Wednesday, February 27, 2013

மகிழ்ச்சியில் ஜெயலலிதா அதிர்ச்சியில் கருணாநிதி



காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசு இதழில் வெளிவந்தது.  நடை பயணம் செய்த வைகோவை இடையில் சந்தித்தது புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக இயங்குவதற்கு பசுமைத் தீர்பாயமையம் அனுமதி வழங்கியது. ஆகியவற்றினால் ஜெயலலிதா மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றுள்ளார். ஜெயலலிதாவுக்குச் சாதகமான இந்த மூன்று சம்பவங்களினால் கருணாநிதி அதிர்ச்சியடைந்துள்ளார்..

தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கிடையில் தீர்க்க முடியாத பிரச்சினையான காவிரி நதி  நீர்ப் பிரச்சினையைச்  சுமுகமாகத் தீர்ப்பதற்கு மத்திய அரசின் ஆதரவுடன் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. மத்தியில் ஆட்சி செய்த அரசுகளும், தமிழக, கர்நாடக அரசுகளும் இப்பிரச்சினையை ப் பலமுறை கூடிப் பேசின. தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நீரை  கர்நாடக அரசு கொடுக்க மறுத்தது.  நீதிமன்றத் தீர்ப்பு , காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு ஆகியவற்றை கர்நாடக அரசு உதாசீனம் செய்தது. கர்நாடக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கர்நாடக அரசியல் கட்சிகள் காவிரி நதி நீர்ப் பிரச்சினயைத் தமக்குச் சாதக‌மாகப் பாவித்தன.

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் காவிரி நதி நீர்ப்பிரச்சினயைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தின. காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் மத்தியில் ஆட்சியமைத்தபோது கூட தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நீரைக் கொடுப்பதற்கு  தமது அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்டால் கர்நாடக அரசு அதனை மீற முடியாது என்பதனால் ஜெயலலிதா அதில் அதிக அக்கறை காட்டினார்.  இந்திய மத்திய அரசு கர்நாடக அரசுக்கு பல வழிகளிலும் எடுத்துக் கூறியது. கர்நாடக அரசு மசிவதாக இல்லை. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படி தமிழக அரசுக்கு நீரைக் கொடுத்தால் தேர்தல் சமயத்தில் எதிரிக் கட்சிகள் அதனைப் பிரபல்யப்படுத்தும் என்றதால் கர்நாடகத்தை ஆட்சி செய்த அரசுகள் தமிழகத்தை வஞ்சிப்பதில் போட்டி போட்டன.

காவிரி நதி நீரை நம்பி விவசாயம் செய்த தமிழக விவசாயிகள் தற்கொலை செய்தனர். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு வழி இன்றி கஸ்டப்படுகின்றனர். முல்லைபெரியாறு அணையைத் திறந்து தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நீரைக் கொடுக்காது தமது அடுத்த ஆட்சி பற்றியே யோசித்தன. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பில்லை, அதற்கும் பதிலாகப் புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்து முல்லைப்பெரியாறு அணை உறுதியானது  என்பதை  நிரூபித்தது.  இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசு இதழில் பிரசுரமானதால் ஜெயலலிதா மகிழ்ச்சியடைந்துள்ளார். தனது அரசுக்கு கிடைத்த  சாதனை என்று கருதுகிறார். நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இந்த விவகாரம் தனக்கு எதிராகத் திரும்பி விடுமே என்ற அச்சத்தில் அதிர்த்து போயுள்ளார் கருணாநிதி.

தமிழக சட்ட மன்றத் தேர்தலின்போது வைகோவை, ஜெயலலிதா அலட்சியப்படுத்தியதனால்தமிழக சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை. கடைசி நேரம்வரை காத்திருக்க வைத்து கழுத்தறுத்த ஜெயலலிதாவின் மீது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த  நிலையில் கடந்த வாரம் வைகோவை நடு வீதியில் சந்தித்து நலம் விசாரித்தார் ஜெயலலிதா.

தமிழகத்தில் மது ஒழிப்பை வலியுறுத்தி வைகோ, டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மது ஒழிப்பு விழிப்புணர்வை பொது மக்களிடம்  ஏற்படுத்துவதற்காக வைகோ நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சிறுதாவூர் செல்லும்சாலையில் வைகோவின் பாத யாத்திரையைக் கண்ட ஜெயலலிதா காரிலிருந்து இறங்கி வைகோவை நலம் விசாரித்தார். சுமார் ஏழு நிமிடம் நடைபெற்ற இச்சந்திப்பு கண், கை, கால், மூக்கு வைத்து வைகோ ஜெயலலிதா கூட்டணி என்று பரபரப்பான செய்தியானது.

ஜெயலலிதா என்னைச் சந்தித்தது எதேச்சையானது. இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று வைகோ அறிக்கைவிட வேண்டி நிலை ஏற்பட்டது இச் சம்பவம் வைகோவுக்கு எதேச்சையானதாக இருக்கலாம்.  ஆனால்ஜெயலலிதா பயணம் செய்யும் பாதையில் பலத்த பாதுகாப்பு இருக்கும் மக்கள் நடமாட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். எதிரும் புதிருமான  அரசியல் தலைவர்கள் வீதியில் சந்திக்கும் வகையிலானபயணப் பாதையை ஜெயலலிதாவின் போக்குவரத்துக்குப் பொறுப்பானவர்கள் மேற்கொண்டிருக்க மாட்டார்கள். ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல்  இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க முடியாது.

தமிழகம் ,துவை உட்பட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று உணர்ச்சிவசப்பட்டு ஜெயலலிதா அறிவித்துவிட்டார். தனித்துப் போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தவர்கள் வைகோ, ஜெயலலிதா சந்திப்பைச்  சாதகமாக நோக்குகின்றனர்.

ஜெயலலிதாவின்  நடவடிக்கையில் தற்போது  பலமாற்றங்கள் தெரிகின்றன.  விஸ்வரூபம் படப் பிரச்சினையின்போது தமிழகமும் மத்திய அரசும்தனக்கு எதிரõக  கிளர்ந்தொழுந்ததைக் கண்டதும் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டிதனது  நிலைப்பாட்டை  விளக்கினார். வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த வைகோவை  வலியச் சென்று நலம் விசõரித்தார். தான் விரும்பாத அரசியல் தலைவர்களைச் சந்திப்பதை  ஜெயலலிதா தவிர்த்தே வந்துள்ளõர். காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த போது சோனியாவுடன் மேடை ஏறவில்லை.  விஜயகாந்துடன்  கூட்டணி அமைத்த போதும்  இருவரும் ஒரே மேடையில் ஏறவில்லை. வைகோவை நடுவீதியில் ஜெயலலிதா கண்டு கதைத்ததை அனைவரும் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.

கருணாநிதியும் காங்கிரஸும் விஜயகாந்தை நெருங்குவதனால் பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவின் மனதில் தோன்றியதனாலேதான் வைகோவை அவர் சந்தித்தார். எனக் கருதவும் இடமுண்டு.

புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் நீண்ட நாள் கனவு. அதற்காக அவர்  தேர்ந்தெடுத்த இடங்களுக்கு பலத்த எதிர்ப்புக்கள் தோன்றின. சென்னை ராணி மேரி கல்லூரியிலும் புதிய தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. ஜெயலலிதா கனவுளகில் சஞ்சரிக்க கருணாநிதி புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டி முடித்து விட்டார். 

கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தில் கால் வைக்க மாட்டேன் என்று சபதம் செய்த ஜெயலலிதா புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற முயற்சி செய்தார். அதற்கும் பல தடைகள் வந்தன. நீதிமன்றம், பசுமைத்தீர்ப்பாயமையம் என்பன கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இறுதியில்  நீதிமன்றமும் பசுமைத் தீர்ப்பாயமையமும் அனுமதி வழங்கியதால் ஜெயலலிதா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
மெட்ரோநியூஸ்  01/04/13

No comments: