Sunday, March 8, 2009

விபரீத விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது லாகூரில் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ள ப்பட்ட கொடூரத் தாக்குதலினால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. அது "தீவிரவாதிகளின் சொர்க்கபுரி' என்று கூறிய அவுஸ்ரேலிய வீரர்கள் அங்கு சென்று விளையாட மறுப்புத் தெரிவித்துள்ளனர். அண்டை நாடான பாகிஸ்தான் மீது கறைபடிவதை விரும்பாத இந்தியாவும், இலங்கையும் பாகிஸ்தானில் பயங்கரவாதமும் இல்லை, வன்முறையும் இல்லை என்பதை கிரிக்கெட் உலகுக்கு தெரியப்படுத்துவதற்காக அங்கு சென்று விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுத்து வந்தன.
இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் ரீதியாக மோதிக்கொண்டாலும் தமது நல்லெண்ண நடவடிக்கையாக கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தின. இந்திய அணி பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் அணி இந்தியாவிலும் விளையாடி கிரிக்கெட் வேறு அரசியல் வேறு என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டின.
கடந்த ஆண்டு மும்பை மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்öகட் உறவையும் முறித்துக் கொண்டது. மும்பைத் தாக்குதல்களினால் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இரத்தாகியது.
பாகிஸ்தான் மீது நம்பிக்கை வைத்திருந்த இந்தியாவும் கிரிக்கெட் விளையாட மறுத்ததனால் பாகிஸ்தானை காப்பாற்ற இலங்கை முன்வந்தது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் அவ்வப்போது தலைதூக்கினாலும் கிரிக்கெட் வீரர்கள் அதனால் பாதிக்கப்படவில்லை.
லாகூரில் இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலால் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். இந்த அதிர்ச்சியிலிருந்து வீரர்கள் இன்னமும் மீளவில்லை. பாகிஸ்தானில் குண்டு வெடிப்புத் தாக்குதல் நடைபெற்றால் உடனடியாக ஏதாவது ஓர் இயக்கம் அதற்கு உரிமை கோரி விடும்.
இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று நாட்கள் கடந்தும் இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இதே
வேளை, இத்தாக்குதலை நடத்தியது யார் என்பதை பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவு இது வரை கண்டுபிடிக்கவில்லை.
குண்டு வெடிப்பு புரட்சி, இராணுவ ஆட்சி என்பனவற்றுக்கு பழகிப் போன பாகிஸ்தான் மக்கள் கிரிக்கெட் மீது மிகுந்த பற்று வைத்திருக்கிறார்கள். இலங்கை அணி மீதான தாக்குதலின் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் விளையாடுவதற்கு எந்த நாடும் முன்வரப் போவதில்லை. இது பாகிஸ்தான் மக்களின் மீது விழுந்துள்ள பலமான அடியாகும். இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கொதித்தெழுந்த பாகிஸ்தான் மக்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகளின் விபரீத விளையாட்டு பாகிஸ்தான் மக்களை பாதித்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடும் பாகிஸ்தான், கிரிக்கெட்டை காப்பாற்ற என்ன செய்யப் போகிறது என்பதை அறிய கிரிக்கெட் உலகம் காத்திருக்கிறது. ரமணி

மெட்ரோநியூஸ்
06 03 2009

No comments: