Sunday, March 2, 2008

எழுத்தை ஆண்ட சுஜாதா

எழுத்தை ஆண்ட ஒரு சில எழுத்தாளர்களில் சுஜாதாவும் ஒருவர். உலகில் உள்ள மனிதனை ஒரு துறையில் அல்லது இரண்டு மூன்று துறைகளுக்குள் அடக்கிவிடலாம். ஆனால் சுஜாதாவோ உலகில் உள்ள சகல துறைகளிலும் தனி ஆளுமையை வெளிப்படுத்தி உள்ளார்.
அவ்வாறான சிறந்த எழுத்தாளர் கடந்த புதன்கிழமை மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வாசகர் உலகமே கண்ணீர் வடித்தது.
அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணனி, விளையாட்டு, ஆன்மீகம், பொது அறிவு, சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை, நாவல், திரைப்படம், தொலைக்காட்சி, சினிமா, வானொலி, பத்திரிகை என சகல துறைகளிலும் தனது ஆளுமையின் மூலம் இலட்சக்கணக்கான வாசகர்களை கட்டி வைத்த பெருமைக்குரியவர் சுஜாதா.
1935 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி சீனிவாசராகவன் கண்ணம்மா ஆகியோரின் மகனாகப் பிறந்தவர் ரங்கராஜன் என்னும் சுஜாதா தகப்பன் அடிக்கடி மாற்றம் பெற்றுச் சென்றதனால் ஸ்ரீ ரங்கத்தில் பாட்டியின் வீட்டில் தங்கிப் படித்தார் சுஜாதா.
சிறு வயதில் கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டினார். இவரது முதலாவது சிறுகதை சிவாஜி என்ற பத்திரிகையில் 1953 ஆம் ஆண்டு வெளியானது. 1962 ஆம் ஆண்டு குமுதம் சஞ்சிகையில் இடது ஓரத்தில் எனும் சிறுகதை வெளியானது. குமுதல் சஞ்சிகையில் ரா. கி. ரங்கராஜன் என்ற பிரபலமான எழுத்தாளர் வாசகர்களின் இதயத்தில் இருந்ததனால் இன் னொரு ரங்கராஜன் என்ற பெயர் குழப்பத்தை ஏற்படுத்தியது. தன் மனைவியின் பெயரான சுஜாதாவை தன் பெயருக்கு முன்னால் இணைத்தார். கணவனின் பின்னால் வரவேண்டிய மனைவியின் பெயர் ரங்கராஜனின் பெயருக்கு முன்னால் வந்தது. காலப் போக்கில் ரங்கராஜன் மறைந்து சுஜாதா என்ற மூன்றெழுத்து நிலைத்து விட்டது.
சுஜாதாவின் ஆக்கங்கள் வெளிவராத பத்திரிகை, சஞ்சிகைகள் இல்லை என்றே சொல்லலாம். சுஜாதாவின் எளிமையான உரை நடை வாசிக்கும் ஆற்றலைத் தூண்டியது.
ஸ்ரீரங்கத்தில் பாட்டியின் வீட்டில் படித்த சுஜாதா அங்குள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பின்னர் ஜோசப் கல்லூரியில் பி. எஸ். சி. இயற்பியல் படித்தார். அப்போது அவருடன் கூடப் படித்தவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் பிரபல விஞ்ஞானியுமான அப்துல் கலாம். டில்லி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த சுஜாதா 1970 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள பரத் எலக்றிகல்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பணிபுரிந்த போது பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
சுஜாதா தலைமையிலான குழுவினரே இந்தியாவில் வாக்களிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தது. வாக்களிப்பு இயந்திரத்தினால் இந்திய தேர்தல் முடிவுகள் ஒரு நாளிலேயே தெரிந்து விடக் கூடியதாக உள்ளது.
தினமணி, கதிர், குமுதம் ஆகிய சஞ்சிகைகளில் சுஜாதாவின் தொடர் கதைகள் வெளியான போது அந்தக் கதைகளுக்காகவே சஞ்சிகைகளின் விற்பனை அதிகரித்தது.
கணேஷ் வசந்த் என்ற பாத்திரங்கள் காலத்தால் அழியாதவை. கணேஷ் வசந்த் தொலைக்காட்சியிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் பாராட்டினைப் பெற்றார்கள்.
சுஜாதாவின் என் இனிய இயந்திரா, ஜுனோ, ஆகிய விஞ்ஞான கதைகள் பல
வாசகர்களை ஈர்த்தன. அறிவியல், விஞ்ஞானம், கணினி பற்றித் தெரிய வேண்டுமானால் ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அவை பற்றி அதிகம் தெரியாதவர்களும் இலகுவாக விளங்கக் கூடிய உரை நடையைத் தந்தவர் சுஜாதா.
சினிமாப் பட கதாநாயகன், கதாநாயகிகளின் கட் அவுட்களைப் பார்த்து ரசித்த தமிழக மக்கள் எழுத்தாளரான சுஜாதாவின் கட்அவுட்டைப் பார்த்து வியக்க வைத்த பெருமை ஆனந்த விகடனுக்குரியது. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கனவுத்
தொழிற்சாலை, பிரிவோம் சந்திப்போம் , பாகம் 1, பாகம் 11 ஆகியவற்றுக்கு சுஜாதாவின் கட்அவுட் சென்னை நகரில் மிளிர்ந்தன.
சுஜாதா எழுதிய காயத்திரி எனும் கதை முதன் முதலாக திரைப்படமாக வெளியானது.
ரஜினி, ஜெய்சங்கர் ஆகியோர் அப்படத்தில் நடித்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரியா என்னும் தொடரும் திரைப்படமாக வெளியாகிப் பெருவெற்றி பெற்றது. கமலின் விக்ரம் படத்துக்கு முதன் முதலில் கதை, வசனம் எழுதினார் சுஜாதா. ஏவுகணைத் தொழில்நுட்பத்தை தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
மணிரத்தினம், ஷங்கர் ஆகியோரின் ஆஸ்தான திரைக்கதாசிரியராக விளங்கினார்
சுஜாதா. முதல்வன், இந்தியன், ஜீன்ஸ், போய்ஸ், இருவர், ஆய்த எழுதி, கன்னத்தில் முத்தமிட்டால், சிவாஜி ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் சுஜாதா.
அவருடைய முதலாவது கதை வெளியான பத்திரிகை சிவாஜி. அவர் கதை வசனம் எழுதி கடைசியாக வெளியான படம் சிவாஜி. ஷங்கரின் ரோபோ படத்தை இயந்திரா எனத் தமிழாக்கினார். இயந்திரா படத்தின் கதை வசனத்தை எழுதி ஷங்கரின் கையில் கொடுத்து விட்டார்.
ஜூனியர் விகடனில்வெளியான ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வி பதில் சுஜாதாவின் ஆளுமையை உலகுக்கு பறைசாற்றியது. காலத்தால் அழியாத எழுத்துக்களுடன் சுஜாதா எம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார்.
ரமணி
வீரகேசரி 02032008

No comments: