Wednesday, September 23, 2009

55 ஓட்டங்களால் இலங்கை வெற்றி


தென்னாபிரிக்காவில் நடைபெறும் மினி உலகக் கிண்ண தொடரில் முதலாவது போட்டியில் ஒருநாள் போட்டியின் முதல்வனான தென்னாபிரிக்காவை டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 55 ஓட்டங்களினால் வீழ்த்திய இலங்கை முதலாவது வெற்றியைப் பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 319 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சனத் ஜயசூரிய, டில்ஷான் ஜோடி களமிறங்கியது. ஸ்டைனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத சனத் ஜயசூரிய எல்.பி.டபிள்யூ முறையில் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
டில்ஷானுடன் அணித் தலைவர் சங்ககார இணைந்தார். இவர்கள் இருவரும் இணைந்து தென்னாபிரிக்க வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்தனர். இவர்கள் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய தென்னாபிரிக்க வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாயின. தென்னாபிரிக்க அணிக்கு அச்சுறுத்தலைக் கொடுத்த ஜோடியை டுமினி பிரித்தார். டுமினியின் பந்தில் 54 ஓட்டங்கள் எடுத்த சங்ககார ஆட்டமிழந்தார். டில்ஷான், சங்ககார ஜோடி 158 ஓட்டங்கள் எடுத்தது.
தென்னாபிரிக்க அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த டில்ஷான் ஸ்ரெயினின் பந்தை மோர்கலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 92 பந்துகளுக்கு முகம் கொடுத்த டில்ஷான் 16 பௌண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கலாக 106 ஓட்டங்களை எடுத்தார். ஒருநாள் அரங்கில் மூன்றாவது சதத்தை எட்டினார் டில்ஷான்.
அடுத்து களமிறங்கிய மஹேல, சமரவீர ஜோடியும் தம் பங்குக்கு தென்னாபிரிக்க வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. இந்த ஜோடியை பானல் பிரித்தார். பொறுப்புடன் விளையாடிய மஹேல பானலின் பந்தை டுமினியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
61 பந்துகளுக்கு முகம் கொடுத்த மஹேல எட்டு பௌண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கலாக 77 ஓட்டங்களை எடுத்தார். இவர்கள் இருவரும் இணைந்து 116 ஓட்டங்கள் எடுத்தனர். மஹேலவுடன் இணைந்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய சமரவீர 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்தியூஸும் கண்டம்பியும் ஏமாற்றி விட்டனர். மத்தியூஸ் 15, கண்டம்பி 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஸ்டெயின், பானல் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளையும் டுமினி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
320 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா 37.4 ஓவர்களில் ஏழு விக்கட்களை இழந்து 206 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 55 ஓட்டங்களினால் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அம்லா இரண்டு ஓட்டங்களுடன் மென்டிஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தலைவர் ஸ்மித் மிகுந்த போராட்டத்தின் பின்னர் 58 ஓட்டங்களில் மென்டிஸின் பந்து வீச்சில் வெளியேறினார். தென்னாபிரிக்காவின் வெற்றிக்காக
போராடிய கலிஸ், மெண்டிஸின் பந்தை மத்தியூசிடம் பிடிகொடுத்து 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பௌச்சர் 26 ஓட்டங்கள் எடுத்தார். மோர்க்கல் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்கள் எடுத்தார்.
மென்டிஸ் மூன்று விக்கட்டுகளையும் மலிங்க, மத்தியூஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற
உலகக் கிண்ணம், ஐ.சி.சி. டுவென்ரி 20 ஆகிய போட்டிகளில் தென்னாபிரிக்கா இதுவரை கிண்ணத்தைக் கைப்பற்றவில்லை.

No comments: