Sunday, March 15, 2009

தமிழக முதல்வரை தடுமாற வைத்தஜெயலலிதாவின் உண்ணாவிரதம்



இலங்கைப் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டாது புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவந்த ஜெயலலிதா திடீரென இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்ததால் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்திய மத்திய அரசையும், தமிழக அரசையும் மிகக் கடுமையாகத் தாக்கிவரும் வைகோவும், தா. பாண்டியனும், ஜெயலலிதாவுடன் கைகோர்த்துக் கொண்டு புதிய கூட்டணியை அமைத்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கத்தையும், தமிழக அரசாங்கத்தையும் எதிர்ப்பதில் ஜெயலலிதாவும், வைகோவும், தா. பாண்டியனும் ஒருமித்த குரல் கொடுத்து வந்தாலும், இலங்கைப் பிரச்சினையில் வைகோவும், தா.பாண்டியனும் ஒரேகருத்துடன் செயற்படுகிறார்கள். இவர்களின் கருத்துடன் இதுவரை ஒத்துப்போகாத ஜெயலலிதா இலங்கைத் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுத் தேர்தலுக்காக இந்தியா தயாராகிவருகிறது. தமிழக தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சினையும் மிக முக்கிய இடத்தை வகிக்கப்போகிறது. இந்திய அரசின் சாதனை அது விட்ட தவறுகள், பொருளாதார முன்னேற்றம், வீழ்ச்சி என்பவற்றுடன் இலங்கைப் பிரச்சினையும் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கப்போகிறது.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யாமல் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுத உதவி செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்ற பிரசாரம் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதா இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்ததும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உண்டியல் மூலம் நிதிசேகரித்ததும் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது. 24வருடங்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதா மீண்டும் உண்ணாவிரதம் இருந்தார்.
ஜெயலலிதாவின் உண்ணா விரதத்தின் பின்னணியில் பொதுத் தேர்தல் இருப்பது உண்மை என்றாலும் வைகோவும் தா.பாண்டியனும் தாம் எதிர்பார்த்ததை நிறைவேற்றிவிட்டனர் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு செய்யப்படும் சகல உதவிகளும் புலிகளுக்கு செய்யும் உதவியாகவே கணித்து வந்த ஜெயலலிதா மனம் மாறி உண்ணாவிரதம் இருந்தமை தமிழக முதல்வருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோ, சுப்பிரமணிய சுவாமி ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் மிக முக்கிய ஆலோசகர்களாக இருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்ப்பதில் இவர்கள் இருவரும் முன்னணியில் உள்ளனர். சோ, சுப்பிரமணிய சுவாமி ஆகிய இருவரின் விருப்பத்துக்கு மாறாக ஜெயலலிதா நடந்து கொண்டமை வைகோ, தா. பாண்டியன் ஆகிய இருவருக்கும் கிடைத்த வெற்றியாகவே கருத வேண்டியுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்கள் கண்டு கொதித்தெழுந்த முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு பல தடவை எச்சரிக் கைவிடுத்தார். அவர் விடுத்த எச்சரிக்கை எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாகியதால் அதனைச் சமாளிப்பதற்காக பல அறிக்கைகளை வெளியிட்டு தனது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொண்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்தில் நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது. தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு தமிழ் மக்களுக்குரிய நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் அக்கட்சிகளின் தொண்டர்களிடையே உள்ளது. இப்படிப்பட்ட தொண்டர்களின் வாக்குகள் தேர்தலில் இடம்மாறும் சந்தர்ப்பம் உள்ளது. இது திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
இப்படிப்பட்ட தொண்டர்கள் நிச்சயமாக அண்ணாதிரõவிட முன்னேற்றக்கழகத்துக்கு வாக்களிக்கமாட்டார்கள். இவர்களின் வாக்குகளால் பாரதீய ஜனதாக் கட்சி பயனடையும் வாய்ப்பு உள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் இலங்கைத் தமிழ் மக்கள் இவ்வளவு தூரம் அல்லல்பட்டிருக்கமாட்டார்கள் என பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தப் பிரசாரம் தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழ் மக்கள் படும் அவலங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுடன் மாற்றுக்கருத்துள்ள வைகோவும், தா.பாண்டியனும் கூட்டணி சேர்ந்ததை விமர்சித்தவர்கள் இப்போது அடங்கிப்போயுள்ளனர்.
பொதுத் தேர்தலில் வெல்லப் போகும் கூட்டணி எது எனத் தெரியாது டாக்டர் ராமதாஸ் தடுமாறுகிறார். பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழிந்த நிலையிலும் முடிவெடுக்க முடியாது டாக்டர் ராமதாஸ் தடுமாறுகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியினுள் இரண்டு கருத்து இருப்பதால்தான் டாக்டர் ராமதாஸ் தடுமாறுகிறார் என்று சில செய்திகள் கசிந்துள்ளன. ஜெயலலிதாவுடன் இணைய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு போன்றோர் விரும்புவதாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தொடர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி விரும்புவதாகவும் தெரிகிறது. மாற்றுக் கருத்துடைய குழுவுக்கு மகன் தலைமை தாங்குவதால் டாக்டர் ராமதாஸ் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றே கருதப்படுகிறது.
திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியில் இருப்பதாக திருமாவளவன் கூறுகிறார். காங்கிரஸை எதிர்ப்பவர்களுக்கும், காங்கிரஸ் கொடியை எரிப்பவர்களுக்கும் கூட்டணியில் இடம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
இதன் காரணமாக திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியில் எஞ்சியுள்ள திருமாவளவனும் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்தலைச் சந்திக்க முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் தயாராகிவிட்டனர்.அவர்களின் பின்னால் உள்ளவர்களும் தம்மை வெளிப்படுத்தி உள்ளனர். டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.பேச்சுவார்த்தை வெற்றி பெற்ற பின்னர் உத்தியோகபூர்வமாக தமது முடிவை அறிவிப்பார்கள்.
வர்மா

வீரகேசரி வாரவெளியீடு
15 03 2009

No comments: