Wednesday, April 15, 2026

தேசியக் கட்சிகளை ஓரம் கட்டும் மாநிலக் கட்சிகள் ஸ்டாலினைக் கண்டு கொள்ளாத ராகுல் காந்தி


 

 தேசியக் கட்சிகளை ஓரம் கட்டும் மாநிலக் கட்சிகள்

ஸ்டாலினைக் கண்டு கொள்ளாத ராகுல் காந்தி 

 

தமிழகம் முழுவதும் இருந்து 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பிரசீலனைக்குப் பிறகு  4,618 மனுக்கள் ஏற்கப்பட்டு, 2,460 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 521 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டிருந்தன. இறுதியில் 4,630 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலம் முழுதும், திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

வாக்காளர்கள் 2,80,30,658 ஆண்கள், 2,93,04,905 பெண்கள், 7,728 மூன்றாம் பாலினத்தினர் , மொத்தம் 5,73,43,291 .

சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகள்

5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை அல்லது மிகவும் பதற்றமானவை.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை இராணுவப்படை .

வரலாறு காணாதவகையில் புதுச்சேரியில் 90% , அசாமில் 85%, கேரளாவில் 78%  வாக்குப்பதிவு பதிவானது. ஆட்சி மாறுமா? அதிர்ச்சியில்  அரசியல்வாதிகள்.

  பெரம்பூர் தொகுதியில் விஜய்  உட்பட மொத்தம் 47 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் விஜய் பெயரில் மட்டுமே 4 பேர் போட்டியிடுகின்றனர்.  அம்பாசமுத்திரத்தி 5 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். சுயேச்சைகள் எவரும் இல்லை.திமுக, அதிமுக, நாதக, தவெக ,பகுஜன் சமாஜ் கட்சி   வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, நாதக ,தமிழக வெற்றிக் கழகம் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக  முதன் முறையாக  தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து விட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர அதிமுக முனைப்பு காட்டுகிறது. புதியதாக கட்சி தொடங்கி தேர்தலில் களம் கண்டுள்ள விஜய், எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.சீமானின் நாதக தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. பிரதான கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. விஜய் ஆரம்பித்த கட்சியால் வாக்குகளைக் கணிசமாக  இழக்கப்போகும் கட்சி எது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

விஜய் கட்சியை ஆரம்பித்தபோது  அவருக்கு ஆதரவு தெரிவித்த பலர்  இப்போது பின் வாங்கிவிட்டார்கள். விஜயின் அரசியல் கொள்கை என்ன என்பது எவசுக்கும் தெளிவாகத் தெரியவில்லை. திமுகவையும், ஸ்டாலினையும் திட்டுவதிலேயே அவர் காலத்தைக் கடத்துகிறார். அவரது ஆதரவாளராக  இருக்கும் ரசிகர்கள்  இன்னமும் பக்குவப்படவில்லை.  இந்த நிலையில் விஜய் வெற்றியடைந்தால் தமிழகம் என்ன்ன்னவாகும் என விமர்சகர்கள்  கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வரும் 23ம் திக‌தி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மார்ச் 30ம் திக‌தி தொடங்கி, ஏப்ரல் 6ம் திக‌தியுடன்முடிவுற்றது. 234 தொகுதிகளிலும் சேர்த்து 7 ஆயிரத்து 599 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  அவற்றின் மீதான பரிசீலனை ஏப்ரல் 7ம் திக‌தி நடைபெற்றது. தனிப்பட்ட மற்றும் குடும்ப சொத்து விவரங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பரிசீலித்ததன் அடிப்படையில், 4 ஆயிரத்து 621 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 2 ஆயிரத்து 460 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.    518 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 616 வேட்புமனுக்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில், 173 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 24 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக பெரம்பூர் சட்டசபை தொகுதியில் 47 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக சைதாப்பேட்டை தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் களமிறங்கும் கொளத்தூர் தொகுதியில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக நடைபெறவில்லை. திமுகவிடம் இருந்து அதிக தொகுதிகளை வாங்க வேண்டும் என காங்கிரஸும், அதிமுகவிடம் இருந்து அதிக தொகுதிகளை பெற பாரதீய ஜனதாவும்  போராடின. விஜயுடன் பேச்சு வார்த்தை நடத்தியபடியே திமுகவுடன்    தொகுதிப் பங்கீடுபற்றிய ஆலோசனையை நடத்தியது காங்கிரஸ். அதிக தொகுதி, ஆட்சியில் பங்கு என காங்கிரஸ்விடாப்பிடியாக நின்றது. சோனியாவுடன், ஸ்டாலின்  பேசிய பின்னர்  ராகுல் காந்தி இறங்கி வந்தார்.காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக திமுகத் தொண்டர்கள்  இறங்கி  வேலை செய்வது சந்தேகமே.

புதுவையில்  ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒரே நாளில் தேர்தல் பிரசாரம் செய்தார்கள். ஆனால், இருவரும் ஒரே மேடையில் ஏறவில்லை. ஒரே மேடையில் ஏறிப் பிரசாரம் செய்ய ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை  ராகுல் காந்தி நிராகரித்தார். இதலால் திமுக தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தமிழகத் தேர்தல் பிரசாரத்தில் ஸ்டலினும், ராகுல் காந்தியும்  ஒரே மேடையில் ஏறவில்லையானால் காங்கிரஸ்  வேட்பாளர்கள் தேறுவது கடினம்.

அதிமுகவின் ஆதரவுடன்  கடந்த  தேர்தலில் 4 தொகுதிகளில்  பாரதீய ஜனதா வெற்ரி பெற்றது. இம்முறை அதிக தொகுதிகளைக் கேட்டு அடம் பிடித்தது. எடப்பாடி  27 தொகுதிகளுடன் அடக்கி விட்டார். ஆனால், சின்னக் கட்சிகள் தாமரை சின்னத்தில் களம் இறங்கி உள்ளன.  தமிழகத்தில்தாமரை மலர்ந்தால் இரட்டை இலைக்கு பெரும் ஆபத்து.  ஆகையால் தாமரைக்கு எதிராக  இரட்டை இலை  உள்ளடி வேலை செய்யும் ஆபத்து உள்ளது.

  தமிழகத்தில் இம்முறை வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிர் பார்க்கபப்டுகிறது. விஜயின்  பின்னால் இலைஞர் பட்டாளம் இருக்கிறது. விஜய்க்கு வாக்களிக்கப்போவதாக இளைஞர்களில் சிலர் வெளிபடையாக அறிவிக்கின்றனர்.

விஜய்யின் தவெக 15 சதவீத வாக்குகளை பெறும். ஒரு புதிய அரசியல் கட்சி தனது முதல் தேர்தலிலேயே 15 சதவீத வாக்குகளைப் பெறுவது என்பது மிகச்சிறந்த சாதனையாகக் கருதப்படும். ஆனால், இந்த வாக்குகள் அவருக்குத் தொகுதிகளில் வெற்றியைத் தேடித் தருமா என்பது சந்தேகமே.  தேர்தல் பரப்புரையில் விஜய் பின் தங்கி உள்ளார்.  நகரங்களில் பிரசாரம் செய்யும் விஜய் கிராமங்களுக்குச் செல்லவில்லை. விஜயின் கட் ஒவுட்களுடன் தவெக வேட்பாளர்கள்  பிரசாரம் செய்கின்றனர். இதனால் பெரிய பின்னடிவு ஏற்பட்டுள்ளது.

  புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல்  கடந்த 9 ஆம் திகதி  வியாழக்கிழமை  அமைதியாக நடந்து முடிந்தது.. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 4 பிராந்தியங்களிலும் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் 5,000 அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இத்தேர்தலில் 89.87 சதவீதம் சாதனை வாக்குப்பதிவு நடந்துள்ளது‌. தொடர்ந்து பெறப்படும் தபால் வாக்குகள் மூலம் வாக்கு சதவீதம் 1.36 சதவீதம் கூடும் என தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர் கூறியுள்ளார். புதுச்சேரியில் இதுவரை நடந்த தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். சுமார் 30 ஆண்டுகளாக புதுச் சேரிக்கும் ,தமிழகத்துக்கும் ஒரே நாலில் தேர்தல் நடைபெற்றது. இம்முறை மோடி அரசு அதனை மாற்றி  அமைதுள்ளது.

கேரளாவின் மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக   வாக்குப்பதிவு நடைபெற்றது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.69 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 30,471 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 76,203 பொலுஸார், மத்திய படைகளை சேர்ந்த 140 அணிகள் மற்றும் தமிழக காவல் துறையை சேர்ந்த 20 அணிகளை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1.46 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினர்.

அசாமின் 126 தொகுதிகளுக்கும்  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பாஜக தலைமையிலான வடக்கு-கிழக்கு ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அசாம் சோன்மிலிட்டோ மோர்ச்சோ கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.50 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 31,486 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநில போலீஸார், மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியாற்றி 

 நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. கேரளாவில் 2.78 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணியின்போது போலி வாக்காளர்கள், இரட்டைப் பதிவு, உயிரிழந்தவர்கள் என 9.06 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த பெப்ரவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 2.69 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், கேரளாவில் தற்போது 78.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரியில் எஸ்ஐஆர் திருத்தத்தின்போது 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் 9.50 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். முதல்முறை வாக்காளர்கள் 24,919 பேர் இருந்தனர். கேரளா, புதுச்சேரியில் எஸ்ஐஆர் காரணமாகவே வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டதால், அங்கு எஸ்ஐஆர் பணி நடக்கவில்லை. பதிவேடு கணக்கெடுப்பின்போதே போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் அங்கு தற்போது வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் காங்கிரஸைக் கைகொடுத்துத் தூக்கிவிடுகிறோம் என்கிற நினைப்பில்  திமுக  இருக்க, ராகுலோ புதுச்சேரி விவகாரத்தில் ஸ்டாலினைச் சற்று தள்ளியே வைக்க விரும்புகிறாரோ என்ற கேள்வி எழுகிறது.  , புதுச்சேரி காங்கிரஸின் கோட்டை என்பதை நிரூபிக்க ராகுல் துடிப்பதாகவும், அங்கே தி.மு.க-வின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதை அவர் ரசிக்கவில்லை என்றும் டெல்லி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. 'ராகுல் காந்தி மெல்ல மெல்ல தி.மு.க-வுக்கு எதிராகத் திரும்புகிறாரா?' என அரசியல் விமர்சகர்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்த 'ஈகோ' யுத்தம் வரும் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா அல்லது வெறும் பிரசார சலசலப்போடு நின்றுவிடுமா என்பதுதான் இப்போதைய மில்லியின்  டொலர் கேள்வி. தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலை எட்டியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலின் போது காட்டிய வேகத்தை, சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்தவில்லை என்று கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. 

நாடாளுமன்றத் தேர்தல் என்றால், ராகுல் காந்தி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வலம் வருவார். திடீரென சாலையில் நடப்பது, தெருவோர ரீக்கடையில் ரீ குடிப்பது,    கார் மெக்கானிக் ஷெட்களில் உரையாடியது வரை ராகுலின் வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், தற்போதைய சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தியோ அல்லது டெல்லி காங்கிரஸின் முக்கியத் தலைவர்களோ இதுவரை தமிழகத்தின் பக்கம் தலை காட்டவில்லை. அண்டை மாநிலமான புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய ராகுல், தமிழகத்திற்குள் இன்னும் நுழையாதது திமுக தரப்பிலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளிலும் இன்னும் தேர்தல் களம் சூடுபிடிக்கவில்லை என்பதே எதார்த்த நிலவரம். வேட்பாளரை அவர்கள் அறிவித்ததே கடைசியாகத்தான். அதிலும் மேலூர் வேட்பாளரை மிக தாமதமாகவே அறிவித்தனர்.   தொகுதிப் பகுதிகளில் வாக்குச் சேகரிப்புப் பணிகளில் திமுகவினரே முன்னின்று செயல்படும் சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் பங்களிப்பு களத்தில் மிகக் குறைவாகவே தென்படுகிறது. காங்கிரஸ் திமுக இடையிலும் உறவு மிக மோசமாக உள்ளது. களத்தில் இரண்டு தரப்பிற்கும் இடையில் பெரிய நட்பு இல்லை.

ரமணி

12/4/26

தேர்தல், தமிழகம்,சென்னை,ஸ்டாலின், விஜய்,எடபாடி,ராகுல் காந்தி,தமிழன்,

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: