அரசியல் சதுராட்டத்தில் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அழகிரியின் விசுவாசியான பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டுள்ளார். சாதாரண கூலித் தொழிலாளராக இருப்பவர்கள் அரசியல் தலைவர்களின் அருட் பார்வையினால் கட்சியில் மிக முக்கிய பதவிகளில் அமரும் இவர்களின் அட்டகாசம் அனைவரையும் அதிரவைக்கும்.
மதுரையில் அஞ்சா நெஞ்சனான அழகிரியைச் சற்றி பலர் மையம் கொண்டுள்ளனர். அவர்களில் முக்கிய மாணவர் பொட்டு சுரேஷ். அழகிரியின் முகாமின் இன்னொரு பிரபலமானவர் அட்டாக் பாண்டி. அழகிரியின் பக்கத்து தூணாக நின்ற இவர் அண்மையில் ஸ்டாலினிடம் சரணடைந்தார். பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட பின்னர் அட்டாக் பாண்டி தலைமறைவாகி விட்டார். பொட்டு சுரேஷ் கொலையுடன் தொடர்புடைய ஏழு பேர் பொலிஸில் சரணடைந்துள்ளனர். விசாரணையின் பின்னர் அதிர்ச்சி தரும் பல உண்மைகள் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அழகிரியின் கோட்டையிலே விசுவாசமிக்க பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி ஆகிய இருவருக்கிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. பொட்டு சுரேஷை மீறி அழகிரியை நெருங்குவது இலகுவானதல்ல. தமிழக ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவர்களது நடவடிக்கையில் தேக்கம் ஏற்பட்டது. தமிழக அரசின் கழுகுப் பார்வையில் சிக்கி பொட்டு சுரேஷும், அட்டாச் பாண்டியும் சிறைக்குச் சென்றார்கள். பொட்டு சுரேஷ் அட்டாக் பாண்டி உட்பட அழகிரியைக் சுற்றி நின்ற பட்டாளம் அனைத்தும் அரச விருந்தாளியாக சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஒரு வருடத்துக்குப் பிணையில் வெளியே வர முடியாத வகையில் குண்டர் சட்டத்தின் பிரகாரம் பொட்டு சுரேஷ் உள்ளே தள்ளப்பட்டார். தமிழக அரசின் எதிர்பார்ப்பைத் தவிடு பொடியாக்கி நீதிமன்றத்தின் துணையுடன் வெளியே வந்தார் பொட்டு சுரேஷ்.
அழகிரிக்கு நெருக்கமானவர் யார் என்பதில் இருவருக்குமிடையே பலத்த போட்டி நிலவியது. பொட்டு சுரேஷை முந்த முடியாத அட்டாக் பாண்டி அழகிரியின் முகாமிலிருந்து வெளியேறி ஸ்டாலினிடம் தஞ்சமடைந்தார். தனது மனக் குமுறல்களை இந்திய புலனாய்வு சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் வெளியிட்டிருந்தார்.
மதுரையைச் சேர்ந்த சுரேஷ் பாபு ஆரம்பத்தில் நைட்டி வியாபாரம் செய்தார். அப்போது நைட்டி சுரேஷ் என அழைக்கப்பட்டார். 1990 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக்கழக நாடாளுன்ற உறுப்பினர்களாக ராஜன் செல்லப்பா, முத்துமணி ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டதனால அரசியல் பாதையில் இறங்கினார். 1996 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி பீடம் ஏறியதும் பரிதி இளம்வழுதியை பிடித்தார். அங்கிருந்து வெளியேறி பி.டி. ஆருடன் இணைந்தார். நெற்றியில் பெரிய பொட்டுடன் வ லம் வரும் சுரேஷ் பொட்டு சுரேஷ் எனப் பெயர் பெற்றார்.
அரசியலில் பல படிகள் ஏறி பலருடனும் இணைந்து பணியாற்றியதால் அரசியல் நெளிவு சுழிவுகளை நன்கு கற்றறிந்த பொட்டு சுரேஷ், அழகிரியின் முகாமுக்குச் சென்றதும் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டார்.
கபடி விளையாட்டில் மிகத் திறமையான பாண்டி அட்டாக் எனக் கூறியபடி எதிராளியை வீழ்த்துவார். அதனால் அவருடன் அட்டாக் என்ற சொல் இணைந்து அட்டாக் பாண்டி யாகியது.
திராவிட முன்னேற்றக் கழக நிழல் உலக தாதாக்கள் இருவரினால் மதுரை திராவிட முன்னேற்றக் கழகம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
அழகிரியின் விசுவாசியான பொட்டு சுரேஷின் கொலையின் பின்னணியில் அழகிரியின் முன்னாள் விசுவாசியாக அட்டாக் பாண்டி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அழகிரி நிலை குலைந்து போயுள்ளார்.
பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதே அவரது குடும்பத்தினர் சந்தேகம் கொண்டனர். கூட இருந்த ஐவரே கொலையாளிகள்என சுரேஷின் மனைவி கூறியுள்ளார். கொலை செய்தவனும் கூட அழுகிறான் என மூதாட்டி ஒருவர் புலம்பியுள்ளார். அழகிரியின் முன்னாலேயே இப்படியான வார்த்தைகள் வெளியாகியதால் அழகிரியும் மற்றவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளன.
அரசியல்பிரமுகர் ஒருவரின் பினாமியாக பொட்டு சுரேஷ் செயற்பட்டதால் சொத்துப் பிரச்சினையில் இக்கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் லீலாவதி 1997 ஆம் ஆண்டு மதுரையில் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் விடுதலையாகிவிட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவரான தா.கிருஷ்ணன் 2003 ஆம் ஆண்டு அதிகாலை கொலை செய்யப்பட்டார். கொலையின் சூத்திரதாரிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட அழகிரி பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவும் அவரது நண்பரும் 2004 ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர்.
திராவிடி முன்னேற்ற கழகம் பிரமுகர் பூண்டி கலைச்செல்வன் 2007 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளரின் கொலைக்கும் பழிவாங்கும் முகமாகவே இவர் கொல்லப்பட்டார்.
திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி இராம ஜெயம் கடந்த ஆண்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். கை, கால்கள் கட்டுக் கம்பியில் கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்பட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியளித்தது. இக்கொலையின் சூத்திரதாரிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் படுகொலை, பழிவாங்கல் என்பனவற்றுக்கான சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசின் கைகளிலேயே உள்ளது.
ரமணி
மெட்ரோநியூஸ் 08/02/13
No comments:
Post a Comment