Friday, March 28, 2008

ஜோதியின் ராஜினாமாவால் திக்குமுக்காடும் அ.தி.மு.க.


மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தின் சார்பில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே பூகம்பம் வெடித்து கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்பு எல்லாம் பொய்யாகிவிட்டது. அதேவேளையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினுள் பூகம்பம் வெடித்துள்ளது.
அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரே ஒரு வேட்பாளர்தான் வெற்றி பெற முடியும் என்பது வெளிப்படை. உண்மை நிலை இவ்வாறிருக்க அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஒரு வேட்பாளரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஒரு வேட்பாளரும் போட்டியிடுவார்கள் என்று ஜெயலலிதா அறிவித்தார்.
கூட்டணிக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்துடன் கலந்து பேசித்தான் ஜெயலலிதா இந்த முடிவை அறிவித்தார் என்றே பலரும் நினைத்தார்கள். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயற்குழு நிராகரித்துவிட்டது.ஜெயலலிதாவின் வேண்டுகோளை மறுக்க முடியாத நிலையில் இரண்டாவது வேட்பாளரை களத்தில் நிறுத்த வைகோ ஒப்புக்கொண்டிருக்கலாம். கட்சியின் செயற்குழுவின் முடிவு என்பது வைகோவின் தனிப்பட்ட முடிவு அல்ல என்பதை ஜெயலலிதாவுக்கு உணர்த்துவதற்காக செயற்குழு கூடி இரண்டாவது வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் முடிவு செய்துள்ளது.
இரண்டாவது வேட்பாளராகப் போட்டியிடுவதில்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் முடிவைப் பற்றி ஜெயலலிதா எதுவும் கூறவில்லை. ஜெயலலிதாவின் முடிவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மறுப்புத் தெரிவித்த அதேவேளை ஜெயலலிதாவை பல சந்தர்ப்பங்களில் காப்பாற்றிய வழக்கறிஞர் ஜோதி தன்னைப் வேட்பாளராக அறிவிக்காததால் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போர் கொடி தூக்கி உள்ளார்.
1996 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகம் தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ஜெயலலிதா, சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் மீது அடுக்கடுக்காக வழக்குகள் தொடுக்கப்பட்டன. டான்ஸி நில பேர வழக்கு, பிளஸன் ஸ்டே ஹோட்டல், வருமானத்துக்கு மீறிய சொத்து குவித்தது, லண்டன் ஹோட்டல், ஸ்பிக் நிலக்கரி இறக்குமதி என்று ஜெயலலிதாவையும் சசிகலாவையும் குற்றவாளியாக்கி பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அமைச்சர்கள் மீதும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜெயலலிதாவுக்காக அ.தி.மு.க வழக்கறிஞர்கள் பலர் ஆஜரானார்கள். அவர்களை எல்லாம் ஒழுங்குப்படுத்தி மேற்பார்வையாளராக வாதாடி ஜெயலலிதாவை நிரபராதி என்று நிரூபித்தார் வழக்கறிஞர் ஜோதி. ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளை விசõரிப்பதற்காக அமைக்கப்பட்ட தனி நீதிமன்றங்களில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டாலும் உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நிரபராதி என்று நிரூபித்தவர் ஜோதி.
2001 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலின் போது ஜெயலலிதா போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. டான்சி நில பேர வழக்கில் இருந்து ஜெயலலிதா தப்ப முடியாது என்று ஒட்டு மொத்த தமிழகமும் கணித்திருந்த வேளையில் அந்த வழக்கில் ஜெயலலிதா நிரபராதி என்று தனது வாதத்திறமையால் நிரூபித்தவர் வழக்கறிஞர் ஜோதி. ஜெயலலிதாவுக்கு எதிரான 13 வழக்குகளில் இருந்து அவர் நிரபராதி என நிரூபித்தார் ஜோதி.
அந்த நன்றிக் கடனுக்காகவே ஜோதியை மாநிலங்களவை உறுப்பினராக்கினார் ஜெயலலிதா. இந்த முறையும் தனக்கு ஜெயலலிதா சந்தர்ப்பம் தருவார் என்று ஜோதி எதிர்பார்த்திருந்தார். ஆனால், பாலகங்காவை ஜெயலலிதா அறிவித்ததால் ஜோதி கலங்கிவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். பதவியை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் ஜோதிக்கு கிடையாது. தமிழக அரசாங்கத்திலிருந்து தன்னை பாதுகாக்கும் ஒரு ஆயுதமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கருதினார் ஜோதி.
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளில் அவரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிக்காமல் தடுத்தாட் கொள்ளும் ஜோதியை ஜெயலலிதாவிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக்கழகத்தின் கனவை ஜெயலலிதா நிறைவேற்றி விட்டார்.
ஜோதிக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி அவரைக் கைது செய்ய தமிழக அரசு முயற்சி செய்தது. அவருக்கு எதிரான குற்றங்களைக் கண்டு பிடிக்க தமிழக அரசால் முடியவில்லை.
அண்ணாதிராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்களுக்கு எதிரான 113 வழக்குகளில் இருந்து ஜோதி தன்னை விடுவித்துக்கொண்டார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரில் நடக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுறும் நிலையை அடைந்துள்ளது. அந்த வழக்கில் தலைமை வழக்கறிஞராக வாதாடப் போவது யார் என்ற கேள்விக்கு உரிய பதிலை ஜெயலலிதாவிடமிருந்து தமிழகம் எதிர்பார்க்கிறது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு;23.03.2008

No comments: