தமிழக முதல்வர் கைவிட்டதால்
ஜெயாவிடம் சரணடைந்த ராமதாஸ்
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகக் கட்சிகள் அனைத்தும் தயாராகிவிட்டன. யாருடன் கூட்டணி என்று பகிரங்கமாக அறிவிக்காத டாக்டர் ராமதாஸும் விஜயகாந்தும் தமது முடிவை அறிவித்து விட்டனர்.
தமிழகத் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைத்த டாக்டர் ராமதாஸை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் கைவிட்டுவிட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தøலயும் சட்ட மன்றத் தேர்தலையும் சந்தித்த டாக்டர் ராமதாஸ் முதல்வர் கருணாநிதியுடனான முரண்பாடுகளின் காரணமாக கூட்டணியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டாலும் மத்தியில் காங்கிரஸின் தலைமையில் ஆட்சியில் இருப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கைகள் விடுத்து தனது இருப்பை வெளிக்காட்டினார்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பலமான கூட்டணியில் சேர்வதற்கு தமிழகக் கட்சிகள் அனைத்தும் தீவிரம் காட்டின. அதேவேளை, டாக்டர் ராமதாஸும் விஜயகாந்தும் கூட்டணி பற்றி வெளிப்படையாகப் பேசாது மௌனம் காத்தனர்.
தனது கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்குவது யார் என்று பார்ப்பதிலேயே டாக்டர் ராமதாஸ் அதிக அக்கறை காட்டினார். காங்கிரஸின் கொள்கை பிடிக்காது இடதுசாரிகள் கூட்டணியை விட்டு வெளியேறியதால் அந்த இடத்தை நிரப்ப டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள்கட்சியின் வரவை தமிழக முதல்வர் கருணாநிதி எதிர்பார்த்தார்.
கூட்டணியில் இருந்து முறைகேடாக வெளியேற்றப்பட்டதனால் முதல்வர் கருணாநிதியின் அழைப்பை பாட்டாளி மக்கள் கட்சி பெரிதுபடுத்தவில்லை. டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்பு மணி மத்திய அரசில் அமைச்சராக இருப்பதனால் அடுத்த தேர்தலின் போதும் பாட்டாளி மக்கள் கட்சி தம்முடன் தான் இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்த்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் முடிவை அறிவதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பெரிதும் முயற்சி செய்தனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் பிடி கொடுக்காது பொதுக் குழு முடிவு செய்யும் என்று கூறிவிட்டார்.
காங்கிரஸ் பொறுமை காப்பது போல் தமிழக முதல்வர் பொறுமையாக இருக்கவில்லை. தனது கட்சியின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் பெயரை முதல்வர் கருணாநிதி அதிரடியாக வெளியிட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் அதில் இருக்கவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியை சேர்க்கக் கூடாது என்பதில் முதல்வர் கருணாநிதி உறுதியாக இருப்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலைச் சந்திக்கப் போகிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை முதல்வர் கருணாநிதிக்கு இருந்தது.
கொள்கை என்பது புறந்தள்ளப்பட்டு அதிக இடம் தருபவர்களுடன் கூட்டணி சேர்வது என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருந்துள்ளது. தமிழகத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கூட்டணியில் இடம்பிடித்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் தாவியதால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி தோல்வியடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால், விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் இந்தக் கணக்கை மாற்றி அமைக்கும் சக்தியைப் பெற்றுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தனித்து தேர்தலைச் சந்தித்த விஜயகாந்த் தேர்தலில் படுதோல்வியடைந்தாலும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வெற்றி வாய்ப்புக்களைத் தவிடு பொடியாக்கினார்.
விஜயகாந்தை தமது அணிக்குள் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சி பகீரதப் பிரயத்தனம் செய்தது. காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந்துக்கும் விருப்பம்தான். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந்த் விரும்பவில்லை.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் தான் என பிரசாரம் செய்யும் விஜயகாந்த் இன்னொரு முதல்வரின் தலைமையில் தேர்தலைச் சந்திக்க விரும்பவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மீது வெறுப்படைந்திருப்பவர்களின் ஒரே தெரிவு விஜயகாந்த்தான். அவர்களின் வாக்குகளை நம்பியே விஜயகாந்த் தேர்தøலச் சந்திக்கிறார். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டதும் பாதிக்கப்பட போவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
இடதுசாரிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் பலத்தை நம்பியே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலை சந்திக்கிறது. இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசும், தமிழக அரசும் கண் மூடிக் கொண்டிருந்ததையே இடதுசாரிகளும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தமது பிரசாரத்தில் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இலங்கைத் தமிழர்களின் துயர் தீர்ப்பதற்காக ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதனையும் செய்யவில்லை. என்றாலும் இடதுசாரிகளினதும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் ஆதரவில் வெற்றி பெற்று விடலாம் என்று ஜெயலலிதா கனவு காண்கிறார்.
இவர்களின் பிரசாரத்தை முறியடிப்பதற்காகவே முதல்வர் கருணாநிதி தனது பக்கத்தில் திருமாவளவனை வைத்திருக்கின்றார். இலங்கைத் தமிழர்களுக்காக உரத்துக் குரல் கொடுக்கும் திருமாவளவனின் பதிலடி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக்கூட்டணிக்கு பலத்த அடியாய் இருக்கும்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் கூட்டணியே தமிழகத்தில் அதிகமான தடவைகள் வெற்றி பெற்றுள்ளது. அந்தச் சாதனை இம்முறையும் தொடர்வது சந்தேகமாக உள்ளது. தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளன.
ராஜிவ்காந்தி கொல்லப்பட்டபோது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வியடைந்தது. ஆனால் அக்கட்சியின் வாக்கு விகிதம் குறையவில்லை.
ஆனால் இம்முறை புதிய கூட்டணிகள் புதிய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கின்றன. கொள்கைகளும் சாதனைகளும் பின் தள்ளப்பட்டுள்ளன. உணர்ச்சிகளும் அவலங்களும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிப்பதில் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படலாம். நடுநிலையாளர்கள் யாரைத் தெரிவு செய்வார்கள் என்பதும் புதிராக உள்ளது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 29/03/2009
No comments:
Post a Comment