Sunday, December 17, 2023

அரசியல் அதிகாரத்தை இழந்த விஜயகாந்த்


 தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய வியஜகாந்த், அரசியல் அரங்கிலும்  புரட்சிய ஏற்படுத்தி தனக்கென இரு இடத்தை ஏற்படுத்தினார். அரசியல் அரங்கில் வெற்றி, தோல்வி சகஜம். முதல்வர் கனவுடன் அரசியல் அரங்கில் காலடி எடுத்து வைத்த வியஜகாந்த், எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்குப்பின்னர் குப்புறப் படுத்து விட்டார்.

விஜய‌காந்தின் பின்னால் அவருடைய ரசிகர்  படை இருந்தது. அரசியல் உச்சாணிக்கொம்பில் வியஜகாந்தை ஏற்றி அழகுபார்த்தவர்  ஜெயலலிதா. அவரைக் படு குழுயில் விழுத்தியவரும் அதே ஜெயலலிதா தான். 

தமிழக அரசியலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த வியஜகந்தின் செல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. 5 சத வீதமாக இருந்த வியஜகாந்தின் வாக்கு வங்கி ஒரு சத வீதமாக வீழ்ச்சியடைந்தது.இந்த நிலையில் விஜயகாந்தின் இடத்தை  தன்னால் நிரப்ப முடியும் என்ற நப்பாசையுடன் அவருடைய மனைவி  பிரேமலதா தனக்குத் தானே முடி சூட்டிக்கொண்டுள்ளார். 

 நடக்க முடியாத, கைகால் அசைக்கமுடியாத நிலையில் இருக்கும் விஜயகாந்தை  முன்னிறுத்தி அரசியல் நடத்துகிறார்  பிரேமலதா.  பொம்மை போல்  இருக்கும் விஜயகாந்தை  பொது வெளியில்  கறுத்தக் கண்ணாடி அணிந்து  சக்கர நாற்காலியில் இருத்தி காட்சிகாட்டி  அசிங்கப்படுத்துகிறார் பிரேமலதா. அதன் உச்சக்கட்டமாக விஜயகாந்தின் பதவியைக் கையகப்படுத்தினார்.

டிசம்பர் 14 ஆம் திகதி செயற்குழுக்கூட்டம் நடைபெறுவதாக   அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்தை பார்க்க பலர் ஆர்வம் காட்டி திருவேற்காடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் குவிந்தனர்.   விஜயகாந்த் விழா மேடைக்கு வந்ததும் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது. கப்டன் கப்டன் என முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து பொதுக் குழு கூட்டம் கூடியது. தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளராக இருந்தவருமான விஜயகாந்த் அங்கு நாற்காலியில் பிரேமலதாவுக்கு பக்கத்தில் உட்கார வைக்கப்பட்டார்.

அவர் பிரத்யேக நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் முன்பை விட தற்போது தெம்பாகவே உள்ளார். அருகே இருந்த நிர்வாகி பார்த்தசாரதியிடம் பேசினார். இந்த நிலையில் தேமுதிக பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் பிரேமலதாவை பொதுச் செயலாளராக அறிவித்து விஜயகாந்த் உத்தரவிட்டார். இதையடுத்து பிரேமலதாவின் கைகளை பிடித்து விஜயகாந்த் உயர்த்தினார். பிறகு பிரேமலதா, விஜயகாந்தின் காலில் விழுந்து வணங்கினார். கட்சியில் செயற்குழுவைக் கூட்டிய பிரேமலதா,  செயற்படாமல்  இருக்கும் விஜயகாந்திடம் இருந்த செயலளர் பதவியைக் கைப்பற்றினார்.

கட்சியில் சகல அதிகரங்களும் பிரேமலதாவின் கைகளுக்குச் சென்றுவிட்டது. மிகவும் முக்கியமான முடிவுகளை அவர் எடுப்பார். தேர்தல் வியூகம் வகுப்பது, கூட்டணி பேரம் அனைத்தும்  பிரேமலதாவின் முடிவே இறுதியானதாகும்.  விஜயகாந்துக்கு கிடைத்த வரவேற்பு பிரேமலதாவுக்கு கிடைக்காது.  தேமுதிகவின் எதிர்காலம் கேள்விக்குறி தான். பத்தோடு பதினொன்றாக தான் அந்தக் கட்சி இனி பார்க்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

விஜயகாந்த் என்ன நோக்கத்திற்காக கட்சி ஆரம்பித்தாரோ அந்த நோக்கத்திற்கான பாதையிலிருந்து தேமுதிக விலகி பல வருடங்கள் ஆகிவிட்டது.  விஜயகாந்துக்கு கிடைத்த வரவேற்பும், மரியாதையும் பிரேமலதாவுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை.  தேமுதிகவின் தேவை தமிழ்நாட்டில் குறைந்துவிட்டது.  2014, 2016, 2019, 2021 என எல்லா தேர்தல்களிலும் தேமுதிகவின் வாக்கு வங்கி சரிவை நோக்கியே  சென்றன.  விஜயகந்டி இடத்தி சீமான்  கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார். 

பிரேமலதா கட்சியின் செயலாளராகிவிட்டார். அவர்  வகித்து வந்த பொருளாளர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜயகாந்த் கட்சியில் செயல்பட முடியாத போது பிரேமலதாவுடன் பக்க பலமாக தம்பி சுதீஷும், மகன்  விஜய பிரபாகரனும் இருந்தார்கள் பொதுக் கூட்டத்திலேயே விஜய பிரபாகரனுக்கு தலைவர் பதவி வழங்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் இதற்கு விஜயகாந்தின் உண்மையான தொண்டர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்து கொண்டே அந்த அறிவிப்பு  அமுக்கப்பட்டது.  பொருளாளர் பதவி  விஜய பிரபாகரனுக்கு கொடுக்கப்படுமா இல்லை சுதீஷுக்கு கொடுக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுச் செயலாளராக பதவியேற்ற பிரேமலதா இனி கட்சியின் பொருளாளர் பதவியை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்.  தம்பியா, மகனா என எடுத்துக் கொண்டால் பிரேமலதாவின் விருப்பம்  மகனாத்தான் இருக்கும். தம்பி சுதீஷுக்கு பொருளாளர் பதவி வழங்காமல் தனது மகனுக்கு வழங்கினாலும் வழங்குவார் என சொல்லப்படுகிறது. 

தேசிய முன்னேற்ற திராவிடக் கழகத்தின்  முகமாக இருந்த விஜயகாந்த் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட நிலையில் அந்த கட்சிக்கான ஆதரவு தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெகுவாக குறையலாம்,அல்லது மற்ற கட்சிகள் தேமுதிகவுக்கு போதிய ஆதரவு அளிக்காமல் போகலாம். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில்  தமிழ்நாட்டில்   மெகா கூட்டணி அமைந்தது. அதிமுக , பாஜக ,பாமக ,தேமுதிக  உடன் மேலும் பல சிறிய இணைந்து  தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. அதன்பின் அமமுகவுடனும் தேமுதிக கூட்டணி முறிந்தது. இதை தொடர்ந்து தேமுதிக எந்த பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தது.  விஜயகாந்தின் கட்சிக்கான செல்வாக்கு மோசமாகச் சரிந்த நிலையில்  கட்சியின் புதிய பொதுச்செயலாளராக பிரேமலதா தெரிவாகி உள்ளார். 

தேமுதிக தொடங்கப்பட்டதில் இருந்து அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து வந்த பிரேமலதா விஜயகாந்த், 2018ஆம் ஆண்டில் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

இந்தக் காலகட்டத்தில் விஜயகாந்த்தின் உடல்நலம் வெகுவாகக் குன்றிய நிலையில் முக்கிய முடிவுகளை பிரேமலதாவே எடுத்து வந்தார். தற்போது அதை அதிகாரபூர்வமாக்கும் வகையில், அவர் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் முழுமையான கட்டுப்பாடு பிரேமலதாவிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

கட்சி தொடங்கப்பட்டபோது விஜயகாந்த்தின் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த ராமு வசந்தனே கட்சியின் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டார்.

விஜயகாந்த்தின் நீண்டகால நண்பராக இருந்தவரும் முதன்முதலில் விஜயகாந்த் பெயரில் நற்பணி மன்றம் அமைத்தவருமான மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2006ஆம் ஆண்டுத் தேர்தலில் கட்சிக்கு பெரும் எண்ணிக்கையில் வாக்குகள் கிடைத்த நிலையில், வேறு கட்சிகளில் இருந்து மருங்காபுரி பொன்னுச்சாமி, ஆஸ்டின், கு.ப. கிருஷ்ணன் போன்ற தலைவர்களும் தொண்டர்களும் இணைய ஆரம்பித்தனர். கட்சி வேகமாக வளரத் தொடங்கியது. இந்தத் தருணத்தில், அதாவது 2009 வாக்கில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ராமு வசந்தன் காலமானார்.

இதற்குப் பிறகு, விஜயகாந்த்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷின் செல்வாக்கு வளர ஆரம்பித்தது. 2013 வாக்கில் கட்சியில் இருந்து பலர் வெளியேற ஆரம்பித்தனர். விஜயகாந்த்தின் நண்பராக இருந்த சுந்தர்ராஜன் உட்படப் பலர் தேமுதிகவின் அதிருப்தி எம்எல்ஏக்களாக மாறி, அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.விஜயகாந்தால்  தூக்கி  நிருத்த முடியாத கட்சியை பிரேமலதாவால்   தூக்கி நிறுத்த முடியாது என்பது  நிதர்சனம். கட்சியின்   பொதுக்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

செய்யப்பட்டு உள்ளது.  விஜயகாந்த் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிரேமலதாதான் இனிமேல் கூட்டணி குறித்து முடிவு எடுப்பார். ஆனால் அவர் பொதுவாக இறங்கி போகும் இயல்பு கொண்டவர் இல்லை. அதிக இடங்களை கேட்பார். அந்த இடங்களை கொடுக்கும் வரை வாதம் செய்வார். அரசியலில் கட்சிகள் இறங்கி செல்லும் . ஆனால் பிரேம  அவர் கேட்ட இடங்களில் விடாப்பிடியாக இருப்பார். அதனால் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதே கடினம் என்ற நிலை அதிமுக , திமுகவிற்கு இருக்கும். ஏற்கனவே பிரேமலதா உடன் பேச்சுவார்த்தையில் எடப்பாடிக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டு உள்ளது. அதேபோல் துரைமுருகனுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டு உள்ளது. இதனால் திமுக, அதிமுக இரண்டும் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதைத் தவிர்க்கலாம்.  விஜயகாந்த்  இல்லாமல் கட்சியின் பிரசாரம் எப்படி இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. 

No comments: