இந்தியாநியூசிலாந்து அணிகளுக்கிடையே ஹமில்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவின் போது இந்திய அணி விக்கட் இழப்பின்றி 29 ஓட்டங்கள் எடுத்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி நியூசிலாந்தை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது 78.2 ஓவர்களில் 279 ஓட்டங்களை எடுத்தது.
அணித் தலைவர் வெட்டோரி 118 ஓட்டங்களும் ரைடர் 102 ஒட்டங்களும் எடுத்தனர். உதிரிகளாக இந்திய வீரர்கள் நான்கு ஓட்டங்களை விட்டுக் கொடுத்தனர். நியூ ஸிலாந்தின் ஏனைய ஒன்பது வீரர்களும் 55 ஓட்டங்களை மட்டுமே எடுத்தனர்.
மைக்ரொஸ் குப்பில் ஜோடி துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. சஹீர்கானின் பந்தை ட்ராவிட்டிடம் பிடிகொடுத்த குப்பில் 14 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய பிளையினும் சஹீர்கானின் பந்தை டோனியிடம் பிடிகொடுத்து ஓட்டமெதுவும் எடுக்காது வெளியேறினார்.
நியூசிலாந்து 17 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது இரண்டு விக்கட்டுகளை இழந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மக்ரொஸ் ஸுடன் ரவ்லர் ஜோடி சேர்ந்தார். இந்த இணையும் அதிக நேரம் நீடிக்கவில்லை. இஷாந்த் சர்மாவின் பந்தை ஷேவாக்கிடம் பிடி கொடுத்து மக்ரொஸ் 12 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். 18 ஓட்டங்கள் எடுத்த ரவ்லர் இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
ரைடருடன் ஜோடி சேர்ந்த பிரங்ளின் ஓட்டமெதுவும் எடுக்காது இஷாந்த் சர்மாவின் பந்தை டோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 51 ஓட்டங்களுக்கு நியூசிலாந்து ஐந்து விக்கட்டுகளை இழந்து தடுமாறியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கலம் மூன்று ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பட்டேலின் பந்தை லக்ஷ்மனிடம் பிடி கொடுத்து இவர் ஆட்டம் இழந்தபோது நியூசிலாந்து அணி 60 ஓட்டங்களையே எடுத்திருந்தது. ஆறு விக்கட்டுகளை குறைந்த ஓட்டங்களில் இழந்தபோது தடுமாறிய நியூசிலாந்துக்கு ரைடரும் வெட்டோரியும் கைகொடுத்தனர்.
இவர்கள் இருவரும் சதமடித்து ஏழாவது இணைப்பாட்டத்தில் 186 ஓட்டங்களை எடு த்து நியூசிலாந் தின் கௌரவத்தைக் காத்தனர். நியூசிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை யை உயர்த்துவதற்காக இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடினர்.
பட்டேலின் பந்தை டோனியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்த வெட்டோரி 164 பந்துகளில் இரண்டு சிக்ஸர் 14 பௌண்டரி அடங்கலாக 118 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூசிலாந்து 246 ஓட்டங்களை எடுத்திருந்தபோது ஏழாவது விக்கட்டை இழந்தது. அடுத்துகளமிங்கிய மில்ஸ் ஓட்டமெதுவும் எடுக்காது பட்டேலின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். ஒபிரெயின் எட்டு ஓட்டங்களில் ஹர்பஜனின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
நியூசிலாந்தின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதற்காக இறுதி வரை போராடிய ரைடர் 102 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 162 பந்துகளுக்கு முகம் கொடுத்து 14 பௌண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்கள் எடுத்த ரைடர் இஷாந்த் சர்மாவின் பந்தை லக்ஷ்மனிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.
19.2 ஓவர்களில் பந்து வீசிய இஷாந்த் சர்மா 72 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார்.
18 ஓவர்கள் பந்து வீசிய பட்டேல் 66 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார். 16 ஓவர்கள் பந்து வீசிய சஹீர்கான் 70 ஓட்டங்களைக் கொடுத்து இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.
ஹர்பஜன் சிங் 22 ஓவர்கள் பந்து வீசி 57 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டையும் மூன்று ஓவர்கள் பந்து வீசிய ஷெவாக் விக்கட் எதனையும் வீழ்த்தவில்லை. 18 ஓட்டங்களைக் கொடுத்தார்.
இந்திய அணி ஏழு ஓவர்களுக்கு துடுப்பெடுத்தாடியது. கம்பீர் ஆறு ஓட்டங்களுடனும் ஷெவாக் 22 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment