Friday, March 28, 2008

போட்டி போடும் அ.தி.மு.க.


மாநிலங்களவைத் தேர்தலுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டு உறுப்பினர்களை நிறுத்தியதனால் தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.
மாநிலங்களவைக்கு தமிழ் நாட்டில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் திகதியுடன் முடிவடைகிறது. புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணி ஐந்து உறுப்பினர்களையும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணி ஒரு உறுப்பினரையும் தெரிவு செய்யும் பலத்தைப் பெற்றுள்ளன.
தனது தகுதிக்கு ஏற்ப ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக திராவிட முன்னேற்றக்கழகம் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து முடிவு செய்துள்ளது.
ஒரே ஒரு உறுப்பினரை மட்டும் தெரிவு செய்யும் பலத்தை உடைய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டு உறுப்பினர்களைத் தேர்தலில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்கு மூலமே மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படுவர். 34 உறுப்பினர்களின் வாக்கு கள் மூலம் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு 60 உறுப்பினர்களும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு ஆறு உறுப்பினர்களும் உள்ளனர். ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதில் எதுவித தடையும் இல்லை.
இரண்டாவது உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டுமானால் மேலும் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணிக்கு உதவி செய்யப்போகும் இரண்டு உறுப்பினர்கள் யார் என்றே கேள்வி எழுந்தது.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பாலகங்கா போட்டியிடுகிறார். சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் பாலகங்கா.
அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின் பங்காளிக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஒரு உறுப்பினர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அறிவித்தார்.
மாநிலங்களவைத் தேர்தலில் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தாது ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் நிறுத்தி அதனை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு விட்டுக்கொடுத்திருந்தால் ஜெயலலிதாவின்மதிப்பு உயர்ந்திருக்கும். போட்டிபோட்டு வெற்றிபெற வேண்டிய இக்கட்டான நிலைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தை ஜெயலலிதா தள்ளி னார்.
இதற்கு எதிர் மாறாக திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகிய இரண்டு கட்சிகளையும் சேராத இரண்டு உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் உள்ளனர். ஒருவர் விஜயகாந்த், இன்னொருவர் சுயேச்சை உறுப்பினர். இவர்கள் இருவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்களுக்கு வாக்களித்தால் அவர்கள் வெற்றி பெறுவர்.

வைகோவை மாநிலங்களவை உறுப்பின ராக்கி அவருக்குரிய முக்கியத்துவத்தையும் கௌரவத்தையும் ஜெயலலிதா வழங்கி இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை ஜெயலலிதா தவறவிட்டுவிட்டார்.
தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதியான வைகோவின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெறும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஜெயலலிதா தவறிவிட்டார்.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவ தில்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக்கழக ஆட்சிமன்றக்குழு அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் முடிவை எதிர்த்து முதன் முறையாக தீர்மானம் ஒன்றை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துள்ளது. வெற்றிபெற முடியாது என உறுதியாகத் தெரிந்ததால் போட்டியிடுவதில்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி மன்றக்குழு முடிவெடுத்துள்ளது எனக் கருதப் படுகிறது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானத்தை ஜெயலலிதா வரவேற் பாரா? அல்லது அண்ணாதிரவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளரை அறிவிக்குமா? என்பதை அறிய அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன.
இதேவேளை முதல்வரின் முடிவினால் அதிருப்தியடைந்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் துடன் இணைந்தால் அண்ணாதிராவிட முன்னேற்றக்கழக வேட்பாளரும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரும் வெற்றி பெறலாம் என சிலர் கருதினர்.
தனது பங்காளிக் கட்சிகளுக்கு முறை வைத்து சந்தர்ப்பம் வழங்கிவருகிறார் முதல்வர் கருணாநிதி. தனக்கு ஒரே இடம் வேண்டும் இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும் என்று டாக்டர் ராமதாஸ் எச்சரித்தும் அதற்கு அடிபணியாமல் மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடம் ஒதுக்கி உள்ளார் முதல்வர்.
டாக்டர் ராமதாஸ் மிரட்டுவதும் முதல்வர் அமைதியாக இருப்பதும் தமிழக அரசியலில் அவ்வப்போது நடைபெறும் காட்சிகள். இந்தமுறை அந்தக் காட்சி மாறி உள்ளது.
டாக்டர் ராமதாஸின் எச்சரிக்கையை முதல்வர் உதாசீனம் செய்துள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்பதை மறை முகமாக வெளிப்படுத்தி உள்ளார் முதல்வர்.

போட்டி போடும் அ.தி.மு.க.
முதல்வரின் மகள் நாடாளுமன்ற உறுப்பினரானதால் தனது மகனையும் நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு ராமதாஸ் முயற்சிக் கிறார் என்ற தகவலை அடியோடு மறுத்தார் டாக்டர் ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பேச்சாளரும், முதல்வரை அடிக்கடி விமர்சிப்பவருமான காடுவெட்டி குரு வுக்குத் தான் டாக்டர் ராமதாஸ் போராடுகிறார் என்ற தகவல் தெரிந்துதான் பாட்டாளி மக்கள் கட்சிக்கு முதல்வர் இடம் ஒதுக்கவில்லை என்ற கருத்தும் உள்ளது.
இதேவேளை காடுவெட்டி குருவுக்கு எதிராக பலாத்கார புகார் ஒன்று பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் ராமதாஸின் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சந்தர்ப்பம் வழங்குவதற்காக மாணவி ஒருவரை பலாத்காரம் செய்யமுயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளõர். இந்த இரண்டு சம்பவங்களினாலும் பாட்டாளி மக்கள் கட்சி மீதான மதிப்பு கொஞ்சம் குறைந்துள்ளது.
ஜின்னா, வசந்தி ஸ்டாலின் ஆகிய இருவரையும் திராவிட முன்னேற்றக்கழகம் வேட்பாளராக்கியுள்ளது. வசந்தி மீது ஏகப்பட்ட மோசடி வழக்குகள் உள்ளன. அவரை எப்படி முதல்வர் தேர்ந்தெடுத்தார் என்று பத்திரிகைள் விமர்சிக் கின்றன.
சுமார் 15 வங்கிகளில் மூன்று கோடி ரூபா மோசடி செய்தவர் நாடாளுமன்ற உறுப்பினராவதா? என்று பத்திரிகைகள் கேள்வி எழுப்பி உள்ளன. வழக்கில் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளேன். அவ்வழக்கு நிலுவையில் உள்ளது என சராசரி அரசியல்வாதிபோல் வசந்தி ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் பதிலை தமிழகம் எதிர்பார்த்துள்ளது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு; 16.03.2008

No comments: