Saturday, March 1, 2008

தமிழக மீனவர்களை பாதுகாப்பது யார்?

இந்தியாவில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் உள்ளது கச்சதீவு. கச்சதீவில் நின்று பார்த்தால் இராமேஸ்வரத்தின் கோபுரம் தெரியும். இந்திய ஆளுகைக்கு உட்பட்டிருந்த கச்சதீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார் அன்றைய பிரதமரான இந்திரா காந்தி.
கச்சதீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்துக்கு இந்தியா யாத்திரிகர்களும் இலங்கை யாத்திரிகர்களும் சென்று வழிபடுவார்கள். புனித அந்தோனியர் ஆலய திருவிழாக் காலத்தில் பண்டமாற்று மூலம் இரு நாட்டு மக்களும் தமக்குத் தேவையான பொருட்களைப் பரிமாறிக் கொள்வார்கள். கச்சதீவை இலங்கைக்கு வழங்கிய பின்னரும் புனித அந்தோனியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இலங்கை இனப்பிரச்சினையினால்தான் புனித அந்தோனியாரின் ஆலய திருவிழாவையும் முடக்கியது.
இந்திய மீனவர்கள் தமது வலையை காய வைக்கும் தங்கும் இடமாக கச்சதீவு இருந்தது. கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தால் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்களின் உயிர் இலங்கை கடற்படையினரால் பறிக்கப்படும் என்று இந்திய அரசு அப்போது நினைத்திருக்க வில்லை.
1974 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28ஆம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
இந்திய இலங்கை கப்பல்கள் அனுமதி பெறாது எல்லைகளைக் கடப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்தது. இந்திய மீனவர்களும் யாத்திரிகர்களும் இலங்கை அரசின் அனுமதி பெறாது கச்சதீவுக்குச் செல்லலாம் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி மன்னார் வளைகுடாப் பகுதியின் கடல் எல்லையை வரையறுத்து இலங்கை அரசும் இந்திய அரசும் இன்னொரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இந்திய அரசின் சார்பில் கேவல் சிங்கும் இலங்கை அரசின் சார்பில் டபிள்யூ. டி ஜயசிங்கவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
1983 ஆம் ஆண்டு இலங்கையில் இனப்பிரச்சினை வெடிக்கும்வரை இந்த ஒப்பந்தத்துக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படவில்லை. இலங்கையின் ஆயுதப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியதும் இந்திய தமிழ் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் வேட்டையாடத் தொடங்கினர்.
தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்திய இலங்கை அதிகாரிகள் மட்டத்திலான குழு ஒன்று முடிவுகளை வகுத்திருந்தது. சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி ஐந்து கடல் மைல் தூரம் சென்று மீன் பிடிப்பவர்களைக் கைது செய்வதில்லை என்று இதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தையும் மீறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சர்வதேச கடல் சட்டவிதிகளுக்கு முரணாக கச்சதீவுப் பகுதியில் கடல் கண்ணிவெடிகளை மிதக்க விட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்திய மீனவர்களை கருத்திற் கொள்ளாது இலங்கை அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையை கண்டித்து இந்திய அரசு தமிழக மீனவர்களை எச்சரிக்கிறது.
இலங்கை அரசு மிதக்க விட்டிருக்கும் கடல் கண்ணிவெடிகளினால் இந்திய மீனவர்களுக்கு மட்டுமல்ல, சேது சமுத்திரத் திட்டத்துக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படும் கடல் கண்ணிவெடிகள் இந்திய கடல் எல்லைக்குள் செல்லும் ஆபத்து உள்ளது. சேது சமுத்திரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது இலங்கை அரசுக்கு பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.
தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்கு இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இதேவேளை தமிழக அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களை தமிழக உளவுப் பிரிவு ஒட்டுக்கேட்கிறது. அவை பதிவு செய்யப்பட்டு உயர்மட்டத் தலைவருக்கு அனுப்பப்படுகிறது என்ற தகவலினால் தமிழகத்தின் பெரும் புள்ளிகள் ஆடிப்போயுள்ளனர்.
தமிழக அரசின் திட்டங்கள் முன்கூட்டியே எதிர்க்கட்சிகளுக்கு கசிவதையும் எதிரணிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்களையும் இனம் காண்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பரவலாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தச் செய்திகளை தமிழக அரசு மறுத்துள்ளது. ஆனால், பிரபல அமைச்சர் ஒருவரின் மகன் பேரம் பேசிய ஒலிப்பதிவு அமைச்சருக்கு போட்டுக் காட்டப்பட்டுள்ளதென செய்தி வெளியாகி உள்ளது. சில சந்தேகங்களை தொலைபேசியில் பத்திரிகையாளர்கள் கேட்கும்போது நேரில் வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று அமைச்சர்கள் கூறுவதனால் இந்தச் செய்தி உண்மையோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உளவுப் பிரிவு டி.ஐ.ஜி.சிவனாண்டி அத்துமீறி பல காரியங்களைச் செய்தார். அதிகாரி என்ற தரத்தையும் தாண்டி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டராக மாறினார். அதே போன்றுதான் இப்போது உளவுப்பிரிவு ஐ.ஜீ.யாக இருக்கும் ஜாஃபர்கேட் செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீவிரவாதிகளையும் தேச விரோத சக்திகளையும் இனம் காண வேண்டிய உளவுத்துறை அமைச்சர்களையும் பத்திரிகையாளர்களையும் பொலிஸ் அதிகாரிகளையும் உளவு பார்ப்பதால் மனம் விட்டுப் பேச முடியாது பலரும் தவிக்கின்றனர்.

வர்மா

வீரகேசரி வார வெளியீடு, 03.02.2008

6 comments:

Thamizhan said...

தமிழக மீனவர்களுக்குத் துரோகம் செய்யும் அரசாகவே இந்திய அரசு நடந்து வருகிறது.
இலங்கை அரசுகள் எப்போதும் இந்தியாவுக்கு எதிராகவே செயல் பட்டுள்ளன என்பது சரித்திரம்.
ராஜிவ் காந்தியைக் கொன்றதில் உள்ள உண்மைகள் சந்திர சாமி,சுப்ப்பிரமணிய சுவாமிகள் பங்கென்ன என்பதெல்லாம் மூடி மறைக்கப் பட்டுள்ளன்.
தமிழக மீனவர்களும் ஈழத் தமிழர்களும் படும் பாடு பற்றி இந்தியா மாற்றந்தாய் மன்ப்பான்மையுடன்,ராவும்,கடற்
படையும் சூழ்ச்சிகளில் ஈடு பட்டு வருவதும் தமிழக அரசை மிரட்டுவதும்
இந்தியா மக்களாட்சியா என்பதைக் கேள்விக் குறியாக்குகிறது.
தேர்தலில் மீனவர்கள் ஓட்டு காங்கிரசிற்குக் கட்டாயம் கிடைக்காது.

வர்மா said...

தமிழனின் வருகைக்கு நன்றி. தேர்தலின்போது மீனவர்கள் தோல்வியடைவார்கள்.

வெற்றி said...

வர்மா,கட்டுரையை வலையேற்றியமைக்கு நன்றி.

தமிழகத்தைச் சார்ந்த பல கட்சிகள் நடுவண் அரசில் அங்கம் வகிக்கின்றன. மீனவர்கள் சிக்கலுக்கு ஒரு முடிவு கட்டாவிட்டால் தமது ஆதரவு விலக்கப்படும் என்று நடுவண் அரசை நிர்ப்பந்தித்து தமிழகத் தமிழர்களை [மீனவர்களை] சிங்களப் படைகளிடமிருந்து காக்கக்கூடிய கடிவாளம் இந்தத் தமிழகக் கட்சிகளிடம் இருக்கின்றது.

'மனமிருந்தால் மார்க்கம் உண்டு'
செய்வார்களா தமிழக அரசியல்வாதிகள்?

வர்மா said...

இநதிய அரசு தனது கடமையில் இருந்து தவறிவிட்டது.
வருகைக்கு நன்றி.

அருண்மொழி said...

//இநதிய அரசு தனது கடமையில் இருந்து தவறிவிட்டது. //

தேவை யில்லாமல் மத்திய அரசை குற்றம் சுமத்தாதீர்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய அரசின் கடமை இந்தியை வளர்ப்பதும், “இந்தி”யர்களை காப்பதும் தானே. அதை அவர்கள் ஒழுங்காக தானே செய்கிறார்கள்.
நடுநிலையுடன் பதிவு எழுத வேண்டும்.

வர்மா said...

ஓ கோ நீங்கள் அப்படி வாறியளா?