Tuesday, March 10, 2009

திரைக்குவராதசங்கதி 02


திரைப்படத்தின் மீது ஆர்வத்தினை ஏற்படுத்துவதில் புகைப்படம் மிக முக்கியமானது. தனது அபிமான நடிகர் அல்லது நடிகை எப்படிப்பட்ட உடையில் தோன்றுவார், அவர்களின் முகபாவம் எப்படி இருக்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குபவர் புகைப்படக் கலைஞர்.
சினிமாவுக்கு ஏற்ற முகமா என்பதை புகைப்படங்கள் தான் தீர்மானிக்கின்றன. புகைப்படக் கலைஞர் தனது திறமையை வெளிப்படுத்தினால் தான் திரைப்படத்தில் நடிக்க அனுமதி கிடைக்கும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முகம் திரைப்படத்துக்கு ஏற்றதாக இல்லை என்று தயாரிப்பாளர் பெருமாளிடம் சிலர் கூறினார்கள். புகைப்படம் எடுத்துப் பார்த்தால் முகம் தகுதியானதாக இல்லையா என்பது தெரிந்து விடும் என்பதனால் அந்தக் காலத்து புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான ஆர்.என். நாகராஜ் ராவ், சிவாஜி என்று புகழப்பட்ட கணேசனை புகைப்படம் எடுத்தார். கணேசன், சிவாஜியாக மாறுவதற்கு முதன் முதலில் புகைப்படம் எடுத்தவர் ஆர்.என். நாகராஜ்ராவ்.
நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. தனது முகம் சினிமாவுக்கு ஏற்ற முகம்தானா என்பதை அறிவதற்கு விரும்பினார். சிவாஜியின் எதிர்பார்ப்பை உணர்ந்த புகைப்படக் கலைஞரான ஆர்.என். நாகராஜ் ராவ், சிவாஜிக்கு தைரியமூட்டினார். முகம் தோற்றம் எல்லாம் சினிமாவுக்கு உகந்ததாக உள்ளது. சிறந்த முறையில்உங்களை படமெடுக்கிறேன் என்று சிவாஜியை உற்சாகப்படுத்தினார்.
ஆர்.என். நாகராஜ் ராவ் எடுத்த புகைப்படங்கள் மிகச் சிறப்பானதாக அமைந்தன. பாடல்கள் ஆட்சி செய்த தமிழ்த் திரைப்படத்தை வசனங்களால் மாற்றியமைத்த புதிய வரலாற்று நாயகனாக தோன்றினார் சிவாஜி.
ஒப்பற்ற நடிகர் ஒருவரை தமிழ்த்திரை உலகம் பெறுவதற்கு காரண கர்த்தாவாக இருப்பவர் ஆர்.என். நாகராஜ் ராஜ். நடிகர் திலகத்தை மட்டுமல்ல மக்கள் திலகத்தையும் பல கோணங்களில் படமெடுத்து புகழ்பெற்றவர். 1977 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தோன்றியது. நடிகனால் நாடாள முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்து தமிழக முதல்வரானார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகரைப் படமெடுத்த புகைப்படக் கலைஞர்கள் தமிழக முதல்வரைப் படமெடுக்க முண்டியடித்தனர்.தமிழக முதல்வர் தனது மதிப்புக்குரிய புகைப்படக்கலைஞரான ஆர்.என். நாகராஜ் ராவைத் தேடுகிறார். அங்கே அவர் இல்லை. முதல்வரின் ஆணைப்படி ஆர்.என். நாகராஜ் ராவ் அழைக்கப்படுகிறார். முதல்வரின் ஆசனத்தில் பல கோணங்களில் படமெடுத்தார். ஆர்.என். நாகராஜ்ராவ் தான் முதல்வரின் ஆசனத்தில் தன்னை முதல் முதலில் படமெடுக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் ஆசை நிறைவேறியது. அதன் பின்னர்தான் மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தமிழ்த்திரை உலகின் இரு பெரும் திலகங்களின் மதிப்பைப் பெற்ற ஆர்.என். நாகராஜ் ராவ் மங்கம்மா சபதம் என்ற படத்தின் மூலம் தான் முதன் முதலாக சினிமாவுக்கு அறிகமானார்.
சுதேச மித்திரன், ஹிந்து ஆகிய பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக வேலை செய்த அவரை திரை உலகில் அறிமுகப்படுத்தியவர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன். 1943 ஆம் ஆண்டு வெளியான மங்கம்மா சபதம் மூலம் திரை உலகில் நுழைந்த ஆர்.என். நாகராஜ் ராவ், 1985 ஆம் ஆண்டு ஆர்.எம். வீரப்பன் தயாரித்த காக்கிச் சட்டை என்ற படத்தில் கடைசியாகப் பணியாற்றினார்.
42 ஆண்டுகள் தமிழர் திரை உலகில் மங்காத புகழுடன் விளங்கினார் ஆர்.என். நாகராஜ் ராவ்.
திரைப்படத்தின் மிக முக்கியமான அம்சங்களில் புகைப்படமும் ஒன்று. திரைப்படத்தின் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் புகைப்படங்களை பத்திரிகைகளில்
வெளியிடுவது அன்றிலிருந்து இன்று வரை இருக்கும் நடைமுறைகளில் ஒன்று.
அந்தக் காலப் புகைப்படங்கள் கறுப்பு வெள்ளையாக இருக்கும். இன்றைய புகைப்படங்கள் நவீன உத்திகளைப் பயன்படுத்தி கிரபிக்ஸ்களை உள்ளடக்கியதாகவும் உள்ளன.
அந்தக் காலத்தில் சினிமாவில் நடிக்க விரும்பும் பெண்கள் ஹரிபாபுவிடம் மேக்கப் போட்டுக் கொண்டு நாகராஜ்ராவிடம் சென்று புகைப்படம் எடுப்பார்கள். நாகராஜ்ராவின் புகைப்படங்களின் மூலம் பல நடிகைகள் திரை உலகில் மிளிர்ந்ததனால் கைராசிக்காரர் என்ற பட்டப் பெயர் அவருக்கு கிடைத்தது.
நாகராஜ்ராவின் புகைப்படங்களை விளம்பரப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்த பெருமை ஜெமினி பட அதிபர் எஸ்.எஸ். வாசனுக்குரியது.
புஷ்பவல்லி என்ற நடிகையை "பேரழகி புஷ்பவல்லி' எனவும் காஞ்சனமாலாவை கண்ணழகி காஞ்சனாமாலா என்றும் விளம்பரப்படுத்தினார் எஸ்.எஸ். வாசன்.
தமிழ்த்திரை உலகில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்களில் ஒருவர் வெங்கடாச்சாரியர். நூற்றுக்கும் அதிகமான படங்களில் பணியாற்றி நடிக, நடிகைகளின் மதிப்பைப் பெற்றார். பிரபலமான நடிகையின் அரைநிர்வாண படமொன்று பலரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. வெங்கடாச்சாரியரால் எடுக்கப்பட்ட புகைப்படமென்பதால் பரபரப்பாகப் பேசப்பட்டது.
திரையுலகின் ஒழுக்கசீலரான வெங்கடாச்சாரியரா இப்படத்தை எடுத்தார் என்று பலரும் கேட்டனர். உண்மையிலேயே அப்படத்தை வெங்கடாச்சாரியர் எடுக்கவில்லை. பிரபல நடிகை போஸ் கொடுக்கவும் இல்லை. யாரோ ஒருவர் நடிகையின் முகத்தை அரை நிர்வாண படத்துடன் இணைத்து வெளியிட்டார். சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் செல்வாக்காக வெங்கடாச்சாரியர் இருந்ததனால் உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார்.
சுதேச மித்திரனில் புகைப்படக் கலைஞராக கடமையாற்றிய பி. ரங்கநாதனை திரைப்படத்துறைக்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்தவர் நடிகர் சகஸ்ரநாமம். இயற்கைக் காட்சிகளை மனம் லயிக்கும் வண்ணம் படம் பிடிப்பதில் இவர் வல்லவர்.
ரங்கநாதன் எடுத்த ஜெயலலிதாவின புகைப்படம் அந்தக் காலத்தில் பல பத்திரிகைகளில் அட்டைப்படமாக பிரசுரமாகியது. மோனாலிசாவின் புன்னகையை ஒத்த ஜெயலலிதாவின் கம்பீரப் புன்னகையை ரசிக்காதவர்களே இல்லை எனலாம்.
புகைப்படமெடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்று மூட நம்பிக்கை முன்னொரு காலத்தில் இருந்தது. இறந்த பின்னர் படம் எடுத்து சுவரில் தொங்கவிடுவார்கள். இறந்தவருக்கு அலங்காரம் செய்து கதிரையில் இருத்தி படம் எடுப்பார்கள் ஜெயம் கொண்டம் என்ற சிறிய ஊரில் இறந்த ஒருவரைப் புகைப்படம் எடுக்க அந்தக் கிராமத்தில் ஸ்டூடியோ வைத்திருத்த வேணு என்பவரை அழைத்துச் சென்றார்கள். கமராவை சரியாக வைக்காததனால் கலை இல்லாத புகைப்படம் கிடைத்தது. ஊர் மக்களுக்குப் பயந்து சென்னைக்கு ஓடிச் சென்றார். இயக்குநர் முக்தா சீனிவாசனைச் சந்தித்து போட்டோ கிராபராக வேலை செய்ய அனுமதிகேட்டார்.
வேணுவின் புகைப்பட கதையைத் தெரிந்த அரசியல்வாதி ஒருவர் முக்தா சீனிவாசனை எச்சரித்தார். தன்னை நம்பிவந்த வேணுவை கைவிட முக்தாசீனிவாசன் விரும்பவில்லை. அவரைப் பங்காளியாக்கி திரைப்படம் தயாரித்தார் முக்தாசீனிவாசன். அவரின் வழிகாட்டலில் திரைப்படத்துறைக்குள் நுழைந்த வேணுசெட்டியார் முள்ளும் மலரும் போன்ற தரமான படங்களை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கினார்.
ரமணி
மித்திரன்
01./08.03.2009

5 comments:

அமர பாரதி said...

//ஆர்.என். நாகராஜ்ராவ் தான் முதல்வரின் ஆசனத்தில் தன்னை முதல் முதலில் படமெடுக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் ஆசை நிறைவேறியது. அதன் பின்னர்தான் மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.//

அஹா!!! எவ்வளவு பெரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தி!!! ஒருவர் முதல்வரானால் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். அதை விட்டு விட்டு தன்னை விதம் விதமாக போட்டோ எடுத்துக்குக் கொள்வதை மட்டும் சிந்தித்திருக்கிறார் என்பது ஒரு சிறப்பு மிக்க செய்தி.

ஜோ / Joe said...

அருமையான தகவல் தொகுப்பு.

வண்ணத்துபூச்சியார் said...

எங்கிருந்து திரட்டுகிறீர்கள் இந்த செய்தியெல்லாம். எத்தனையோ புத்தகங்களில் இல்லாத செய்தியாக இருக்கிறதே..

வாழ்த்துகள்.

உலக சினிமா குறித்த என் வலையை பார்க்கவும்.

நிறை / குறை சொல்லவும்.

நன்றி.

வர்மா said...

வந்தியத்தேவன் உங்களை அறிமுகப்படுத்தினார்.உங்களின் தகவல்கள் புதியனவாக உள்ளன.நீங்கள் என்னைப்பாராட்டுகிறீர்கள்.சினிமாப்புத்தகங்கள் சஞ்சிகைகளிலிருந்து தகவல்கள் எடுக்கிறேன்
வர்மா

Anonymous said...

Please paste the famous photos of Jayalalitha too. Thanks...