Sunday, March 22, 2009

திரைக்கு வராத சங்கதி 5


முறைப்படி சங்கீதம் கற்காது தனது இசைஞானத்தாலும் குரல்வளத்தாலும் நாடக மேடையிலும் தமிழ் சினிமாவிலும் கோலோச்சியவர் வி.என்.சுந்தரம். தஞ்சாவூர் மாவட்ட விகலூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஆலாஸ்ய சுந்தரம் நாடக மேடையில் புகழ் பெற்றபோது விளம்பரங்களில் பெயரை பெரிதாக எழுதுவதற்காக வி.என். சுந்தரம் ஆனார்.திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்ற நாதஸ்வர ஜாம்பவான்களின் இசை ஜாலங்களை சுருதி பிசகாது தனது ஏழு வயதிலேயே பாடத் தொடங்கி விட்டார் வி. என். சுந்தரம். தங்கள் நாதஸ்வரத்தில் இருந்து வெளியாகும் உருப்படிகளை சிறுவன் சுந்தரம் பாடுவதைக்கேட்ட நாதஸ்வர மேதைகள் ஆச்சரியப்பட்டார்கள்.வி.என். சுந்தரத்தின் திறமையைக் கேள்விப்பட்ட நடராஜ கான சபா என்ற சிறுவர் நாடக கொம்பனியின் முதலாளி சுந்தரம்பிள்ளை சுந்தரத்தை தனது நாடகக் கொம்பனியில் சேர்த்தார். மாமிசமும், சைவமும் ஒரே இடத்தில் சமைக்கப்படுவதை சுத்த சைவனான சுந்தரத்தினால் ஜீரணிக்க முடியவில்லை. அதன் காரணமாக அங்கிருந்து விலகி மதுரை பாலவினோத சங்கீத கயா என்ற பாய்ஸ் கொம்பனியில் சேர்ந்தõர்.சிறந்த குரல் வளமும் எடுப்பான தோற்றமும் கொண்ட சுந்தரம் ராஜ பாட்டாக நடித்த பின்னாளில் இசைச்சித்தர் என்ற பட்டப் பெயருடன் பின்னணிப் பாடகராக சி.எஸ். ஜெயராமன் அவருக்கு ஜோடியாக பெண் வேடத்தில் நடித்தார்.
நாடகங்களில் மெய்மறந்து நடிகர்களின் மீது அபிமானம் கொண்டவர்களில் ஒருவரான கவிராயர் மதுரபாஸ்கரதாஸ், வி.என். சுந்தரத்தின் பரமரசிகரானார். சென்னையில் உள்ள இசைத்தட்டு நிறுவனம் இராமாயண நாடகத்தை இசைத்தட்டாக வெளியிடுவதற்கு ராமர் வேஷத்தில் பாட ஆள் தேவையென விளம்பரம் செய்தது. இதனை அறிந்த கவிராயர் மதுர பாஸ்கரதாஸ், வி.என். சுந்தரத்தையும் அழைத்துக் கொண்டு சென்னைக்குச் சென்றார். ராமர் வேஷத்தில் வேறு ஒருவர் பாடி விட்டார். வி.என். சுந்தரத்தின் பாடலைக் கேட்ட நிறுவன முகாமையாளர் எம்.என். ஐயங்கார் சுந்தரத்தை அங்கேயே தங்கும்படியும் வாய்ப்பு வரும் போது பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். அய்யங்கார் கூறிய வாய்ப்பு மார்க்கண்டேயர் என்ற படத்தின் மூலம் வி.என். சுந்தரத்துக்குக்கிடைத்தது. மார்க்கண்டேயர் படத்தில் நடிப்பதற்காக 16 வயதுடைய ஒருவரைத் தேடினார்கள். இதனை அறிந்த பாஸ்கரதாஸ் வி.என்.சுந்தரத்தை அழைத்துச் சென்றார். சுந்தரத்தின் பாடலைக் கேட்ட இயக்குநர் முருகதாஸன், படப்பிடிப்பாளர் ராம்நாத்தும் திருப்தியடைந்தார்கள்.
1934 ஆம் ஆண்டு வி.என். சுந்தரம் நடித்த மார்க்கண்டேயர் என்ற படம் வெளியானது. அதன் பின்னர் பட்டினத்தார், சந்தரஹாசன், சுந்தரமூர்த்தி நாயனார், கண்ணப்ப நாயனார், சங்கராச்சாரியார், சுபத்ரா அர்ஜுன மணிமான், ராஜசூயம், தள அமராவதி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
பாடல்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வசனங்கள் புகழ் பெற்ற காலத்தில் வி.என். சுந்தரத்துக்கு சினிமா வாய்ப்பு இல்லாமல் போனது.
கதாநாயகனான வி.என். சுந்தரம் பின்னணிப் பாடகரானார். மணமகள்,தெனாலிராமன், கூண்டுக்கிளி, மாலையிட்ட மங்கை, ஒளவையார் ஆகிய படங்களில் பின்னணி பாடினார்.கல்யாணம் பண்ணிப்பார்,பிரம்மச்சாரி, தெனாலிராமன்,வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய பாடங்களில் சிவாஜிக்காக பின்னணி பாடினார்.
1964 ஆம் ஆண்டு பாலையாவுக்காக பின்னணி பாட சந்தர்ப்பம் கிடைத்தது. மெட்டுப் படிக்காததால் பாமா விஜயம் படத்தில் இடம்பெற்ற வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பாடலில் வாயசைக்கும் நான்கு நடிகர்களுக்கும் ரி.எம். எஸ்.பின்னணி பாடினார்.திரை உலக வாழ்வு முடிந்ததும் நாடகங்களில் ரி.ஆர்.மகாலிங்கத்துக்கு ஜோடியாக பெண்வேடத்தில் நடித்தார்.
ரமணி
மித்திரன் 22/ 03 /2009

No comments: