Sunday, September 27, 2009

ஜெயலலிதாவின் போராட்டத்துக்குவழிவகுத்த தமிழக அரசாங்கம்


தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக பெரு வளர்ச்சி அடைந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையையும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர் என்ற விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளார் ஜெயலலிதா.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கையில் எடுத்த ஜெயலலிதா, தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மறந்து விட்டார். தமிழக இடைத் தேர்தலைப் புறக்கணித்ததன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பதை வெளிப்படுத்தினார்.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா அதிக அக்கறை காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நடப்பதை அறிவதற்காக தமிழக நாடாளுமன்றக் குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவுற்று நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் தமிழக மீனவர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை.
தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று கூறப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன. தம் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை நிறுத்த இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காத நிலையில் ராமேஸ்வர மீனவர்களுக்காக ஜெயலலிதா குரல் கொடுத்துள்ளார். தமிழக அரசாங்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் அனைத்தும் பிசுபிசுத்துப் போனதால் இராமேஸ்வர மீனவர்களுடன் கை கோர்த்துக் கொண்டு புதியதொரு வியூகத்தை வகுத்துள்ளம்ர் ஜெயலலிதா.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தோல்வி, தமிழக இடைத் தேர்தலைப் புறக்கணித்தமை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து சில முக்கிய பிரமுகர்கள் வெளியேறியமை, ஒரு சில முக்கிய பிரமுகர்கள் தற்போது ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டமை ஆகியவற்றினால் சோர்வடைந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் தற்போது சுறுசுறுப்படைந்துள்ளனர்.
அரசியலில் சற்று சோர்வடைந்திருந்த ஜெயலலிதா தற்போது உற்சாகத்துடன் போராடுவதற்கான புதிய கதவை தமிழக அரசும் மத்திய அரசும் சேர்ந்து திறந்துள்ளன.
தமிழகத்துக்கு விஜயம் செய்த ராகுல் காந்தி, காங்கிரஸில் இணையுமாறு ரஜினிக்கும் விஜய்க்கும் அழைப்பு விடுத்தார். அவர்கள் இருவரும் அதனை நாசூக்காக மறுத்து விட்டனர். அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் ரஜினியிடமும் விஜயிடமும் உள்ளது. அதற்குரிய சந்தர்ப்பம் அமையாததனால் இருவரும் தமது அரசியல் ஆசைகளை மூட்டை கட்டி வைத்துள்ளனர்.
ரஜினிக்கும் விஜய்க்கும் ராகுல் காந்தி அழைப்பு விடுத்தபோது அமைதியாக இருந்த இளங்கோவன் பின்னர் சினிமா கவர்ச்சியை காங்கிரஸ் கட்சி நம்பவில்லை என்று கூறியதால் ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் விசனமடைந்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து இருக்கின்றனர். அரசியலின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்தான் உள்ளது என்பதை அனுபவ மூலம் கண்டறிந்த ராகுல் காந்தி, தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். தமிழக இளைஞர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி அவர்களது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
சினிமாக் கவர்ச்சியை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என்ற இளங்கோவனின் கூற்று ரஜினியையும் விஜயையும் மறைமுகமாகத் தாக்கியதால் தமிழக காங்கிரஸில் உள்ள விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனது அபிமான நடிகரா? அரசியல் கட்சியா? என்ற கேள்வி எழும்போது அதிகமான இளைஞர்கள் தனது அபிமான நடிகரின் பக்கமே செல்வார்கள்.
இளங்கோவனின் பேச்சு தமிழக காங்கிரஸுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக காங்கிரஸில் உள்ள விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இளங்கோவனின் காட்டமான அறிக்கையினால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்சியா? நடிகனா? எனும் முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு அவர்களை இளங்கோவன் தள்ளியுள்ளார். தமிழக இளைஞர்களின் எதிர்ப்பை எதிர்நோக்கியுள்ள இளங்கோவன், கட்சியை வளர்ப்பதற்குரிய ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதனையும் கூறவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.
வர்மா
வீரகேசரிவாரமலர்27/09/09

No comments: