழு ஒப்படைத்தது.

ஸ்டாலின், ரி.ஆர். பாலு, சுப்புலக்ஷ்மி சுப  . வீரபாண்டியன்  அடங்கிய இக்குழு ஜனாதிபதியைச் சந்தித்து மனு ஒன்றை கையளித்தது. டெசோவின் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உள்ள 47 நாடுகளின் தூதுவர்களிடம் கையளிப்பதற்கு இந்தக் குழு முயற்சி செய்கிறது.
இந்திய நாடாளுமன்றக் குழுத் தேர்தலின்போது தமிழ்ஆர்வலர்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து திராவிட முன்னேற்றக்கழகம் நகரத் தொடங்கியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது.  இந்தக் கூட்டணியில் அவ்வப்போது விரிசல்கள் ஏற்பட்டு  பின்னர் இரு கட்சித் தலைவர்களும் விட்டுக் கொடுத்து  சமாதானமாகினர். இந்த விரிசலும் விட்டுக் கொடுப்பும் நிரந்தரமானதில்லை என்பது  அரசியலில் எழுதப்படாத விதி.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குள் விஜயகாந்தையும்  கொண்டு  வர வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார். விஜயகாந்தின் செல்வாக்கு வளர்ச்சி பற்றி தமிழக காங்கிரஸ் இளைஞர்களிடம் ராகுல் காந்தி அக்கறையாக விசாரித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக் கூட்டணியில் விஜயகாந்தை இணைக்க வேண்டும் என ராகுல் காந்தி விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் விஜயகாந்த் கூட்டணி என்று ஸ்டாலின் நினைக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தை வெட்டிவிட்டு காங்கிரஸ் விஜயகாந்த் கூட்டணி என்று என்று ராகுல் விரும்புகிறார்.

காங்கிரஸுடன் விஜயகாந்த் ஐக்கியமாகி திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேற்றப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய முன்னேற்பாட்டை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்துள்ளது.

ரமணி
மெட்ரோநியூஸ்  01/02/13

No comments: