Friday, March 28, 2008

குடும்பத்தை இணைக்கும் ஸ்டாலின்; பகையை மேலும் வளர்க்கும் அழகிரிஜெயலலிதாவின் பிறந்தநாள் விளம்பரங்கள் தினகரனிலும் முரசொலியிலும் பெரிய அளவில் வெளியானதால் குழம்பிப்போயிருந்த இரண்டு குடும்பங்களும் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் கொஞ்சம் நெருங்கி வந்துள்ளன. ஆனால் இந்த நெருக்கத்தை முதல்வரின் மகனான அழகிரி கொஞ்சமும் ரசிக்கவில்லை.
நகமும் சதையும் போலிருந்த கருணாநிதி குடும்பமும் மாறன் குடும்பமும் இவ்வளவு தூரம் பிரிந்திருக்கும் என்று எவரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
தினகரன் பத்திரிகையில் வெளியான கருத்துக் கணிப்பினால் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் கோபத்திற்கு இலக்கான மதுரையில் உள்ள தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டது. அன்று ஆரம்பித்த அந்தப் பகை ஒவ்வொரு பிரச்சினைகளிலும் விஸ்வரூபம் எடுத்து குடும்பத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்துகிறது.
கலைஞர் குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் இடையில் உள்ள பிரிவை மிகச் சரியாகப் பயன்படுத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தங்கள் தலைவி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விளம்பரங்களினால் தினகரன் முரசொலி ஆகிய பத்திரிகைகளுக்கு லாபத்தை அள்ளி வழங்கியது.
மாறன் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைய மாட்டார்கள் என்ற நம்பிக்கை கலைஞரிடம் உள்ளது. மாவட்டத்தில் செல்வாக்குள்ள பிரமுகர் ஒருவரை கட்சி தண்டித்தால் அல்லது கேள்வி கேட்டால் அவர் தனது ஆதரவாளர்களுடன் மாற்றுக் கட்சியில் இணைந்து விடுவார். அது பற்றிய விபரங்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பெரிதாக விளம்பரப்படுத்தப்படும்.
மத்திய அமைச்சராக இருந்து பல சாதனைகளைச் செய்த தயாநிதி மாறனின் மீது திராவிட முன்னேற்றக்கழகம் நடவடிக்கை எடுத்தபோது அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒதுங்கிவிட்டார். இன்னொரு கட்சியில் அவர் சேர்ந்திருந்தால் அது அவருக்கு மிகப் பெரிய விளம்பரமாக இருந்திருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஒரு சிலருக்கு தயாநிதி மாறன் தேவையற்றவராக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு தயாநிதி மாறனின் அணுகுமுறை மிகவும் பிடித்திருந்தது. ராகுல் காந்தியும் தயாநிதி மாறனின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து மாறன் குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என்பதில் மு.க. அழகிரி உறுதியாக உள்ளார். ஆனால் அவரது தம்பியான ஸ்டாலினின் எண்ணம் அதற்கு நேர்மாறாக உள்ளது.
குடும்பப் பிரச்சினை ஊடகங்களுக்குத் தீனியாகிறது. அதனால் எந்தப் பிரச்சினைகளையும் பெரிதாக்காது பேசித் தீர்க்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் விருப்பம். ஸ்டாலினின் பிறந்த நாளன்று கலாநிதிமாறன் முதல்வரை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்னர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அழகிரி மீண்டும் கோபாவேசமானார்.
மாறன் குடும்பத்துக்கும் அழகிரிக்கும் இடையேயான மோதல் கட்சிக்குள்ளும் ஊடுருவி குடும்பப் பிரிவை உண்டாக்கியது. குடும்பப் பகை காரணமாக கட்சியின் செல்வாக்கு சரியக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். கட்சியைப் பற்றிக் கவலையில்லை. குடும்பப் பகைதான் பிரதானம் என்று அழகிரி கூறுகிறார்.
கட்சிக்கும் குடும்ப உறவுக்கும் இடையே சிக்கித் தவிக்கிறார் முதல்வர். கழகத்தையும் தலைவரையும் அவமானப்படுத்தியவர்களை அரவணைத்த முதல்வர், மாறனின் பிள்ளைகளை மன்னிக்கத் தயங்குகிறார்.
கலாநிதிமாறன் வீடு தேடி வந்து கதைத்ததனால் பிரச்சினை தீர்த்து விடும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பில் மண் விழுந்துவிட்டது. மாறன் குடும்பத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற அழகிரியின் வாதம் கலைஞர் வீட்டில் ஓங்கி ஒலிக்கிறது. ஸ்டாலினின் வாதம் அங்கு மெல்லிய குரலில் வெளிப்படுகிறது.
டில்லி சபையின் ஆறு உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்து விட்டது. சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு ஐந்து உறுப்பினர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடமும் கிடைக்கும். இந்த நிலையில் தனது கட்சிக்கும் ஒரு இடம் வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இரண்டு இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு இரு இடங்களும் மாக்ஸிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பு ராமதாஸை திருப்திப்படுத்தவில்லை.
2004 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலின்போது காங்கிரஸுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் தலா ஒரு இடங்களை திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கியது. டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மேலவை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு மத்திய அமைச்சரானார். ஆகையினால் இம்முறை தோழமைக் கட்சியான மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தை வழங்க திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரசியலை ஆட்டிப்படைக்கும் தனக்கு வாய்ப்புத்தராது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியுடன் கூறியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அவ்வப்போது தமிழக அரசை உரசிப் பார்ப்பதும் அதற்கு அமைச்சர்களும் முதல்வரும் அறிக்கைவிடுவதும் வாடிக்கையானது. இம்முறை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனரின் விருப்பத்தை ஏற்க முடியாது நியாயமில்லாதது என்று ஆதாரங்களுடன் முதல்வர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
மேலவை உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தேவை. தமிழக சட்டசபையில் 18 உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு விட்டது.
ஆகையினால் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தோள் கொடுக்கும் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டிய இக்கட்டான நிலையில் தமிழக முதல்வர் உள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 60 உறுப்பினர்களும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறு உறுப்பினர்களும் உள்ளனர். இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு மாநில உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளலாம். மாநிலங்களவைத் தேர்தலினால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு;09.03.2008

No comments: