Sunday, December 14, 2025

அன்கேப்ட் வீரராகும் அனுபவசாலிகள்


 2026 ஐபிஎல் மினி ஏல வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான விஜய் சங்கர், கரண் சர்மா ஆகியோர், "அன்கேப்ட்" (Uncapped - உள்ளூர் வீரர்கள்) பிரிவில் ஏலத்தில் களமிறங்கவுள்ளனர். சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருந்தாலும், பிசிசிஐ-யின் விதிகளின்படி இவர்கள் உள்ளூர் வீரர்களாகக் கருதப்படுவது அணிகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி டோனியைத் தக்கவைப்பதற்காக, பிசிசிஐ ஒரு பழைய விதியைத் தூசி தட்டி எடுத்தது. அதன்படி, "ஒரு இந்திய வீரர் கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20) விளையாடாமல் இருந்தால், அவர் அன்கேப்ட் (Uncapped) வீரராகக் கருதப்படுவார்."

இந்த விதியைப் பயன்படுத்தித் தோனி குறைந்த விலையில் தக்கவைக்கப்பட்டார். இப்போது அதே விதியைப் பயன்படுத்தி விஜய் சங்கர், கரண் சர்மா ஆகியோர் ஏலத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர், 2019 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்காகக் கடைசியாக விளையாடினார். அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 5 ஆண்டுகள் கடந்துவிட்டதால், அவர் இப்போது 'அன்கேப்ட்' வீரராகிவிட்டார்.

சர்வதேச அனுபவம் கொண்ட ஒரு வீரர், வெறும் ரூ.30 லட்சம் அடிப்படை விலையில் ஏலத்திற்கு வருகிறார் என்பது ஐபிஎல் அணிகளுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாகும். அவரை மாற்று வீரராக சில அணிகள் வாங்கக் கூடும்.

38 வயதான அனுபவச் சுழற்பந்து வீச்சாளரான கரண் சர்மா, கடைசியாக 2014-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இவரும் இயல்பாகவே அன்கேப்ட் பிரிவில் வருகிறார். மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி போன்ற அணிகளுக்காக ஆடிய இவரின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

No comments: