Saturday, March 15, 2008

கூட்டணிக் கணிப்புகளால் குழம்பியுள்ள தமிழகம்


கூட்டணிக் கணிப்புகளால் குழம்பியுள்ள தமிழகம்

சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது மாநாடு, விஜயகாந்த், காங்கிரஸ் கட்சி பிரமுகர் அருண் குமார் சந்திப்பு ஆகிய இரண்டு சம்பவங்களும் தமிழக அரசியலில் கடந்த வாரம் பரபரப்பாகப் பேசப்பட்டன.
அரசியலில் அவ்வப்போது சில திருப்பங்களை ஏற்படுத்தும் இடமாக மதுரை திகழ்கின்றது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த மூப்பனார் தாய்க் கட்சியான காங்கிரஸுடன் மீண்டும் இணைவதற்கு மதுரை மாநகரையே தேர்ந்தெடுத்தார்.
தேசிய முன்னேற்ற திராவிடர் கழகத்தை மதுரையிலேதான் விஜயகாந்த் ஆரம்பித்தார். மதுரையில் யார் எந்தக் கூட்டத்தைக் கூட்டினாலும் அதற்கு பதிலடி தரும் அழகிரியும் மதுரையில்தான் வாசம் செய்கிறார்.
மிகப் பிரமாண்டமான அரங்கில் தனது கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டை சரத்குமார் நடத்தி முடித்திருக்கிறார். சுமார் ஐந்து இலட்சம் பேர் கூடுவார்கள் என்று சரத்குமார் எதிர்பார்த்தார். அவ்வளவு மக்கள் அங்கு சேரவில்லை. ஆனால் சேர்ந்த மக்கள் கூட்டம் போதும் என்று சரத்குமார் திருப்திப்பட்டுக் கொண்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சரத்குமார் மாறியபோது அவரது அரசியல் பாதையில் இருந்து விலகி நின்ற ராதிகா குத்து விளக்கேற்றி தனது கணவரின் அரசியல் மாநாட்டை தொடக்கி வைத்தார்.
விஜயகாந்தின் பின்னால் அவரது மனைவி பிரேமலதா அரசியல் அரங்கில் காட்சியளிப்பது போன்று சரத்குமாரின் பின்னால் ராதிகாவும் அரசியலில் அடி எடுத்து வைத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக அரசியல் மேடைகளில் முழங்கிய ராதிகாவுக்கு அரசியல் புதிதல்ல. எம்.ஜி. ஆருக்கு இணையாக தனது கணவர் சரத்குமாரைப் புகழ்ந்து தள்ளியது அரசியலுக்கு புதியதாக உள்ளது.
எம்.ஜி. ஆரைச் சுட்ட எம்.ஆர். ராதாவை எம்.ஜி. ஆரின் ரசிகர்கள் இன்னமும் மறக்கவில்லை. இந்த நிலையில் எம்.ஆர். ராதாவின் மகளான ராதிகா, தனது கணவர் சரத்குமார் எம்.ஜி. ஆரின் வாரிசு என்று பேசியதை எம்.ஜி. ஆரின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
நாடார் சமூகத்தின் அரசியல் கட்சி என்ற முத்திரையில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் சரத்குமார் உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றில் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். அக்கட்சிகளின் வெற்றியை தீர்மானிப்பதில் சில இடங்களில் அந்தச் சமூக மக்கள் பெரும் பங்காற்றுகின்றனர். அக்கட்சிகளில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் சரத்குமாரை நம்பி இப்போதைக்கு வெளியேறத் தயாராக இல்லை. ஆகையினால் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கட்சியில் புதிய பொறுப்புக்களைக் கொடுத்து அவர்களையும் தனது கட்சியில் இணைக்க வேண்டிய நிலையில் உள்ளார் சரத்குமார்.
காங்கிரஸ் கட்சியுடன் விஜயகாந்த் இணைவாரா என்ற கேள்விக்கு பதில் தெரியாது திகைத்த சிலர் தற்போது அக்கேள்விக்குரிய பதில் கிடைத்து விட்டது என்று குதூகலிக்கத் தொடங்கி விட்டனர்.
காங்கிரஸ் கட்சிக்காரரான அருண்குமாரும் விஜயகாந்தும் கடந்த வாரம் ஒரே விமானத்தில் மதுரைக்குச் சென்றது தமிழக அரசியலை பரபரப்புக்குள்ளாக்கியது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று விரும்பும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அருண்குமார் விடிவெள்ளியாகத் தெரிகிறார். விஜயகாந்துடன் என்ன பேசினீர்கள் எனக் கேட்டபோது அரசியல் பற்றி பேசினோம் என்று அருண்குமார் பொடி வைத்துக் கூறியதால் ஒரு சிலர் மகிழ்ந்து போயுள்ளனர்.
கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி வந்த விஜயகாந்த் தேசியக் கட்சியுடன் கூட்டணி சேரலாமா என்று தனது ஆதரவாளர்களிடம் கேட்டுள்ளார். அவர்களும் வழக்கம் போல் வேண்டாம் என்று கூறி விட்டனர்.
கூட்டணி எல்லாம் கிடையாது தனித்து நின்றே தேர்தலைச் சந்திப்பேன் என்று வீராப்புப் பேசும் விஜயகாந்த் தேசியக் கட்சியுடன் கூட்டணி சேர்வதையே விரும்புகிறார்.
தமிழக காங்கிரஸில் உள்ள ஒரு சில தலைவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி சேரவே விரும்புகின்றனர். டில்லித் தலைவர்கள் தமிழக முதல்வர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்தை டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் நிறைவேற்றிய சந்தர்ப்பம் மிகவும் குறைவு. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட்டு விஜயகாந்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டுச் சேர்ந்தால் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழக காங்கிரஸ் வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸுக்கு உயிர் கொடுக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நிதி அமைச்சர் சிதம்பரம் எந்தப் பக்கம் சேர்வார் என்பது சிதம்பர ரகசியம்.
காங்கிரஸுடன் தான் கூட்டணி என்று முழங்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ராமதாஸின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? 2011 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தமிழக ஆட்சியைப் பிடிக்கும் என்று முழங்குபவர் என்ன செய்வார்? சபதத்தை மறப்பதும் எதிரியுடன் கை கோர்ப்பதும் சகஜம் என்று விஜயகாந்துடன் கை கோர்ப்பாரா?
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறுவதற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கலாம். முதலாவது சேது சமுத்திரத் திட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் விடாப் பிடியாக நிற்பது. இரண்டாவது புலிகளுக்கு ஆதரவான கட்சிகளை திராவிட முன்னேற்றக் கழகம் அனுசரித்து போவது.
சேது சமுத்திரத் திட்டத்தில் காங்கிரஸின் கருத்துடன் விஜயகாந்த் இணங்கிப் போகலாம். தமிழீழ விடுதலைப் புலிகளை மிகத் தீவிரமாக ஆதரித்த விஜயகாந்த் அண்மைக் காலமாக அமைதி காப்பது கூட்டணிக்கான அடித்தளமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு கூட்டணி பற்றிய ஆரூடங்கள் பல வெளிவந்தாலும் பலமான அரசாங்கம் ஒன்றை தன் மகனின் கையில் கொடுக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து தமிழக முதல்வர் காத்திருக்கிறார்.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு; 17.02.2008

No comments: