Tuesday, September 16, 2025

உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட தகுதி பெற்ற அணிகள்


 அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட 18 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

 இதுவரை காலமும் 32  நாடுகள்  உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடின.  2026 ஆம் ஆண்டு 48 நாடுகள்  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட உள்ளன.    உலகெங்கிலும் நடைபெறும் தகுதிச் சுற்றுப் போட்டிகள்  இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

வட அமெரிக்கா (CONCACAF) - அமெரிக்கா, கனடா, மெக்சிகோ

ஆசியா (AFC) - ஜப்பான், ஈரான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஜோர்தான், உஸ்பெகிஸ்தான்

ஓசியானியா (OFC) - நியூசிலாந்து

தென் அமெரிக்கா (CONMEBOL) ‍ ஆர்ஜென்ரீனா, பிறேஸில், ஈக்வடார், உருகுவே, பராகுவே, கொலம்பியா

ஆப்பிரிக்கா (CAF) - மொராக்கோ, துனிசியா ஆபிரிக்க நாடான மொராக்கோ முதன் முதலாக  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.

  

 

 

 

தேசிய அணிக்கு திரும்ப மனுவல் நொயர் தயாராக‌ உள்ளார்


 ஜேர்மனிய‌ உதைபந்தாட்ட தேசிய அணியின்  முன்னாள் கப்டனும்  கோல்கீப்பரும்,  2014 உலகக்கிண்ண சம்பியன் வீரருமான   மனுவல் நியூயர்  தேசிய அணிக்கு மீண்டும் வருவதற்கான வாய்ப்பு பரபரப்பாகப் பேசப்படுகிறது.

39 வயதான பேயர்ன் மியூனிக் கோல்கீப்பர் விளையாடுவதற்கு தகுதியாக‌ இருப்பதாக அவரது  மன்னேஜர்  தாமஸ் க்ரோத் தெரிவித்தார்.

தற்போதைய முதல் தேர்வான  கோல்கீப்பர் மார்க்-ஆண்ட்ரே டெர் ஸ்டீகன் முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓரங்கட்டப்பட்டதால், மனுவல் நொயரின் மீள் வருகைக்கான கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. லோதர் மாத்தேயஸ், பாஸ்டியன் ஸ்வைன்ஸ்டீகர் , செப் மேயர் உள்ளிட்ட பல முன்னாள் சர்வதேச வீரர்கள்,  மனுவலை மீண்டும் அழைத்து வருமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு மிக  ஜேர்மனிய தேசிய உதைபந்தாட்ட அணியில் மனுவல்  இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

 மனுவல் நொயர், ஜேர்மனி,உதைபந்தாட்டம், விளையாட்டு,   

Monday, September 15, 2025

இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்

இந்திய பாகிஸ்தான் போட்டி என்றால் பெரும் பரபரப்பு இருக்கும். ஆசியக் கிண்ணப் போட்டியில் இரண்டு அணிகளும்  போட்டி உலகளாவிய ரீதியில் எதிர் பார்க்கப்பட்டது. வீறாப்பு பேச்சுகள், சபதங்கள் என போட்டிக்கு முன்னமேயே பரபரபால் எகிறியது.

 கிறிக்கெற் ரசிகர்களால் பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் திக‌தி துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடப் போவதாக அறிவித்தது.  முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 127 ஒட்டங்கள் மட்டுமே எடுத்தது. 128 என்ற  வெற்றி இலக்குடன் களம்  இறங்கிய இந்தியா 15.5 ஓவர்களில்  3 விக்கெற்களை இழந்து  131 ஓட்டங்கள் எடுத்து  7 விக்கெற்களால் வெற்றி பெற்றது.

 ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சாய்ம் ஆயுப் கோல்டன் டக் அவுட்டானார். அடுத்து வந்த முகமது ஹரிஸையும் 3  ஓட்டங்களில் வெளியேற்றினார்  பும்ரா  மற்றொரு துவக்க வீரர் ஃபர்கான் நிதானமாக விளையாடினார்.


ஃபகார் ஜமானை 3 ஓட்டங்களில்  அவுட்டாக்கிய அக்சர் படேல் அடுத்து வந்த பாகிஸ்தான் கப்டன் சல்மான் ஆகாவையும் 3  ஓட்டங்களுடன் அனுப்பினார்.  அடுத்த ஓவரில் ஹசன் நவாஸ் 5, முகமது நவாஸ் 0 ஆகியோர் அடுத்தடுத்து குல்தீப் யாதவ் சுழலில்சிக்கியதால்  12,2 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 64 ஓட்டங்கள் எடுத்தது.  மறுபுறம் நங்கூரமாக விளையாடி வந்த ஃபர்ஹானும் 40 (44)  ஓட்டங்களில் ஆட்டமிழந்ததுடன்  பாகிஸ்தான் ரசிகர்களின் நம்பிக்கை சிதறியது.  ஃபஹீம் அஸ்ரப் 11, சுபியன் முஹீம் 10 ஓட்டங்கலுடன் வெளியேறினர்.

 சாகின் அப்ரிடி கடைசி நேரத்தில்  4 சிக்சர்களை பறக்க விட்டு 33* (16)  பாகிஸ்தான் மானத்தை காப்பாற்றினார். அவருடைய அதிரடியால் தப்பிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெற்களை  இழந்து 127 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரித் பும்ரா   அக்சர் படேல் ஆகியோர் தலா 2, குல்தீப் யாதவ் 3  வருண், பண்டையா ஆகியோர் தலா 1 விக்கெற் எடுத்தனர்.

  128 ஓட்டங்க‌ள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம்  இறங்கியது இந்தியா.  சுப்மன் கில் 10 ஓட்டங்களுடனும், திலக் வ்ர்மா, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல்  47 ஓட்டங்களும், ஷிவம் துபே ஆட்டமிழக்காமல்  10 ஓட்டங்களும் எடுத்தனர். இந்தியா 15.5 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்து 131 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெற்களால் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை தக்க  வைத்துள்ளது.

நாணயச் சுழற்சியின்  பின்னர் இந்திய அனி கப்டன் பாகிஸ்தான் கப்டனுடன் கை குலுக்கவில்லை. ஆரம்பமே சர்ச்சையானது.

பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிப்பு  வெளியானதும்  அரங்கமே தேசிய கீதத்துக்கு மதிப்புக் கொடுக்கத் தயாராகியது.  பாகிஸ்தான் வீரர்கள் நெஞ்சில் கை அகித்தனர். அப்போது தேசிய கீதத்திற்கு பதிலாக   ஜிலேபி பேபி பாடல் ஒலிபரப்பாகியது. பாகிஸ்தான் வீரர்கள் குழம்பினர். அரங்கத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியானார்கள். அடுத்த நொடியில்  பாகிஸ்தானின் தேசிய கீதம்  ஒலிபரப்பானது.

பும்ராவின் 5 வருட சாதனையை பாகிஸ்தானின்  இளம் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான்,  முடிவுக்குக் கொண்டு வந்தார்.

 உலக நம்பர் 1 பந்துவீச்சாளரான பும்ராவையே அட்டாக் செய்தார்  இளம் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான். பும்ரா வீசிய 4-வது ஓவரின் மூன்றாவது பந்தை, வைட் லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார்.அந்த சிக்ஸரைப் பார்த்து  கிறிக்கெற் ரசிகர்கள் வியப்படைந்தனர்.வர்ண்னையாளர்கள்  புகழ்ந்து தள்ளினார்கள்.

 பும்ரா வீசிய 6-வது ஓவரில் அவர் மீண்டும் ஒரு அதிரடியான புல் ஷாட்டை பேக்வேர்ட் ஸ்கொயர் திசையில் பறக்கவிட்டு இரண்டாவது சிக்ஸரையும் அடித்து, இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்..

ஃபார்ஹானின் இந்த இரண்டு சிக்சர்கள் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக இது வரை ஒரு சிக்சர் கூட பும்ரா விட்டுக்கொடுத்ததில்லை என்கிற 5 வருட சாதனையை உடைத்தார் சாஹிப்சாதா  ஃபார்ஹான்.  பாகிஸ்தான் அணி பும்ராவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த முதல் சிக்சர் இதுவாகும்.  பும்ப்ராவின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்கள் அடிப்பேன் என சபதம் செய்த முகமட் ஹரிள்  பண்டையா வீசிய பந்தை  பும்ராவிடம் பிடிகொடுத்து  ஆட்டமிழந்தார்.

பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடக் கூடாது என பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இருநாடுகளுக்கு இடையேயான அரசியல் , எல்லை தாண்டிய பிரச்னைகளின் அனல்,   போடிட்டியின் போது ஆடுகளத்திலும் உணரப்பட்டது.

நாணயச் சுழற்சியின் பின்னர்  வழக்கமாக இரு அணிகளின் கப்டன்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் கப்டனின் முகத்தை கூட பார்க்காத, இந்திய கப்டன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்க மறுத்து அங்கிருந்து வெளியேறினார்.

தொடர்ந்து, போட்டியின் முடிவிலும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது என்பது மரியாதை நிமித்தமாக பின்பற்றப்படுகிறது. ஆனால், நேற்றைய போட்டியில் இலக்கை எட்டியதுமே, பேட்டிங் செய்து கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே ஆகியோர் நேராக இந்திய பெவிலியனை நோக்கி புறப்பட்டனர். பாகிஸ்தான் வீரர்களும் கைகுலுக்குவதை எதிர்பார்த்து காத்திருக்காமல், பெவிலியனை நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

 போடிட்யின்போது கையில் கருப்பு பேட்ஜை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடினர். வெற்றியை இந்திய இராணுவத்திற்கும் பஹால்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் சமர்பிப்பதாக கப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கைகுலுக்காததால்  பாகிஸ்தான் கப்டன் பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்தார்.

  

தமிழக அரசியல் கட்சிகளுக்குள் நீடிக்கும் குழப்பம்


 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னமும் ஏழு மாதங்கள்  இருக்கின்ற நிலையில்  அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.  முதலமைச்சர் ஸ்டாலினும், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடியும்  தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளனர். தோழமைக் கட்சிகள்  கொடுக்கும் நெருக்கடிகளைச் சமாளித்து ச்டாலினின் பயணம் தொடர்கிறது.

ஆனால், எடப்பாடியின் நிலை முதலுக்கே மோசமாக  உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்கலில்  ஒருவரான செங்கோட்டையன் , எடப்பாடிக்கு எதிராகக் களம் இறங்கி உள்ளார். அண்ணா திராவிட முன்னேற்ற்க் கழகத்தை எம்ஜிஆர் ஆரம்பித்தபோது  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறியவர்களில் செங்கோட்டையனும் ஒருவர்.  .பன்னீர்ச்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் இருந்து வெளியேற்றிய எடப்பாடி  செங்கோட்டையன் மீதும் கைவைத்துள்ளார். கட்சி ஒற்றுமையாக  இருக்க வேண்டும்.  பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் மனம் திறந்து சொன்னதால் எடப்பாடி அவரைத் தூக்கி எறிந்தார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பி தமிழ்கத்தில் கால் வைக்கிறது பாரதீய ஜனதா. ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல  பிரிவாகச் சிதறி உள்ளது. இதனை பாரதீய ஜனதா ரசிக்கவில்லை.

செப்டம்பர் மாதம் துவங்கியது முதலே அதிமுக மற்றும் அதிமுக-பாஜக கூட்டணிக்குள் பல மாற்றங்கள் நடந்து வருகிறது. மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சிக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் அறிவித்தனர். கூட்டணி பற்றி டிசம்பரில் சொல்வதாக  பிரேமலதா அறிவித்துள்ளார். இதனால் அதிமுக பாரதீய ஜனதாக் கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது.  செங்கோட்டையனுக்கு ஆதரவாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சுமார் ஆயிர்ம் பேர் இராஜினாமாக் கடிதங்களை கொடுத்துள்ளனர்.

எடப்பாடியை முதலமைச்சராக்க தினகரனும், அண்ணாமலையும் விரும்ம்பவில்லை என்பதை பகிரங்கமாக அறிவித்துவிட்டனர்.

செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனால் தான் தாங்கள் கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்த டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்த போது, இபிஎஸ்., முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது. அதனால் தான் கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். ஓபிஎஸ்.,ம் இதையே தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் செங்கோட்டையனை சந்திக்க உள்ளதாகவும், செங்கோட்டையன் - சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக   மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், டில்லி சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்ததாக தெரிவித்தார். அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக அவரிடம் பேசியதாக கூறினார். இதனால் அதிமுக ஒன்றிணைவது பற்றி, அமித்ஷாவிடம் எதற்காக பேச வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், தானும் அமித்ஷாவை சந்தித்ததாக அதிமுக முன்னாள் சபாநாயகர் தம்பிதுரையும் தெரிவித்துள்ளார். இதனால், அதிமுக.,விற்குள் என்ன தான் நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்யும் இடங்களில் அதிமுக.,வின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இது திமுக.,வை மட்டுமல்ல அரசியல் களத்தில் உள்ள பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதே நிலை தொடர்ந்தால் எளிதாக வெற்றி பெற்று, இபிஎஸ் முதல்வராகி விடுவார் என்பதால் அதை தடுப்பதற்காக கூட்டணியிலும், அதிமுக.,விற்குள்ளும் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அரசியல் வட்டாரங்களில் இது பற்றி விசாரித்த போது, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் இபிஎஸ் முதல்வராவதை விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.

ஆனால் இவர்களை சமாதானப்படுத்தி, கூட்டணியை பலப்படுத்த பாஜக முயற்சி வருகிறதாம். இருந்தாலும் கூட்டணியில் தொடர தாங்கள் தயாராக இருப்பதாகவும், அப்படி தொடர வேண்டும் என்றால் இபிஎஸ் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜக.,விடம் ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்கள் நிபந்தனை விதித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. வலுவான ஒரு கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருக்கும் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பிறகு எப்படி மாற்றுவது? அப்படியே மாற்றினாலும் வேறு யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என பாஜக குழப்பத்தில் உள்ளதாம்

இபிஎஸ்., முதல்வர் வேட்பாளர் இடத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்பதை நோக்கி தான் எதிர்ப்பு குரல்கள் கட்சிக்குள்ளேயே எழுவதால், இதை பாஜக தலைமையும், அதிமுக தலைமையும் எப்படி கையாள போகிறது? இபிஎஸ்.,க்கு தான் இது நெருக்கடியை தருவதால், அவர் இந்த பிரச்சனையை எப்படி கையாண்டு, தேர்தலில் வெற்றி பெறப் போகிறார் என்பது தமிழக அரசியல் நிகழ்வுகளை இன்னும் சுவாரஸ்யமாக்கி உள்ளது.

ராமதாஸ், அவரதுமகன் அன்புமணி ஆகியோருக்கிடையேயான பிரச்சனை பூதகரமாக வெடித்துச் சிதறி உள்ளது.சொல்லுக் கேட்காத மகன் அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கிவிட்டார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு அனுப்பிய 16 குற்றச்சாட்டுகளுக்கு அவர் எந்தப் பதிலும் அளிக்காத காரணத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அன்புமணியின் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ராமதாஸ், "அன்புமணி உடன் நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது.

மீறினால், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். அதே சமயம், அன்புமணியுடன் இணைந்து செயல்பட்டு வரும் சிலரை மன்னித்து ஏற்றுக்க்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், அன்புமணியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய ராமதாஸ், "மூத்த தலைவர்கள் அறிவுரை கூறியும் அதை அன்புமணி கேட்கவில்லை.

அவர் தனியாகக் கட்சி தொடங்கிக் கொள்ளலாம் என்று மூன்று முறை அவரிடம் கூறியுள்ளேன்" என்றும் தெரிவித்தார்.

45 ஆண்டுகளாக உழைத்து, மிகவும் கஷ்டப்பட்டு பாமகவை உருவாக்கியதாகவும், ஆனால் அன்புமணிக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்

ஒரு காலத்தில் தமிழக அரசியலைத் தீர்மானித்த ராமதாஸ் இன்று கட்சியக் காப்பாற்றவேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளபட்டுள்ளார்.

 

ரமணி

14/9/25 

 

Friday, September 12, 2025

ஹொங்கொங்குக்கு எதிரான‌ பங்களாதேஷின் முதல் வெற்றி

அபுதாபியில் நடைபெற்ற ஆசியக்கிண்ணப் போட்டியில் ஹொங்கொங்கை எதிர்த்து விளையாடிய பங்களாதேஷ் 7 விக்கெற்களால் வெற்றி பெற்றது.

ஆசியக் கிண்ண  2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 11ஆம் திக‌தி அபுதாபியில் மூன்றாவது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் பங்களாதேஷ், ஹொங்கொங் ஆகியன   மோதின.நாணயச் சுழற்சியில் வென்ற  பங்களாதேஷ் முதலில் பந்து வீச்சைத் தெரிவு செய்தது.  முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் 20 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 143 ஓட்டங்கள் எடுத்தது. 

நிஷாகத் கான் 42, ஜீசன் அலி 30, கப்டன் யாசிம் முர்டசா 28  ஓட்டங்கள் எடுத்தார்கள்.  பங்களாதேஷ் அணியின்  டஸ்கின் அகமது, தன்ஜிம் ஹசன், ரிசாத் ஹொசைன் ஆகியோர்  தலா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

 144 ஓட்ட எண்ணிக்கையுடன் களம் இறாங்கியதுஅ பங்களாதேஷ்      துவக்க வீரர்கள் பர்வேஸ் ஹொசைன் 19, தன்சிட் ஹசன் 14  ஓட்டங்கள் எடுத்து  ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த கப்டன் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து விளையாடிய தவ்ஹீத் ஹாரிடாய் நங்கூரமாக   கை கொடுத்தார்.    அதிரடி காட்டிய லிட்டன் தாஸ் அரை சதத்தை அடித்து 59 (39)  ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.  இறுதியில் ஹரிடாய் 35* (36)  ஓட்டங்கள் எடுத்தார்.  17.4 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்த பங்களாதேஷ் 144 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.ஹொங்கொங்குக்கு எதிரான பங்களாதேஷின் முதல் ரி20 வெற்றி இது.

 2014  ஆம் ஆண்டு நடந்த ரி 20 போட்டியில்பங்களாதேஷும், ஹொங்கொங்கும்  முதன் முதலில் விளையாடின. சொந்த மண்ணில் நடந்த போட்டியில் பங்களாதேஷ் 2 விக்கெற்களால் தோல்வியடைந்து.  சமூக வலைத்தளங்கள் அப்போது பங்களாதேஷை மோசமாகக் கிண்டல் செய்தன. இரண்டாவதி ரி20 போட்டியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் வெற்றி பெற்று நிம்மதியடைந்தது.

அசை சதம் அடித்த கப்டன் லிட்டன் தாஸ்  க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. தை வென்றார்.  சபீர் ரஹ்மானுக்கு பின் (2016இல் இலங்கைக்கு எதிராக) ஆசிய ரி20  கிண்ணப் போட்டியில் அரை சதத்தை அடித்த வங்கதேச வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

  

Thursday, September 11, 2025

7 வருடம் கழித்து ஆட்டநாயகனான குல்தீப்


   துபாயில் நடந்த ஆசியக்கிண்ண கிறிக்கெற் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதித்து விளையாடிய நடப்பு சம்பியனானஇந்தியா 9 விக்கெற்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய  பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 15  போட்டிகளின்  பின்னர் இந்தியா நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 13.1 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 57 ஓட்டங்கள் எடுத்தது. 58 ஓட்ட இலக்குடன்  களம்  இறங்கிய  இந்தியா 4.3 ஓவர்கலில் ஒரு விகெற்றை இழந்து 60 ஓட்டங்கள் எடுத்தது.

 ஐக்கியாரபு எமிரேட்ஸின்  அலிசான் சராஃபு 22 ஓட்டங்கலும், கப்டன் முகமது வாசிம் 19  ஓட்டங்கலும் எடுத்தனர்.  எடுத்தனர். இந்திய அணிக்கு   குல்தீப் யாதவ் 4, சிவம் துபே 3 விக்கெட்டுகளும்,பும்ப்ரா, அலெக்ஸ் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் எடுத்தனர்.

57  என்ற இலக்குடன் களம் இறங்கினார்கள் இந்திய வீரர்கள்.   அபிஷேக் சர்மா 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  சுப்மன் கில் 20*, கப்டன் சூரியகுமார் 7*  ஓட்டங்கள்     4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.  இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரை விளையாட வைக்குமாறு அனைத்தும் முன்னாள் வீரர்களும் அறிவுறுத்தினார்கள். ஆனால் கடைசி வரை பெஞ்சில் அமர வைத்த இந்திய அணிக்காக இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைத்ததும் அபாரமாக பந்து வீசி  2.1 ஓவர்களில் 7 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெற்களை வீழ்த்தினார்.  7 வருடங்கள் கழித்து ஆட்டநாயகன் விருதை வென்றார் குல்தீப்.

 இந்திய அணியில் அஸ்வின்,  ஜடேஜா  ஆகியோர் இருந்ததால் தொடர்ச்சியாக வாய்ப்புகளை பெறாத அவர் கடைசியாக 2018ஆம் ஆண்டு ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இந்நிலையில் இப்போட்டியில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் உட்பட 4 விக்கெட் எடுக்க சரியான லென்த்தில் பவுலிங் செய்ததே காரணம் என்று குல்தீப் தெரிவித்துள்ளார்.

  

Tuesday, September 9, 2025

ஹொங்கொங்கை வீழ்த்தி ஆப்கான் சாதனை வெற்றி


 அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆசியக்கிண்ண கிறிக்கெற் போட்டியில்  ஹொங்கொங்கை எதிர்த்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 94 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்ரி பெற்ற ஆப்கானிஸ்தான்  முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்து  188  ஓட்டங்கல் எடுத்தது.  189  என்ற  வெற்றி இலக்குடன் களம்  இறங்கிய ஹொங்கொங்  20  ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 94 ஓட்டங்கள் எடுத்தது.

ஆப்கானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான செதிகுல்லா 52 பந்துகளில் அட்டமிழக்காமல் 73  ஓட்டங்கள் எடுத்தார். முகமது நபி 33  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  ஐந்தாவது விக்கெற்றில்  செதிகுல்லாவுடன்  இணைந்த ஒமர்சாய் 21 பந்துகளில் அதிரடியாக 53 ஓட்டங்கள் எடுத்தார்.  ரஹமதுல்லா 8  ஓட்டங்களுடன் வெளியேறினார். எனைய நால்வரும் அதற்குக் குறைவான ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். ஹொங்கொங் வீரர்களான ஆயுஸ் சுக்லா, கின்ஷிட் ஷா ஆகிய இருவரும் தலா   2  விக்கெற்களை கைப்பற்றினர்.

ஆப்கான் வீர பாபர் ஹயட்  அதிக பட்சமாக 39 ஓட்டங்கள் எடுத்தார். ஹொங்கொங் அணித் தலைவர் யாசிம் முர்தாசா 16  ஒட்டங்கள் எடுத்தார். ஏனையவர்கள்  ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். ஆப்கான் வீரர்களான் பரூக்கி, குல்பதின் நைப் தலா  ஆகியோர் தலா 2 விக்கெற்களை வீழ்த்தினர்.

2016 ஆம் ஆண்டு மிர்பூரில் நடைபெற்ற ஆசியக்கிண்ணப் போட்டியில் ஹொங்கொங் அணியை 66 ஒட்ட வித்தியாசத்தில்  வென்றதே ஆப்கானிஸ்தானின் முந்தைய சாதனையாகும்.

ரி20 யில் 20 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த வீரராக ஆப்கானின் அஸ்மத்துல்லா உமர் சாய் சாதனை படைத்தார். ஆப்கானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் செடிகுல்லா அடல் கொடுத்த மூன்று கச்களை ஹொங்கொங்  வீரர்கள் தவற விட்டனர்.  அதே வேளை இரண்டு  ரன் அவுட்களைத்தவறவிட்டனர். 

 ஆட்ட நாயகன்  விருதை அஹமதுல்லா உமர்சாய்  பெற்றுக்கொண்டார்.

  

மக்கள் அலையால் குலுங்கியது மதுரை சாதித்துக் காட்டினார் விஜய்


 

 மக்கள் அலையால் குலுங்கியது மதுரை

 சாதித்துக் காட்டினார் விஜய்

தமிழ்க வெற்றிக் கழகத்தின் இரண்டாவது  மாநில மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில்  கடந்த வியாழக்கிழமை  இலட்சக் கணக்கான தொண்டர்களின் 506 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான திடலில் நடைபெற்றது.  இலட்சக்கணக்கான தொண்டர்கள் கூடி இருந்த இந்த கூட்டத்தில் விஜய் வழக்கம் போல் தீம் சாங் வெளியிட்டு, ரேம்ப் வாக் சென்று தனது உரையை துவக்கினார். விஜய் பேசுகையில், தங்களின் கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக தான் என்றும் மீண்டும் வலியுறுத்தி பேசினார். பாஜக மற்றும் திமுக.,வை மீண்டும் கடுமையாக தாக்கி பேசினார் விஜய். பாஜக., உடன் கண்டிப்பாக கூட்டணி கிடையாது என்றும் விஜய் அறிவித்து விட்டார்.

 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு, ரசிகர்களின் பெரும் கூட்டம் காரணமாக முன்கூட்டியே 3 மணிக்கே தொடங்கியது.

  நடிகர் விஜயின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர்  ஷோபா ஆகியோருக்கும் மேடையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. விஜயின் மனைவியும் மகனும் மாநாட்டில் பங்கு பற்றவில்லை.

243 தொகுதிகளிலும் தான்  போட்டியிடுவதாக நினைத்து வாக்களிக்குமாரு வேண்டுகோள் விடுத்தார்.  இதன்  மூலம்  கூட்டணி இல்லை என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளார் விஜய்.

25  நிமிடங்கள் விஜய் பேசினார். வழக்கம் போல் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.பாஜக்வையும்  அவர் விட்டு வைக்கவில்லை. எட்ப்பாடி, ரஜினி ஆகியோரையும் சாதுவாக சாடினார்.

பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கார், விஜயகாந்த்  ஆகியோரையும்  துணைக்கு அழைத்திருந்தார். பெரியாரின் கொள்கையைக் கடைப்பிடிக்கும் விஜய்யின் தொண்டர்கள் மேடையில் யாகம் செய்தார்கள். அவர்கள் செய்த யாகம் வினோதமானது.  மழை வரக்கூடாது என விஜயின் ரசிகர்கள் யாகம் செய்தார்கள். மழை வேண்டி மக்களும், விவசாயிகளும் யாகம் செய்வது வழமையான சங்கதி.  அஜித்தின் கடவுட்  விஜயின் மாநாட்டுத் திடலில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.

மதுரையில்  நின்றுகொண்டு  விஜயகாந்தை   புகழ்ந்து பேசினார்., "மதுரை என்றால் நினைவுக்கு வருவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். நமது வைகை ஆறுதான். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மதுரை மீனாட்சி அம்மன்.இந்த மண்ணோட உண்மையான குணம் உணர்வுப்பூர்வமான மண். இந்த மண்ணில் வாழும் மக்களும் உணர்வுப்பூர்வமான ஆட்கள் தான்"

"இந்த மண்ணில் கால் வைத்த பிறகு ஒருவரை பற்றி தான் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. சினிமானாலும், அரசியல் என்றாலும் சரி நமக்கு பிடித்தது எம்ஜிஆர்.அவரோடு பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அவரை போன்ற குணம் கொண்ட விஜயகாந்த்துடன் பழகும் நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவர் மதுரை மண்ணை சேர்ந்தவர் தான். அவரை மறக்க முடியுமா?." என்றார்.

  திமுகவை தாக்கிப் பேசிய விஜயின் பேச்சுகு அவரது தொண்டர்கள் ஆரவாரம் செய்தார்கள். ஒரு சில இடங்கலில் அவரது பேச்சு எல்லை மீறியது. இவ்ஜய் பேசிய சில கீழ்த்தரமான சொற்களால்   பெண்கள்  முகம் சுழித்தார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள், சித்தப்பா  எனப் பேசியதை கட்சிசார்பற்றவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர். துப்புரவுப் பணியாளர்களின்  போராட்டம்  ப‌ற்றி விஜய் எதுவும் பேசவில்லை.அம்புலன்ஸ் சாரதியை எடப்பாடி மிரட்டியதை தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும்  கண்டித்தார்கள். விஜய் அதுபற்றி வாயைத் திறக்கவில்லை.

திமுகவையும் சீமானையும் கடுமையாகச் சாடிய விஜய் , அவர்களின் எதிர்ப்பு வாக்கைக் குறி வைக்கிறார்.

அதீத வெயில் காரணமாக   மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் உடநலக்குறைவு ஏற்பட்டிருந்தது. பலருக்கும் மாநாட்டு திடலிலேயே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிலருக்கு முதலுதவி மட்டும் போதுமானதாக இல்லை. இதையடுத்து சுமார் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்தளவுக்கு   மதுரையில் வெப்பம் மிக மோசமாகவே இருந்தது. ஒருவர் மாரடைப்பால்  இறந்துவிட்டார்.

மாநாடு ஆரம்பமாவதற்கு  முன்னர்  மின்சாரம் தாக்கி  இளைஞர்  ஒருவர் மரணமானார். 100 அடி கொடிக்கம்பம் நிறுத்தப்பட்ட போது கிறேன் அறுந்து  விழுந்தது.  உயிர்ச் சேதம் எதுவும்  ஏற்படவில்லை. அங்கு நின்ற கார் ஒன்று பலத்த சேதமடைந்தது.

பாரதீய ஜனதாவையும், அதிமுகவையும்  ஓரம் கட்டி, திமுக எதிர் தவெக என நிலைநாட்ட விஜய் முயற்சிக்கிறார்.

கடந்த காலங்களில் திமுக எதிர்ப்பு வாக்குகளை, அதிமுகவும் , சீமானும் பங்கு போட்டன. தனைத் தன்பக்கம் இழுக்க விஜய்  திட்டம் போடுகிறார். 

  திமுக எதிர்ப்பு வாக்குகளையும்,   சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து விஜய்யின் அரசியல்  நடவடிக்கை  இருப்பதாக அரசியல்   விமர்சகர்கள் கணிப்புகளை கூறுகிறார்கள்.

வழக்கமாக, திமுகவின் எதிர்ப்பு வாக்குகளின் ஒரு பகுதி பாஜகவுக்கம், பாஜகவின் எதிர்ப்பு வாக்குகளின் ஒரு பகுதி திமுகவுக்கும் செல்லும் நிலையில், இந்த இரு எதிர்ப்பு வாக்குகளில் விஜய் எவ்வளவு பெறப்போகிறார்? என்பதும் மிகப்பெரிய ஆர்வமாக உள்ளது.

அதேசமயம், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அவர்களது தரப்பில் அதிகாரபூர்வமாக கூறிவிட்டதால், இனி அதிமுகவும் தவெக கூட்டணிக்கு வர ஆர்வம் காட்டாது. அந்தவகையில், நாம் தமிழர், பாமக, தேமுதிக மற்றும் , கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு வலையை விரிக்க துவங்கியிருக்கிறது தவெக.

கடந்த முறை விஜய் நடத்தியிருந்த முதலாம் மாநாட்டில் திமுகவை மட்டுமே பிரதானமாக குறி வைத்து விஜய் பேசியிருந்தார்.

இந்த முறை  எடப்பாடி,ரஜினி, சீமான் ஆகியோருடன்  மோடியையும்  தாக்கிப் பேசினார்.

இலட்சக் கணக்காகத் திரண்ட மக்கள் வெள்ளம் வாக்காக மாறுமா என்பதை அறிய 2026 வரை காத்திருக்க  வேண்டும்.