Wednesday, April 25, 2018

அரசியலுக்கு அப்பால் அசிங்கப்பட்ட ஆளுநரின் கை


 இந்திய மத்திய அரசின் கைப்பாவையான தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித்தின் செயற்பாடுகள் இதுவரை காலமும் அரசியலில் அத்துமீறியதாக இருந்தது. இளம் பெண்களின் கன்னத்தை வருடியதாலும் மாணவிகளைப் பாலியலுக்கு அழைத்த குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்ட உதவிப் பேராசிரியை நிர்மலாதேவியின் தொலைபேசி உரையாடலாலும்  ஆளுநர் அசிங்கப்பட்டு நிற்கிறார்.
ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து அதிகாரப் போட்டியால் தமிழக அரசு அல்லாடியது. சசிகாலாவுக்கு எதிராக பன்னீர் போர்க்கொடி தூக்கியதால்  தமிழக அரசு ஆட்டம்கண்டது. தமிழகத்தில் கால் பதிக்கமுடியாது தவித்த பாரதீய ஜனதாக் கட்சி அச் சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாக மாற்றியது. தமிழக அரசின் உட்கட்சிப்பூசல் அசிங்கமானசெயற்பாடு அனைத்தையும் மறைத்து அதனைக் காப்பாற்றியது.
தமிழக அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டங்கள் தமிழக அரசின் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் எதனையும் தமிழக ஆளுநரும் மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசுக்கு எதிராக ஆதாரங்களுடன்  கொடுக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும்  குப்பைக்கூடைக்குள் போடப்பட்டன.

மாநில அரசைக் கண்காணிப்பதுதான் ஆளூநரின் பணி. மாநில அரசு கலைக்கப்பட்டு ஆளுநரின் கையில் அதிகாரம் கொடுக்கப்பட்டால் மட்டுமே அங்கு ஆளுநர் சில முடிவுகளை எடுக்கலாம். அதற்கும் ஜனாதிபதியும் மத்திய அரசும் அனுமதி வழங்க வேண்டும். பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநரின் மூலம் குடைச்சல் கொடுக்கப்படுகிறது. மத்திய அரசின் உளவாளியாக ஆளுநர் செயற்படுகிறார்.
காங்கிரஸின் ஆட்சி நடக்கும் புதுவையில் துணை ஆளுநர் கிரான் பேடி அதிகார அத்துமீறல்  செய்கிறார். கிரான் பேடியின் நியமனங்களை புதுவை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சில பிரச்சினைகள் நீதி மன்றத்துக்குப் பாரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் ஆளுநர் தனது அதிகாரமீறலை மேற்கொள்கிறார். தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்த்துக் குரல் கொடுக்கின்றன. தமிழக அமைச்சர்கள் அவற்றை நியாயப்படுத்துகின்றனர்.
ஆய்வு மெற்கொள்ளும் சாட்டில் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆளுநர் தமிழக அரசின் குற்றம் குறைகளைக் கேட்டறிகிறார்.   தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிராகப் போராடுகின்றன. ஆளுநருக்குக் கறுப்புக்கொடி காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசு ஆளுநரின் செயலை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டு தன்னைக் காப்பாற்றிக்கொள்கிறது. ஒரு வீட்டின் குளியலறையை ஆளுநர் எட்டிப்பார்த்ததாகவும் அப்போது ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுத்தது பின்னர் அது அப்படியே அமுக்கப்பட்டுவிட்டது.
விருதுநகர் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவியில் விவகாரத்தில் ஆளுநரின் பெயரும் இருப்பதால் அவரை மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. மாணவிகளைப் பாலியலுக்கு அழைத்த நிர்மலாதேவியின் தொலைபேசி உரையாடல் வெளியானதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ” ஆளுநரை தாத்தா என நினைக்காதீர்கள். அவருக்கு அருகே நான் இருக்கும் வீடியோ அனுப்பி உள்ளேன் பார்த்தீர்களா?” என நிர்மலாதேவி தெரிவித்ததால் ஆளுநருக்கும் இதில் சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நிர்மலாதேவியும் அவருக்கு உடந்தையாக இருந்த ஒரு பேராசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னொரு பேராசிரியர் தலைமறைவாகிவிட்டார்.பிரச்சினை பெரிதானதால் ஆளுநரின் பணிப்பின் பேரில் விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரண சட்டப்படி செல்லுமா என்ற கேள்விக்கு சரியான விடை கிடைக்கவில்லை. சிபிஐ விசாரணை  நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழக அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.
அருப்புக்கோட்டை உதவி பேராசிரியை நிர்மலாதேவியின் தொலைபேசி உரையாடல் விவகாரம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து துறை அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரிடமும் இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.  

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் செல்லத்துரைக்கு ஆதரவாக ஒரு குழுவும், எதிராக ஒரு குழுவும் நிர்வாக ரீதியாக செயல்படுகிறது. பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் சங்கங்களும் நிறைய உள்ளன. நிர்மலாதேவியின் விவகாரத்தை பெரும்பாலானோர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரச்சினையுடன் இணைத்தே பேசுகின்றனர். எதிலும் சம்பந்தப்படாத அலுவலர்கள், நிர்மலாதேவி பிரச்சினையால் பல்கலைக்கழகத்துக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற கவலையில் உள்ளனர். நிர்மலாதேவிக்கு இவ்வளவு செல்வாக்கு உள்ளதா எனவும் சிலர் ஆச்சரியப்படுகின்றனர். :
பொதுவாக, பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சித் துறையில் சிறு தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இல்லை என ஒரேயடியாக கூறமுடியாது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கும் இது பொருந்தும். ஆராய்ச்சிப் படிப்பை முடித்து பிஎச்டி டிகிரியை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்குவது என்பது அந்தந்த மாணவர் சார்ந்த பேராசிரியர்களின் கையில் (வழிகாட்டி) இருக்கிறது.
பிஎச்டி முடிக்க இழுத்தடிப்பு நடக்கிறது. இதை தவிர்க்க சிலர் பணம் வாங்குகின்றனர். மிகச் சிலர் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர். சாதி ரீதியாக மாணவர்களைக் கையாளும் போக்கும் உள்ளது.
ஆராய்ச்சி மாணவர்களை தனிப்பட்ட முறையில் வேலை வாங்கும் பேராசிரியர்களும் உண்டு. தற்போது அது குறைவு. சிலர் ரூ.2 லட்சம் முதல் 7 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பிஎச்டி படிப்பை முடித்துக் கொடுக்கும் நிலையும் உள்ளது. காரணம், பல லட்சங்களைக் கொடுத்து பேராசிரியர் பணிக்கு வருபவர்கள், ஆராய்ச்சிப் படிப்புக்கு வரும் மாணவர்களிடம் அதை வசூலித்து ஈடுகட்டிவிடலாம் என கருதுகின்றனர் என்ற கருத்துக் உள்ளது.

தவிர, உதவித் தொகைக்கான ஆராய்ச்சிப் படிப்புக்கு யுஜிசி தேர்வு எழுதி வருவோருக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வரை 5 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்தொகைக்கும் சில வழிகாட்டி பேராசிரியர்கள் ஆசைப்படுகின்றனர்
படிப்பை முடித்தால் போதும் என்ற எண்ணத்தில், குடும்ப சூழல் கருதி, பாதிக்கப்படுவோர் வெளியில் புகார் தர முன்வருவது இல்லை.
திருவையாற்றில் நாட்டிய பெண்ணின் கன்னத்தை தட்டியுள்ள ஆளுநர் சமூக ஆர்வலர்களின் கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார். தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநரின் பெயரும் அடிப்பட்டது. இதனால் பதவியேற்று ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்காத ஆளுநர் புரோஹித், திடீரென செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து, பேராசிரியர் நிர்மலாதேவி குறித்த செயலுக்கு அனைவருக்கும் விளக்கமளித்தார்.

 
செய்தியாளர் சந்திப்பு முடிந்தும், பெண் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவரது கன்னத்தை ஆளுநர் செல்லமாக தட்டினார். இதனால் அந்த பெண் பத்திரிகையாளர், தனது அனுமதி இல்லாமல் ஆளுநர் எப்படி தன் கன்னத்தை தொடலாம் என ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். ஆளுநரின் இந்த செயல் அரசியல்கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதையடுத்து ஆளுநர் மன்னிப்பும் கேட்டுவிட்டார்.
 இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திருவையாற்றில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, நாட்டிய பெண்ணின் கன்னத்தை பாராட்டும் தெரிவிக்கும் வகையில் தட்டியதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 13 ஆம் திகதி திருவையாற்றில் சீனிவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவையை தொடங்கி வைக்க ஆளுநர் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆளுநரை வரவேற்கும் விதமாக விழா குழுவினர் சார்பில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 
அப்போது நடமாடிய ஒரு பெண்ணின் கன்னத்தை பாராட்டும் விதமாக ஆளுநர் தட்டிக் கொடுத்ததாகவும். அந்த செயல் அப்போது சாதாரணமாக தெரிந்தாலும் தற்போதுதான் அதன் அர்த்தம் புரிவதாகவும் நாட்டிய விழாவில் பங்கேற்றவர்கள் தற்போது கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தை தட்டிய விவகாரமே அடங்காத நிலையில், மீண்டும் அதுபோன்ற செயலில் ஆளுநர் ஈடுபட்டிருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசைக் காப்பாற்றும் மத்திய அரசுக்கு எதிராக ஆளுநரின் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.
  

No comments: