Saturday, March 15, 2008

சந்திக்கு வந்த குடும்பப் பிரச்சினையால் நொந்து போயுள்ள மாறன் குடும்பம்


கலைஞர் குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் இடையே கனன்று கொண்டிருந்த குடும்பப் பகை கேபிள் தொலைக்காட்சியினால் மீண்டும் எரியத் தொடங்கியுள்ளது.
மாறன் குடும்ப வருமானத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது கேபிள் தொலைக்காட்சி சேவை. அதனை சிதைக்கும் நடவடிக்கையில் ஒரு சில முக்கிய புள்ளிகள் காரியங்களைக் கச்சிதமாகச் செய்வதனால் தயாநிதி மாறன் நியாயம் கேட்டு பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளார்.
"சன்' தொலைக்காட்சிக்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட "கலைஞர்' தொலைக்காட்சி புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி சன் தொலைக்காட்சிக்கு கடும் சவால் விடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாறன் குடும்பத்தின் சொத்தõன சுமங்கலி கேபிள் விஷனுக்குப் போட்டியாக வட இந்தியாவில் இருந்து ஹாத்வே எனப்படும் இன்னொரு கேபிள் தொலைக்காட்சி சேவையை அறிமுகப்படுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர் முயற்சி செய்கிறார்.
தமிழகத்தில் உள்ள கேபிள் தொலைக்காட்சி சேவையாளர்களிடையே உள்ள போட்டியினால் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன. அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு பலமுறை முயற்சி செய்தது. தமிழக அரசின் அம் முயற்சிகள் அனைத்தும் படுதோல்வியிலேயே முடிந்தன.
கேபிள் தொலைக்காட்சி சேவையாளர்களை வழிக்குக் கொண்டு வர வேண்டுமானால் அரசாங்கம் கேபிள் சேவையை வழங்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டது. கேபிள் தொலைக்காட்சி சேவையை அரசாங்கம் ஆரம்பிக்க தயார் நிலையில் உள்ளது.
அரசாங்கத்தின் கேபிள் சேவை ஆரம்பமாவதற்கிடையில் மாறன் குடும்பத்தின் கேபிள் சேவையை சீர்குலைக்கும் நோக்குடன் அவர்களின் முகாமையாளர் கடத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸார் இது தொடர்பாக விசாரித்தபோது கேபிள் சேவை முகவர்கள் கடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சுமங்கலி கேபிள் முகவர்களை பலவந்தமாக ஹாத்வே கேபிள் சேவைக்கு மாற்றும் முயற்சி நடந்ததாக தயாநிதிமாறன் பொலிஸில் புகார் தெரிவித்துள்ளார்.
மாறன் குடும்பத்தின் மீதான இந்த நெருக்குதலின் பின்னணியில் முதல்வரின் மகன் அழகிரியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த அமைச்சரும் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இவர்கள் இருவருக்கும் ஹாத்வே கேபிள் சேவையில் பங்கு இருப்பதால்தான் ஹாத்வேயை தமிழகத்தில் நிலை நிறுத்த முயற்சிக்கிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது.
கலைஞருக்கும் முரசொலி மாறனுக்கும் இடையில் இருந்த இறுக்கமான குடும்ப உறவு முரசொலி மாறனின் மறைவுக்குப் பின்னர் சின்னõபின்னமாகி விட்டது. குடும்ப உறவு சீரழிவதற்கு முதல்வரின் மகன் அழகிரிதான் காரணம் என்றும் அழகிரியின் பின்னால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த அரசியல்வாதி ஒருவர் இருப்பதாகவும் மாறன் குடும்பம் சந்தேகப்படுகிறது.
மாறன் குடும்பத்துக்கு எதிராக ஒரு சிலர் இப்பிரச்சினைகளைத் தூண்டி விடுகிறார்கள். ஆனால், இவை எல்லாம் கலைஞருக்குத் தெரியாமல் தான் நடப்பதாக தயாநிதி மாறன் தெரிவிக்கிறார்.
தனது குடும்பத்தின் மீது தொடர்ந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் இந்த வேளையிலும் கலைஞரை முழுமையாக நம்புகிறார் தயாநிதிமாறன். குடும்ப உறவு நீடிக்க வேண்டும் என்று தயாநிதி மாறன் விரும்புகிறார். கலைஞர் குடும்பமும் மாறன் குடும்பமும் இணையக் கூடாது என்று விரும்புபவர்கள் கனகச்சிதமாக காய்களை நகர்த்தி இரு குடும்பங்களையும் வெகுதூரத்தில் வைத்துள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் முரசொலி மாறனின் பங்கு அளப்பரியது. திராவிட முன்னேற்றக் கழக ஏடான முரசொலியை பொறுப்பெடுத்து நடத்தியதால் முரசொலி என்ற பட்டப் பெயர் மாறனின் முன்னால் ஒட்டிக் கொண்டது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி ஏற்பட்ட வேளைகளில் டில்லியில் உரிய இடங்களில் வாதம் செய்து அந்த நெருக்கடிகளை களைந்தவர் முரசொலிமாறன். கலைஞரின் சிந்தனைகள் சிலவற்றுக்கு செயல்வடிவம் கொடுத்து மக்கள்மத்தியில் கலைஞரின் பெயர் விளங்கச் செய்தவர் முரசொலிமாறன்.
முரசொலி மாறன் அமைச்சராக இருந்தபோது தான் சார்ந்த அமைச்சின் மூலமாக இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தியவர் முரசொலி மாறன்.
ஜெயலலிதாவின் ஆட்சியின்போது நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது கொதித்தெழுந்து பொலிஸாருடன் மல்லுக் கட்டியவர் அவர். ஜெயலலிதாவின் உத்தரவினால் கலைஞரை நள்ளிரவில் பொலிஸார் தூக்கிச் சென்றதை உலகுக்குத் தெரியப்படுத்தியது மாறனின் சன் தொலைக்காட்சிதான்.
கலைஞருக்காகவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்த முரசொலி மாறன் தொண்டர்களுடன் நெருங்கிப் பழகவில்லை தனக்கென்றொரு கூட்டத்தை ஏற்படுத்தவில்லை. அதே போன்று தான் அவரது மகன் தயாநிதி மாறனும் நடந்து கொண்டார்.
உலக அரங்கில் தயாநிதி மாறனுக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. ஆனால், ஆதரவாளர்கள் மத்தியில் அரசியல் நாயகனாக அவர் விளங்கவில்லை. ஆகையினால் அமைச்சர் பதவியைத் துறந்தபோது கூட எதுவித சலசலப்பும் ஏற்படவில்லை.
அரசியல் எதிரிகளை அரவணைத்துச் செல்லும் கலைஞர் தனது இரத்த உரித்தை பரம எதிரியாக நினைப்பது எதற்காக என்று புரியவில்லை.
அடுத்த தேர்லின்போது கூட்டணிக் கட்சிகளில் மாறுதல் ஏற்படலாம். கலைஞருடன் இருப்பவர்கள் சிலர் வெளியேறலாம். வெளியில் இருப்பவர்கள் சிலர் உள்ளே வரலாம். புகழ்ந்தவர்கள் வசை பாடலாம். வசை பாடியவர்கள் புகழலாம். கலைஞரின் இரத்தத்தின் இரத்தமான தயாநிதி மாறனின் நிலை என்னவாகும் என்று எவருக்கும் தெரியாது?
கலைஞர் குடும்பத்தையும் மாறன் குடும்பத்தையும் மீண்டும் ஒன்று சேர்க்க பல முயற்சிகள் நடைபெற்றன. அந்த முயற்சிகள் எல்லாம் தவிடு பொடியாகிவிட்டன. இந்நிலையில் கலைஞரின் மனம் மாறும் வரை பொறுமையாக இருக்கிறது மாறன் குடும்பம்.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு; 24.02.2008

No comments: